TamilSeythi.com - தமிழ்செய்தி இணையம்
முகப்பு எம்மைப்பற்றி செய்தியாளராகலாம்! தொடர்புகளுக்கு விளம்பரம்
பகுதிகள்
தமிழ்நாடு
தமிழீழம்
இலங்கை
தேர்தல் 2010
உலகம்
புலம்பெயர்தமிழர்
கட்டுரை
செய்தி ஆய்வு
நேர்காணல்
இலக்கியம்
கவிதை
வரலாறு
பாடல்கள்
பொழுதுபோக்கு
தினம் ஒரு தகவல்
கருத்துப்படம்
ஆ‌ன்‌மிக‌ம்
வாசகர்
ஆக்கம்
கருத்துக்கள்
Home » கட்டுரை » தேர்தல்-2009: சரியான...
பிரதி எடுக்க
மின்னஞ்சலில் அனுப்ப

தேர்தல்-2009: சரியான சமயமிது. துரோகிகளுக்கு சரியான முடிவை தமிழக மக்கள் கொடுக்க வேண்டும்!

[தமிழக நேரம் : April 4th, 2009 at 11:09]

பசி வந்திடப் பத்தும் பறந்து போகும் என்பது பழமொழி. அந்தப் பத்தும் எவை? தமிழ்மகள் அவ்வை தாம் இயற்றிய நல்வழியில் அந்தப் பத்தையும் ஒரு பாடலில் பட்டியல் இட்டிருக்கிறார்.

மானம் குலம் கல்வி வண்மை அறிவுடைமை
தானம் தவம் உயர்ச்சி தாளாண்மை - தேனின்
கசிவந்த சொல்லியர்மேல் காமுறுதல் பத்தும்
பசி வந்திடப் பறந்து போம்.

உணவு கிடைக்காமல் பசிநோய் வந்துவிட்டால் மானமும் குடிப்பெருமையும் கல்வியும் கொடையும் அறிவுடமையும் தானமும் தவமும் பெருமையும் தொழிலில் ஈடுபடும் முயற்சியும் தேன் கசிவது போல் இனிமை பொருந்திய பேச்சினைக் கொண்ட மங்கையர் மீது விருப்பம் கொள்ளுதலும் ஆகிய பத்தும் பறந்து விடும்!

அவ்வையார் இந்தக் காலத்தில் வாழ்ந்திருந்தால் பசி வந்திட்டால் மட்டுமல்ல தேர்தல் வந்தாலும் என்னென்ன பறக்கும் எனப் பாடியிருப்பார்!

விதிவிலக்கு உண்டென்றாலும் தேர்தல் வந்த பின்னர் என்னதான் பறந்து போய்விடவில்லை என்றாலும் கட்சித் தலைவர்களிடம் இருந்த மானம் பறந்து இருக்கிறது.

தேர்தல் வந்தாலும் வந்தது இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம்; காணமால் போய்விட்டது. தேர்தல் திருவிழா முடிந்தால் ஒருவேளை மீண்டும் அது தலைகாட்டக் கூடும்.

இலங்கைப் பாதுகாப்பு இயக்கம் போலவே அதற்குப் போட்டியாக மிகுந்த ஆரவாரத்தோடும் பெரிய எதிர்பார்ப்போடும் முதல்வர் கருணாநிதியால்  உருவாக்கப்பட்ட   இலங்கைத் தமிழர் நல உரிமை பேரவையும் இருக்கும் இடம் தெரியவில்லை.

திமுக – காங்கிரஸ் கூட்டணியில் தொகுதிகள் ஒதுக்கப்பட்டுவிட்டன. ஆனால் வேட்பாளர்கள் பற்றிய அறிவிப்பு இன்னும் வெளியிடப் படவில்லை.

அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு ஏழு தொகுதிகளும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு மூன்று தொகுதிகளும் ஒதுக்கப்பட்டுள்ளன. பாமக தனது வேட்பாளர்களையும் அறிவித்துப் பரப்புரையிலும் இறங்கிவிட்டது.

