TamilSeythi.com - தமிழ் செய்தி இணையம்
முகப்பு எம்மைப்பற்றி ஆவணம் இன்றைய ஒளிப்பதிவு மாவீரர் நாள் 2008
பக்கங்கள்
தமிழீழம்
இலங்கை
தமிழ்நாடு
உலகம்
புலம்பெயர்தமிழர்
கட்டுரை
நேயர்காணால்

கேலிச்சித்திரம்

விளம்பரங்கள்




Tamil Search Engine
முகப்பு » கட்டுரை » பிரிகேடியர் பால்ராஜ் - வரலாற்றில் தமிழினம் கண்ட பெரும் வீரத் தளபதி
பிரதி எடுக்க
 நண்பருக்கு அனுப்ப
பிரிகேடியர் பால்ராஜ் - வரலாற்றில் தமிழினம் கண்ட பெரும் வீரத் தளபதி

பிரிகேடியர் பால்ராஜ் - வரலாற்றில் தமிழினம் கண்ட பெரும் வீரத் தளபதி

2004ஆம் ஆண்டு மார்ச் மாதம் கருணா வரலாற்று துரோகம் இழைத்திருந்த காலம். தமிழ் மக்கள் மிகவும் சோர்ந்து போயிருந்தார்கள். தமிழர்கள் எங்கு சந்தித்தாலும் இதுதான் பேச்சாக இருந்தது. மட்டக்களப்பு மாவட்டத்தின் அமைவிடமும் வேறு சில சூழ்நிலைகளும் கருணாவிற்கு சாதகமாக இருந்த நிலையில், இதை எப்படி விடுதலைப் புலிகள் சமாளிக்கப் போகிறார்கள் என்ற அச்சம் கலந்த எதிர்பார்ப்பு தமிழர்கள் மத்தியில் பரவியிருந்தது.

எல்லோரையும் போன்று நானும் என்னுடைய நண்பர்களும் சந்திக்கின்ற போதும் இதுதான் பேச்சாக இருந்தது. இப்படியான ஒரு சந்திப்பின் போது அச்சம், கவலை, கோபம் கலந்த உணர்வுகளோடு நாம் பேசிக் கொண்டிருந்த பொழுது, ஒரு ஊடக நண்பரின் தொலைபேசி அழைப்பு வந்தது. "பால்ராஜ் அண்ணை வாகரையில் படையணிகளோடு வந்து நிற்கிறாராம்" நண்பர் சொல்லிவிட்டு தொலைபேசியை வைத்து விட்டார்.

"பால்ராஜ் அண்ணை வாகரையில் நிற்கிறார்" என்ற செய்தியைக் கேட்டதும் அதுவரை எம்மிடம் இருந்த அச்சங்கள் பறந்து போய் விட்டது. அந்தச் செய்தி உண்மையா பொய்யா என்று எமக்கு அப்பொழுது தெரிந்திருக்கவில்லை. சொன்னவரும் அதை உறுதியான முறையில் சொல்லவில்லை. என்றாலும் "பால்ராஜ்" என்னும் அந்தப் பெயரை கேட்ட உடனேயே எமக்குள் ஒரு நம்பிக்கையும் உற்சாகமும் வந்து விட்டது.

பால்ராஜ் இருக்கும் இடத்தில் வெற்றி இருக்கும் என்பது எமக்குத் தெரியும். தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் எத்தனையோ வீரத் தளபதிகளை உருவாக்கியருக்கிறது. அந்த வீரத் தளபதிகளுள் பால்ராஜ் தலைமையானவர் என்று சொல்வதில் எனக்கு எந்தத் தயக்கமும் இல்லை.

பிரிகேடியர் பால்ராஜ் 1983ஆம் ஆண்டில் விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இணைந்து கொண்டார். இந்திய ஈழப் போரின் போது, தேசியத் தலைவருடன் நின்று மணலாறுக் காடுகளில் போரிட்டார். பால்ராஜின் திறமையை இனம் கண்டு கொண்ட தேசியத் தலைவர் இரண்டாம் கட்ட ஈழப் போரில் வன்னிப் பகுதியில் நடந்த சண்டைகளுக்குப் பொறுப்பாக பால்ராஜை நியமித்தார்.

இரண்டாம் கட்ட ஈழப் போர் பல முனைகளின் நடந்து கொண்டிருந்தது. கிழக்கை சிறிலங்காப் படைகள் கைப்பற்றியிருந்தன. யாழ் குடாவில் தீவுப் பகுதிகள், வலிகாமம் வடக்கு போன்ற பகுதிகளில் சிறிலங்காப் படையினர் முன்னேற்றங்களை கண்டிருந்தனர். அன்றைய பாதுகாப்பு அமைச்சர் ரஞ்சன் விஜேயரட்ண ஒவ்வொரு வாரமும் புதன் கிழமைகளில் ஊடகவியலாளர்களை சந்தித்து வெற்றிச் செய்திகளை சொல்லிக் கொண்டிருந்தார்.

