தமிழ்த்தேசியத்தை அழித்த மகிந்தாவை மீண்டும் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள் சிங்கள தேசம்
[தமிழக நேரம் : January 31st, 2010 at 00:29]
மகிந்த ராஜபக்ச இரண்டாவது தடவையாக ஜனாதிபதியாக தேர்ந்தெடுத்திருக்கப்பட்டிருக்கின்றார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா 4,173,185 (40.15 சத வீதம்) பெற்று தோல்வியைத் தழுவியுள்ளார். ஆக மகிந்த 6,015,934 (57.88 சத வீதம்) வாக்குகள் பெற்று ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கபட்டுள்ளார்.
தமிழீழ தேசத்திலோ மிகக்குறைந்தளவானவர்கள் மட்டுமே வாக்களித்துள்ளார்கள். அதிலும் அவர்கள் பொன்சேகாவிற்கே அதிகப்படியாக வாக்களித்துள்ளார்கள். மகிந்த தமிழ் ஒட்டுக்குழுக்களின் ஆதரவோடு இந்த தேர்தலில் நின்றார். அதிலும் டக்லஸ் தேவானந்தா, சித்தார்த்தன், கருணா மற்றும் பிள்ளையான் குழுக்களின் ஆதரவோடு களத்தில் நின்றார். இக்குழுக்களின் ஆதிக்கம் மேலோங்கியிருந்த வடகிழக்கு பகுதிகளில் மகிந்தாவிற்கு கிடைத்த வாக்குகள் மிகக் குறைவானதே. இதிலிருந்து தெரிகிறது தமிழர் ஒரு போதும் மகிந்த அரசாங்கத்தின் கடந்த கால தமிழர் விரோத நடவடிக்கைகளை விரும்பவில்லையென. அத்துடன் தமிழர் ஒரு போதும் இந்த தமிழ் ஒட்டுக்குளுக்களையும் ஒரு போதும் நம்பவில்லை.
தமிழ் மக்கள் தெளிவாக இந்த தேர்தலில் வாக்களித்துள்ளார்கள். தமிழ் தேசியம் புலிகளின் பின்னால் நின்று 2005 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலை புறக்கணித்தார்கள் என்றால் அது உண்மை. ஆனால் இந்த தேர்தலை தமிழர் தரப்பினர் புறக்கணிக்காமல் பொன்சேகாவுக்கு வாக்களிக்க சொன்னார்கள் காரணம் இந்த இரண்டு வேட்பாளர்களும் தமிழர்களை கொன்ற கொலைகாரர்களாய் இருப்பினும் களத்தில் நின்ற தளபதியை விட ஆணையிட்ட ஜனாதிபதியே தமிழின படுகொலையின் முதலாவது குற்றவாளியாக தமிழர் தரப்பு பார்ப்பதில் எந்தவித ஐயமும் இல்லை. ஆக தமிழர் ஒரு ஆட்சி மாற்றத்தை எதிர்பார்த்தார்கள் என்பது உண்மை. இருப்பினும் மகிந்த சிங்கள தேசத்தின் ஆசியோடு மீண்டும் அரியாசனம் ஏறியுள்ளார்.
சிங்களத் தேசத்தின் பிரதிநிதி மகிந்த
இன்னும் ஒரு வருடம் ஜனாதிபதியாக இருக்க சட்டம் இருந்தும் மகிந்த தேர்தலை கடந்த வருட இறுதியிலோ அல்லது இந்த வருட முதற்பகுதியிலோ நடத்திவிட வேண்டுமென்ற முனைப்புடன் கடந்த வருடம் இருந்தார். காரணம் தான் விடுதலைப் புலிகளை போரில் தோற்கடித்து விட்டதாகவும் தான் ஒரு அசைக்கமுடியாத முடிசூடா மன்னனாக சிங்கள மக்கள் முன் வலம்வந்து அவர்களின் ஏகோபித்த ஆதரவை பெற்று மீண்டும் ஐந்தோ அல்லது ஆறு வருடங்கள் தொடந்து ஜனாதிபதியாக இருக்கலாம் என்ற எண்ணத்துடன் தனது காய் நகர்த்தலை மேற்கொண்டார். அதில் முதலாவதாக சிங்களத் தேசத்தின் நாடித் துடிப்பை நன்கறிந்து தேர்தலை நடத்த தேர்தல் திணைக்கள அதிகாரியை வற்புறுத்தினார். அதன்படி ஜனவரி 26, 2010 தேர்தல் நடைபெறுமென்று அறிவித்தார்கள்.