அ.திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு வடசென்னை, நாகப்பட்டினம் (தனி), தென்காசி (தனி) ஆகிய 3 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது.

ஆனால் இந்திய கம்யூனிஸ்ட் (மார்க்சிஸ்ட்) மற்றும் மதிமுக இரண்டுக்கும் தொகுதிகள் ஒதுக்கப்படுவதில் இழுபறி நிலை நீடிக்கிறது. மதிமுகவைப் பொறுத்தளவில் எந்தத் தொகுதிகள் என்பதில் மட்டுமல்ல எத்தனை தொகுதிகள் என்பதிலும் இணக்கம் காணப்படவில்லை. குறைந்தது 5 தொகுதிகளாவது ஒதுக்கப்பட வேண்டும் என வைகோ கேட்கிறார். மதிமுக கட்சியில் இருந்து எல். கணேசன், செஞ்சி இராமச்சந்திரன், கண்ணப்பன், கம்பம் இராமகிருஷணன் ஆகியோர் வெளியேறியதைக் காரணம் காட்டி மூன்று தொகுதிகளுக்கு மேல் ஒதுக்க முடியாது என அதிமுக தரப்புச் சொல்கிறதாம்.

வந்தவருக்கு முதல் மரியாதை  இருந்தவருக்கு இல்லை மரியாதை என்ற ஏமாற்றத்தில்   வைகோ தனித்து விடப்பட்டுள்ளார்.   
2006 ஆம் ஆண்டு சட்டசபைத் தேர்தலில் ஒரு தொகுதிக்காக கருணாநிதியோடு எற்பட்ட  மோதலில்  திமுக கூட்டணியில் இருந்து வைகோ வெளியேறி அதிமுகவில் சேர்ந்தார். இப்போது வரலாறு மீண்டும் திரும்புமா என்ற கேள்வி எழுந்துள்ளது.  
பிந்திக் கிடைத்த செய்தியின் படி மதிவுக்கு நான்கு தொகுதிகளையும் மார்க்சிஸ்ட் கட்சிக்கு மூன்று தொகுதிகளையும்  ஒதுக்க  அதிமுக முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது.

விஜயகாந்த் தனித்துப் போட்டியிடுவது என முடிவெடுத்து தேமுதிக வேட்பாளர் பட்டியலையும் வெளியிட்டு வருகிறார். விஜயகாந்தை பணப்பையைக் காட்டி எப்படியும் வளைத்துப் போடுவது என காங்கிரஸ் எடுத்த பகீரத முயற்சி தோல்வியில் முடிந்துள்ளது.

கூட்டணியிலேயே முதல் ஆளாக ஏழு தொகுதிகளையும் கேட்டு வாங்கிய பாமக வேட்பாளர்களை அறிவித்து விட்டு தனது பரப்புரையைத் தொடங்கியுள்ளது.

வேட்பாளர்களில் வன்னியர் சங்கத் தலைவர் காடுவெட்டி குரு மட்டும் புதுமுகம். மற்றவர்கள் முன்னாள் மக்களவை உறுப்பினர்கள் ஆவர்.
முன்னர்  அண்ணன் தம்பி முறை கொண்டாடி தோள்மேல் தோள் போட்ட பாமகவும் விடுதலைச் சிறுத்தைகளும் சிதம்பரம் (தனி) தொகுதியில் மோதுகின்றன. விடுதலைச் சிறுத்தைகள் சார்பில் தொல். திருமாவளவன் இந்தத் தொகுதியில் போட்டியிடுகிறார். இதனால் பெரும் எதிர்பார்ப்புக்குச் சிதம்பரம் தொகுதி  உள்ளாகியிருக்கிறது. சிதம்பரம் தொகுதியில் பாமக வேட்பாளர் பொன்னுசாமி 3 ஆவது முறையாகப் போட்டியிடுகிறார். திருமாவளவன் ஏற்கனவே தனியாகச் சிதம்பரத்தில் இருமுறை கேட்டு வெற்றி வாய்ப்பை இழந்தவர்.
இதற்கிடையில் காங்கிரஸ் அரசைக் கண்டித்தும் வி.புலிகளுக்கு ஆதரவாகப் பேசும்  திருமாவளவன் உடனடியாகக் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்க வேண்டும் எனப் போர்க்கொடி தூக்கிய காங்கிரஸ் தலைவர்கள் அவருக்குப் பாவமன்னிப்பு வழங்கியுள்ளனர்.  காங்கிரஸ் குறித்தும் மத்திய அரசு குறித்தும் இலங்கைச் சிக்கல்  தொடர்பாகத் தாக்கிப் பேசியதற்காக விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் தனிப்பட்ட முறையில் வருத்தம் தெரிவித்ததாக தமிழக காங்கிரஸ் தலைவர் கே. வீ. தங்கபாலு குறிப்பிட்டார்.