ஆனால் வன்னியில் சிறிலங்காப் படைகளின் முகாம்கள் ஒவ்வொன்றாக விழுந்து கொண்டிருந்தன. விடுதலைப் புலிகளின் தாக்குதலை சமாளிக்க முடியாமல் சிறிய முகாம்களை மூடிவிட்டு சிங்களப் படையினர் ஓடினர். சற்றுப் பெரிய முகாமாக இருந்த கொக்காவில் முகாம் மீது தாக்குதல் தொடுத்த விடுதலைப் புலிகள் அதனைக் கைப்பற்றிக் கொண்டனர்.

கொக்காவில் முகாம் மீதான தாக்குதலுக்கு தளபதி பால்ராஜ் தலைமை தாங்கினார். ஒரு சில நாட்களில் கொக்காவில் முகாம் விடுதலைப் புலிகளின் கைகளில் விழுந்தது. அன்றைக்கு அது சிங்கள அரசுக்கு ஒரு பெரும் தோல்வியாகப் போய்விட்டது. ஆனால் அதை விட மிகப் பெரிய தோல்வியையும் சிங்களப் படைகள் சந்தித்தன.

வன்னியின் மத்தியில் அமைந்திருந்த மிகப் பெரிய முகாமாகிய மாங்குள முகாம் மீது விடுதலைப் புலிகள் தாக்குதலை தொடுத்தனர். ஏறக்குறைய இரண்டு வாரங்கள் கடும் சண்டை நடந்தது. விடுதலைப் புலிகளின் படையணிகளை தளபதி பால்ராஜ் வழிநடத்தினார். 1990ஆம் ஆண்டு நவம்பர் 23ஆம் நாள் மாங்குளம் முகாம் விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டது. சிங்களப் படைகள் சிதறியோடின. அன்றைய காலத்தில் விடுதலைப் புலிகள் இயக்கம் பெற்ற பெரும் வெற்றியாக மாங்குள முகாம் தகர்ப்பு விளங்கியது. அந்த முகாம் கைப்பற்றப்பட்டதோடு வன்னிப் பெருநிலப்பரப்பு விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் வந்தது.

இன்றைக்கு தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் தளப் பிரதேசமாக வன்னி திகழ்கிறது. வன்னியை சிங்களப் படைகளிடம் இருந்து கைப்பற்றிய பெருமைக்குரியவர் தளபதி பிரிகேடியர் பால்ராஜ்.

விடுதலைப் புலிகள் முதன் முதலாக பெயரிட்டு நடத்திய மிகப் பெரும் படை நடவடிக்கையாக ஆனையிறவு மீதான "ஆகாயம் - கடல் - வெளி" நடவடிக்கை அமைந்தது. ஒரு மாதத்திற்கு மேலாக நடந்த இந்த நடவடிக்கை விடுதலைப் புலிகளுக்கு வெற்றியைக் கொடுக்கவில்லை. தமிழீழத்தின் முக்கிய தளபதிகள் அந்த நடவடிக்கையில் பங்கேற்றனர்.

மிகப் பெரும் தளமாகிய ஆனையிறவின் ஒவ்வொரு பகுதியும் ஒவ்வொரு தளபதிக்கு பிரித்துக் கொடுக்கப்பட்டிருந்தது. விடுதலைப் புலிகளின் படையணிகள் ஆனையிறவுத் தளத்தின் சுற்றுலா விடுதி படை முகாமைக் கைப்பற்றிக் கொண்டன. ஆனையிறவுத் தளத்தின் மீதான சமரில் இந்த முகாம் கைப்பற்றப்பட்டதானது விடுதலைப் புலிகளுக்கு ஒரு வெற்றியாகவும் நம்பிக்கையைக் கொடுப்பதாகவும் அமைந்தது. சுற்றுலா விடுதி படை முகாம் தாக்குதலுக்கு பொறுப்பாக இருந்தவர் தளபதி பால்ராஜ்.

இன்றைக்கு தமிழீழப் போரில் பெரும் சாதனைகளை நிகழ்த்தி வரும் விடுதலைப் புலிகளின் படைப் பிரிவாகிய "சார்ள்ஸ் அன்ரனி படைப் பிரிவு" அமைக்கப்பட்ட போது, அதன் தளபதியாக பிரிகேடியர் பால்ராஜ் நியமிக்கப்பட்டார்.