பாவம் ரணில். தான் நிச்சயம் மகிந்தாவை தேர்தலில் வெற்றியீட்ட முடியாதென்றெண்ணி தமிழர் மீது படையெடுத்த இராணுவத் தளபதி பொன்சேகாவை தனது மற்றும் தோழமைக் கட்சிகளின் துணையுடன் களம் இறக்கினார். பொன்சேகாவும் மகிந்தாவும் நேரடிச்சமர் புரிந்தார்கள். ஏன் பொன்சேகா நேரடியாகவே மகிந்தாவின் மீது பல குற்றச்சாட்டுக்களை முன்வைத்தார். மேலும் தான் ஆட்சிக்கு வந்தால் தமிழர் மீது கொலைக்குற்றம் புரிந்தவர்களைத் தண்டிப்பதாகவும், மனித உரிமை மீறல்களை புரிந்தவர்களை சட்டத்தின் முன் நிறுத்துவதாகவும் அறிவித்தார். குறிப்பாக பத்திரிகையாளர்களைக் கொன்ற கொலைகாரர்களையும் அவர்களைத் தூண்டிய அரசியல்வாதிகளையும் அடையாளம் காட்டுவதாகவும் வெளிப்படையாக அறிவித்தார்.
தமிழ் மக்கள் ஏகோபித்த தமது ஆதரவை பொன்சேகாவிற்கு வழங்க சிங்கள தேசமோ மகிந்தாவின் இனவெறிப்பேச்சுக்கும் தமிழ் இனச்சுத்திகரிப்பின் வெற்றிக்கு ஆதரவு அளித்து வாக்களித்து அதன்மூலம் மகிந்தாவை அரியணை ஏற்றியிருப்பதானது சிங்கள தேசமே மொத்தமாக எப்படி தமிழின விரோதவாதிகளுக்கு ஊக்கமளிக்கின்றார்கள் என்பது மட்டும் உண்மை. அத்தோடு மகிந்தாவின் தேர்தல் பிரச்சார பேச்சுக்களெல்லாம் தமிழர் மீது தான் ஒன்றும் அக்கறையில்லாது போன்றதொரு தொனியில் தான் பேசிவந்தார். அதுமட்டுமில்லாமல் தான் ஒரு சிங்கள புத்த மதவாதி என்றும் தன்னை வெளிப்படுத்திக்கொண்டார்.
2005 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் சிறி லங்கா ஒரு சிங்கள புத்த நாடென்றும் அங்கு மற்ற இனத்தினர் பெருன்பான்மை சிங்களவரை அரவணைக்கவேண்டும் என்ற தொனியுடன் மகிந்த சிந்தன என்ற கோட்பாட்டுடன் சிங்கள மக்கள் முன் வந்து சிங்கள இனத்துவேச கட்சிகளுடனும் புத்த பிக்குகளின் ஆசீர்வாதத்துடன் ஜனாதிபதியாக பொறுப்பேற்றார். ஆனால் இந்த முறை தான் தனது கொள்கைகளில் இருந்து சிறு கடுகளவேனும் விட்டுக்கொடுக்கமாட்டார் என்று சொல்லி வந்தார். அதுமட்டுமில்லாமல் அனைத்து இனத்தினரும் ஒரு இறையாண்மையின் கீழ் அதாவது ஒன்றிணைந்த சிறி லங்காவில் ஒரு தாய் வயிற்றுப் பிள்ளைகளாக வாழ வழிவகுத்து தருவதாக கூறினார். எது எப்படியும் ஈழத்தமிழ் தேசம் ஒரு போதும் மகிந்த மீதோ அவரின் சகோதர்கள் மீதோ ஒரு கடுகளவேனும் நம்பிக்கை வைக்க தயாராகவில்லை என்பது தான் அசைக்கமுடியாத உண்மை. அத்துடன் சிங்கள தேசத்தின் ஜனாதிபதியாக மகிந்த மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் என்பது தான் யதார்த்தமான உண்மை. அவரின் அடுத்த அரை தசாப்த கால ஆட்சியில் பல வேலைத்திட்டங்களை தனது பிறந்த ஊரான அம்பாந்தோட்டையிலும் மற்றும் அடுத்து வர இருக்கும் பாராளுமன்ற தேர்தலிலும் தனது கட்சி அதிகாரத்தை தக்கவைத்துகொள்ளவேண்டும் என்ற காரணத்தினால் பல வேலைத்திட்டங்களை அறிமுகப்படுத்தி சிங்கள தேசத்தின் ஆசியை பெற எத்தனிப்பார் என்பதில் எந்த ஐயமும் இல்லை. ஆனால் இவரால் தமிழ் தேசம் எதனையும் பெற முடியாதென்பது மட்டும் திண்ணம்.
இந்தியாவையும் ஏமாற்றியும் பல உலக நாடுகளையும் ஏமாற்றுவதற்கும் அவர்களின் அழுத்தங்களை சமாளிப்பதற்கும் சில நல்ல திட்டங்களை தமிழர் பிரதேசங்களில் செய்வதாக அறிவிப்பார். ஆனாலும் இவைகளினால் தமிழர்களின் இருண்ட வாழ்க்கை ஒருபொழுதும் விடியi லத்தராது என்பது தான் உண்மை.
தொடர்ச்சி..
|