“இதுவரை நடந்தவற்றுக்காக விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் தனிப்பட்ட முறையில் வருத்தம் தெரிவித்தார். அதை ஏற்றுக் கொண்டு இருக்கிறோம். அந்தக் கட்சி எங்களுடன் கூட்டணியில் உள்ளது. எனவே, அதை உதாசீனப்படுத்தக் கூடாது. திருமாவளவனை ஏற்றுக் கொண்டுள்ளோம்” என்றார்.
இராகுல் காந்தி “வி.புலிகளை ஆதரிக்கும் விடுதலைச் சிறுத்தைகளை திமுக – காங்கிரஸ் அணியில் சேர்த்துக் கொண்டதற்குத் தேர்தல் உத்திதான் காரணம்” என  செய்தியாளர்களிடம் தெரவித்துள்ளார். அறிவாலயத்தில் நடந்த சந்திப்பில் காங்கிரஸ் கட்சித் தலைவர்களோடு மிக நெருக்கமாக நின்று திருமாவளவன் படம் எடுத்துள்ளார்.

இலங்கைத் தமிழர் சிக்கலில் ஒரே அணியில் நின்ற திருமாவளவனும் இராமதாசும் தேர்தல் களத்தில் நேருக்குநேர் மோதுகிறார்கள். இதுபற்றி இராமதாஸ் கூறும் போது நட்பு வேறு, அரசியல் வேறு தேர்தலைத் தேர்தலாகச் சந்திப்போம் என்றார்.
 “பாமக – சிறுத்தைகள் இடையில் போட்டி இருக்கும் ஆனால் மோதல் இருக்காது” என திருமாவளவன் கூறுகிறார். இது எவ்வளவு தூரம் நடைமுறைச் சாத்தியம் என்பது போகப் போகத்தான் தெரியும்.

அரசியலில் மிகவும் நெருக்கமாகவும் இணக்கமாகவம்  இருந்து வந்த பாமகவும், விடுதலைச் சிறுத்தைகளும் சிதம்பரம் மக்களவைத் தொகுதியில் நேருக்கு நேர் மோதுவது தமிழ் உணர்வாளர்களிடம் ஏமாற்றத்தை உண்டுபண்ணியுள்ளது.
"பாமகவும், விடுதலைச் சிறுத்தைகளும் ஒரே அணியில் இருந்தால்தான், இரு கட்சிகளுக்கும் பலம். மிகவும் பின்தங்கிய சமூகம் வளர்ச்சியடைய இதனால் வாய்ப்பு ஏற்படும்” என்று மருத்துவர் இராமதாஸ் பொது மேடைகளில் அடிக்கடி கூறி வந்தார். இதே கருத்தை திருமாவளவனும் தெரிவித்து வந்தார்.

தொகுதி மறு சீரமைப்புக்குப் பின்னர் சிதம்பரம் மக்களவைத் தொகுதியில் அதிகளவில் வன்னியர்கள் வாழும் அரியலூர் மாவட்டத்தின் 3 தொகுதிகள் சேர்க்கப்பட்டிருப்பதால் பாமக பலம் பெற்றுள்ளது.