மணலாற்றில் படையினர் மேற்கொண்ட மின்னல் நடவடிக்கைக்கு எதிரான முறியடிப்புச் சமரையும் தளபதி பால்ராஜ் வழிநடத்தினார். "சார்ள்ஸ் அன்ரனி" படையணி சந்தித்த முதலாவது சமராகவும் அது அமைந்தது. மணலாற்றின் முக்கிய பகுதிகளை கைப்பற்றும் நோக்கோடு மின்னல் நடவடிக்கையை மேற்கொண்ட சிறிலங்காப் படையினர் கடும் இழப்புக்களோடு பின்வாங்கினர். இந்தச் சண்டையில் விடுதலைப் புலிகள் முதன்முதலாக 5 கிலோமீற்றர் வரை தாக்குதிறன் கொண்ட கனரக பீரங்கி ஒன்றையும் கைப்பற்றிக் கொண்டனர்.

அதன் பிறகு விடுதலைப் புலிகள் இயக்கத்தின் துணைத் தளபதியாகவும் பால்ராஜ் நியமிக்கப்பட்டிருந்தார். விடுதலைப் புலிகளின் படைப்பிரிவில் இது தேசியத் தலைவருக்கு அடுத்த இடம் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

1993ஆம் ஆண்டு சிறிலங்காப் படையினர் யாழ் குடாவை கைப்பற்றும் நோக்கோடு ஆனையிறவுப் படைத்தளத்தில் இருந்து "யாழ்தேவி" என்னும் பெயரில் ஒரு பாரிய படை நடவடிக்கையை மேற்கொண்டனர். படையினர் நகர்ந்த பகுதி வெட்டவெளியாக இருந்தது. விடுதலைப் புலிகள் வெட்டவெளியில் சண்டை செய்யும் திறன் படைத்தவர்கள் அல்ல என்ற கருத்து அன்றைக்கு பலரிடம் இருந்தது. காடுகளிலும், கட்டடங்கள் நிறைந்த பகுதிகளிலும் சண்டை செய்யும் திறனை வெளிப்படுத்திய விடுதலைப் புலிகள் வெட்டவெளியில் ஒரு வெற்றிகரமான சண்டையை செய்திருக்கவில்லை என்பது உண்மைதான்.

பெரும் நம்பிக்கையோடு வெட்டவெளியின் ஊடாக முன்னேறிய சிங்களப் படையினரை அதே வெட்டவெளியில் வைத்து தளபதி பால்ராஜ் தலைமையில் விடுதலைப் புலிகள் எதிர்கொண்டனர். அன்றைய நாள் வரை சிறிலங்காப் படையினருக்கு சாதகமாக இருந்த வெட்டவெளி விடுதலைப் புலிகளுக்கு சாதகமாக மாறியது. பெரும் இழப்போடு சிறிலங்காப் படை சிதறி ஓடியது.

வெட்டவெளியாக இருக்கின்ற முகமாலைக் களத்தில் இன்றும் கூட சிறிலங்காப் படையினரால் முன்னேற முடியவில்லை. தளபதி பால்ராஜ் ஆரம்பித்து வைத்த சாதனையை புலிவீரர்கள் இன்று வரை தொடர்கிறார்கள்.

"யாழ்தேவி" முறியடிப்புச் சமரில் காயம் பட்ட பால்ராஜ் சில மாதங்கள் ஓய்வுக்குப் பின்பு மீண்டும் களத்தில் நின்றார். "புலிப்பாய்ச்சல்" படை நடவடிக்கையில் முக்கிய பங்காற்றினார். "சூரியக்கதிர்" எதிர்நடவடிக்கையிலும் தன்னுடைய பங்களிப்பை செய்தார். அதன் பிறகு விடுதலைப் புலிகளின் மிகப் பெரும் தாக்குதல்களில் ஒன்றாகக் கருதப்படும் "ஓயாத அலைகள் 1" நடவடிக்கையை வழிநடத்தினார். யாழ் குடா கைப்பற்றப்பட்டு விட்ட நிலையில் விடுதலைப் புலிகளின் தளப் பிரதேசமாக இருந்த வன்னியை அச்சுறுத்தியபடி முல்லைத்தீவு தளம் அமைந்திருந்தது. அந்த முல்லைத்தீவு தளத்தை கைப்பற்றி பல ஆயுதங்களை அள்ளி விடுதலைப் புலிகள் அசுர வளர்ச்சி பெற்றனர்.