அரசியலில் நிரந்தர நண்பர்களும் இல்லை நிரந்தர எதிரிகளும் இல்லை என்பதற்கு தமிழக தேர்தல் களம் சான்றாக உள்ளது.
தமிழீழத்தில் பார்க்குமிடமெங்கும் பிணக்குவியல். கேட்பதெல்லாம் சாவின் ஓலங்கள். நாளாந்தம் நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் குண்டு மழையில் பலி கொள்ளப்படுகிறார்கள். ஆயிரக்கணக்கான மக்கள் காயப்படுகிறார்கள். ஆனால் தமிழக அரசியல்வாதிகளின் கவனம் தேர்தல் திருவிழாவில் படிந்துள்ளது. கொள்கை, கோட்பாடு எல்லாவற்றையும் காற்றில் பறக்கவிட்டு நாற்காலிகளுக்கான போரில் இறங்கியுள்ளனர்.  

தமிழீழத்தில் ஸ்ரீலங்கா அரசும் வி.புலிகளும் போர் நிறுத்தம் செய்ய வேண்டும் என்று பல நாடுகள் கேட்கின்றன. வி.புலிகள் போர் நிறுத்தத்திற்குத் தயார் என்றார்கள். ஆனால் தமிழ்மக்களைக் கொன்று குவிப்பதில் மட்டும் கண்ணாயிருக்கும் ஸ்ரீலங்கா இனவாத அரசு போர் நிறுத்தம் என்ற பேச்சுக்கே இடமில்லை என்று கை விரித்துவிட்டது.

இந்தப் பின்னணியில் கடந்த ஏப்ரில் முதலாம் நாள் இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்படுவதைத்தான் காங்கிரஸ் கட்சி விரும்புகிறது என்று சோனியா காந்தி முதல்வர் கருணாநிதிக்குக் கடிதம் எழுதியுள்ளார்.

தண்ணீரில் மூழ்கும் ஒருவன்கரை சேரக் கயிற்றை எறிவது போல் தோல்வியைத் தழுவ இருக்கும் கருணாநிதியை இந்தக் கடித மூலம் சோனியா காந்தி கரைசேர்க்க எத்தனிக்கிறார்.

“போர் நிறுத்தம் ஏற்படுவதைத்தான் காங்கிரஸ் கட்சி விரும்புகிறது” என்றுதான் சோனியா சொல்கிறார். ஸ்ரீலங்கா அரசைக் கேட்கவில்லை. விரும்புவதற்கும் கேட்பதற்கும் நிறைய வேற்றுமை உண்டு.

“கடந்த 30 ஆண்டுகளாக இலங்கைத் தமிழர்களின் நல்வாழ்வுக்காக காங்கிரஸ் கட்சி துணை நின்று வருகிறது. இலங்கைத் தமிழர்கள் அனைத்து சமுதாயத்தினரைப் போல சம உரிமையோடு வாழ்வதற்கேற்ற அதிகாரப் பகிர்வு ஏற்படுவதற்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும் என்பதே காங்கிரஸ் கட்சியின் நிலை. சில நாள்களுக்கு முன்பு காங்கிரஸ் வெளியிட்ட கட்சியின் தேர்தல் அறிக்கையிலும் இந்த நிலையைப் பிரதிபலித்தோம்.

இப்போது இலங்கையில் நடைபெற்றுவரும் போரும் அதன் காரணமாக தாய்மார்கள், குழந்தைகள் உள்ளிட்ட அப்பாவித் தமிழர்கள் அனுபவித்து வரும் பெரும் துயரமும் நம்மை மிகுந்த கவலைக்கு ஆளாக்கியுள்ளது.

தமிழர்களைப் பாதுகாத்து அவர்களின் நலன்களைப் பேணத் தேவையான அனைத்து முயற்சிகளையும் இலங்கை அரசு மேற்கொள்ள வேண்டும். அதற்கான முதல் கட்ட நடவடிக்கையாக போர் நிறுத்தம் ஏற்பட வேண்டும். போர் நிறுத்தம் ஏற்பட்டால்தான் அப்பாவி மக்கள் பாதுகாப்பான பகுதிகளுக்குச் செல்ல முடியும். போர் நிறுத்தம் குறித்து இலங்கை அரசோடு பேசி வருகிறோம்” என்று அந்தக் கடிதத்தில் சோனியா காந்தி நீலிக் கண்ணீர் வடித்துள்ளார்.

“போர் நிறுத்தம் குறித்து இலங்கை அரசோடு பேசி வருகிறோம்” என்ற செய்தி இதுவரை எந்தச் செய்தித்தாளிலும் வெளிவரவில்லை. போர் நிறுத்தம் செய்யுமாறு இந்தியா கேட்கவில்லை என்று ஸ்ரீலங்கா அமைச்சர்கள் பகிரங்கமாகப் பேசி வருகிறார்கள்.
இந்தியா வி.புலிகள் தோற்கடிக்கப்பட்ட பின்னர் 13 ஆவது சட்ட திருத்தத்தின் கீழ் அரசியல் பரவலாக்கல் - அரசியல் பகிர்வு அல்ல – செய்யப்பட வேண்டும். அதுபற்றி ஸ்ரீலங்கா மிதவாதத் தமிழ்தலைவர்களுடன் ஸ்ரீலங்கா அரசு பேச வேண்டும். அதன் பின்னர் வடக்கில் மேற்கொள்ளப்படும் மீள்கட்டுமானத்துக்கு இந்தியா உதவும் என்ற கருத்தையே இந்தியா சொல்லி வருகிறது. போர் நிறுத்தம் பற்றி சோனியா காந்தி சரி, பிரதமர் மன்மோகன் சிங் சரி மூச்சே விடவில்லை. அதுதான் உண்மை.

ஆனால் இந்தக் கடிதத்தை வைத்துக் கொண்டு கருணாநிதி சொற்சிலம்பம் ஆட முனைவார் என்பத நிச்சயம். திமுக மேடைப் பேச்சாளர்கள் தமிழீழச் சிக்கல் பற்றி பேசவேண்டியதை கருணாநிதி அவர்களுக்கு எடுத்து விளக்கியுள்ளார்.
“மத்திய ஆட்சி எடுக்கும் நடவடிக்கைகள் எமக்கு திருப்தி அளிக்கிறது” என்பார். இப்படிச் சொல்லிவிட்டுத்தான் பதவி விலகல் நாடகத்தை முடிவுக்குக் கொண்டு வந்தார்.

இப்போது திமுகவில் அய்க்கியமாகிவிட்ட கண்ணப்பன் அப்போது சொன்னது நினைவுகக்கு வருகிறது. “விலகல் கடிதங்களை கெடு முடியுமட்டும் கருணாநிதி வைத்திருப்பார். பின்னர் மத்திய ஆட்சி எடுக்கும் நடவடிக்கைகள் எமக்கு திருப்தி அளிக்கிறது எனச் சொல்லிக் கையைக் கழுவிவிடுவார்” எனக் கண்ணப்பன் எதிர் கூறல் கூறினார். அவர்  சொன்னபடியே நடந்தது. இன்று அவர் திமுக சோதியில் கலந்துவிட்டார் என்பது வேறு கதை.

தமிழகத்தைச் சேர்ந்த 40 மக்களவை உறுப்பினர்களும் ஒட்டுமொத்தமாகத் தங்கள் பதவிகளைத் துறந்திருந்தால் மத்திய அரசை அடிபணிய வைத்திருக்க முடியும். கவிழும் சாத்தியம் கூட எழுந்திருக்கும். ஆனால் பதவி சுகத்தைச் சுவைக்கம் அரசியல்வாதிகள் அப்படி ஒரு முடிவு எடுக்காமல் பின்வாங்கினார்கள்.

தமிழீழ விடுதலைக்குப் போராடும் விடுதலைப் புலிகளையும் அவர்களது ஆயுதப் போராட்டத்தையும் ஆதரிக்கும் கட்சிகள் ஒரே அணியில் தேர்தலைச் சந்தித்து இருந்தால் திமுக – காங்கிரஸ் கூட்டணியை எளிதில் வீழ்த்தியிருக்கலாம்.
“தமிழகத்திலிருந்தும் புதுவையிலிருந்தும் தேர்ந்தெடுக்கப்பட்ட நாற்பது நாடாளுமன்ற உறுப்பினர்கள் இனவுணர்வுடன் இயங்கியிருந்தால் மன்மோகன் அரசு ராஜபக்சாவுக்கு ஆயுதங்களையும் சிங்கள இராணுவத்துக்கு இந்திய மண்ணில் பயிற்சியையும் வட்டியில்லாமல் 2,000 கோடி நிதியையும் வழங்கியிருக்க முடியாது” என்று காங்கிரஸ் கட்சியின் தமிழ்நாடு பிரிவின் முன்னாள் பொதுச் செயலாளர் தமிழருவி மணியன் தெரிவித்துள்ளார்.

தன்னைத்தானே மாய்த்துக் கொண்டு வீரமரணம் எய்திய முத்துக்குமார் மூட்டிய  தீயை அவருக்குக் கண்ணீர்விட்டு அழுது அஞ்சலி செலுத்திய திருமாவளவனே தேர்தல் அரசியலுக்காக நீர் ஊற்றி அணைத்துவிட்டார்.

தமிழக சட்டவாளர்கள் முன்னெடுத்த தொடர் போராட்டமும் காவல்துறையுடன் ஏற்பட்ட மோதலால் திசை திருப்பப் பெற்றுவிட்டது.

இவற்றையும் தாண்டி தமிழ்ச்சான்றோர்கள், தமிழினப்பற்றாளர்கள், விடுதலை விரும்பிகள், மாணவர்கள், தொழிலாளர்கள், உழவர்கள், மீனவர்கள், கலைஞர்கள், ஆசிரியர்கள் மற்றும் தாய்மார்கள்; போன்றோர் ஒன்றுபட்டு ஒரே அணியில் திரண்டால் தமிழினப் பகைவர்களைத் தேர்தலில் புறம் காணலாம். அவர்களுக்கு நல்ல படிப்பினையைப் படிப்பித்துக் காட்டலாம். மத்தியில் காங்கிரஸ் அல்லாத ஆட்சியை உருவாக்கலாம்.

பாரதி கேட்டவாறு நல்ல சமயம் இது தமிழக மக்கள் நழுவ விடுவாரோ?
இப்பகுதியில் மேலதிகமாக உள்ளவை: கட்டுரை
SEARCH
PAST WEEK'S TOP 5
Page Views: 477
பிரபாகரன் இருக்கின்றாரா? இல்லையா?
Page Views: 419
மாவீரன் பண்டாரவன்னினின் நினைவுக்கல்லும் சிங்களப் படைகளால் சிதைப்பு!!
Page Views: 281
சாமியார் நிதியானந்தா நடிகையுடன் உல்லாசம் - ஆசிரமங்கள் மீது மக்கள் தாக்குதல்
Page Views: 188
மூன்று படையினரால் பாலியல்வல்லுறவுக்குள்ளாக்கப்பட்டுள்ள 9 வயது தமிழ் மாணவி!
Page Views: 150
உயிருக்கு ஆபத்து: பொன்சேகாவை கைது செய்தவர் வெளிநாட்டுக்கு தப்பியோட்டம்!!
tamilseythi.com

Promote Your Page Too
RANDOM PICK
கருணாநிதிக்கு பாமக துணை நிற்கும் - ராமதாஸ்
கருணாநிதிக்கு பாமக துணை நிற்கும் - ராமதாஸ்
முகப்பு  |  எம்மைப்பற்றி  |  செய்தியாளராகலாம்!  |  தொடர்புகளுக்கு  |  விளம்பரம்
Copyright © 2007 TamilSeythi.com - தமிழ்செய்தி இணையம்