கிளிநொச்சித் தளத்தின் மீது விடுதலைப் புலிகள் நடத்திய "ஓயாத அலைகள் 2" நடவடிக்கையில் தளபதி பால்ராஜிடம் முக்கிய பணியை தேசியத் தலைவர் ஒப்படைத்தார். ஏற்கனவே கிளிநொச்சித் தளம் மீது விடுதலைப் புலிகள் நடத்திய ஒரு தாக்குதல் போதிய வெற்றியைத் தரவில்லை. அதற்கான காரணங்கள் ஆராயப்பட்டு, புதிய திட்டங்கள் இம்முறை தீட்டப்பட்டிருந்தன. அதன்படி தளபதி பால்ராஜ் தன்னுடைய படையணிகளோடு கிளிநொச்சி படைத்தளத்தையும் பரந்தன் படைத்தளத்தையும் ஊறடுத்து நிலைகொண்டார். உதவிக்கு வந்த படைகளை தடுத்து நிறுத்தி "ஓயாத அலைகள் 2" இன் வெற்றிக்கு முக்கிய பங்காற்றினார்.

"ஓயாத அலைகள் 3" இன் போது தளபதி பால்ராஜ் நிகழ்த்திய சாதனை உலகின் படைத்துறை வரலாற்றில் எங்கும் காணாத ஒன்று. உலகின் எந்த இராணுவத்தாலும் நிகழ்த்த முடியாத ஒன்று. விடுதலைப் புலிகளின் சண்டைகளில் முக்கிய இடம் பிடித்துள்ள இத்தாவில் சமரின் நாயகனாக தளபதி பால்ராஜ் இருக்கிறார்.

ஆனையிறவைக் கைப்பற்றும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக 1200 பேர் கொண்ட விடுதலைப் புலிகள் தளபதி பால்ராஜின் தலைமையில் குடாரப்பில் தரையிறங்கி இத்தாவிலில் நிலைகொண்டனர். 4 கிலோமீற்றர் நீளமும் ஒன்றரைக் கிலோமீற்றர் அகலமும் கொண்ட சிறிய நிலப்பரப்பு அது. அப் பகுதியை சுற்றி நாற்பதாயிரத்திற்கும் மேற்பட்ட சிறிலங்காப் படையினர் நிலைகொண்டிருந்தனர்.

அங்கு தளபதி பால்ராஜ் தலைமையில் 1200 விடுதலைப் புலிகள் நிலை கொண்டுள்ள செய்தியை அறிந்த சிறிலங்காப் படையினர் பெரும் ஆச்சரியம் அடைந்தனர். பலாலிப் படைத்தளத்தில் சிறிலங்காப் படைத் தளபதிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. "பால்ராஜை உயிருடன் பிடிப்பதா? அல்லது பிணமாகப் பிடிப்பதா?" என்பதுதான் அந்த ஆலோசனைக் கூட்டத்தில் முக்கியமாக இடம்பெற்ற விடயம். இத்தனை நம்பிக்கையோடு சிறிலங்காப் படையினர் பெரும் எடுப்பில் தாக்குதலை ஆரம்பித்தனர்.

ஒவ்வொரு நாளும் சிறிலங்காப் படையினர் வந்தனர். பல மணி நேரங்கள் கடும் சண்டை நடந்தது. மிக நெருக்கமான சண்டைகள். தளபதி பால்ராஜுக்கு மிக அருகில் சிறிலங்காப் படையின் டாங்கிகள் ஓடித் திரிகின்ற அளவிற்கு சண்டைகள் நடந்தன. உலகின் மற்றைய இராணுவங்களோடு ஒப்பிடுகின்ற பொழுது, விடுதலைப் புலிகளிடம் உள்ள சிறப்பம்சம் இது. தளபதிகள் களத்தில் நிற்பார்கள். எங்கோ நின்று ஆணையிட மாட்டார்கள். இத்தாவிலில் ஒவ்வொரு நாளும் சிறிலங்காப் படையினர் அடி வாங்கி ஓடிக் கொண்டிருந்தார்கள்.

டாங்கிகள் மற்றும் கனரக ஆயுதங்கள் சகிதம் பல ஆயிரக் கணக்கான படையினரை களம் இறக்கியும் எதுவும் நடக்கவில்லை. சிறிலங்காப் படையினருக்கும் அரசுக்கும் ஒன்றும் புரியவில்லை. இது எப்படிச் சாத்தியம் என்று அவர்களுக்கு விளங்கவில்லை. சிறிலங்கா அரசு தளபதிகளை மாற்றிப் பார்த்தது. எதுவும் நடக்கவில்லை. கடைசியாக ஒரு நாள் பெரும் அசுர பலத்துடன் பல்லாயிரம் படையினரை நான்கு முனைகளிலும் களம் இறக்கி 18 மணித்தியாலங்கள் சண்டையிட்டது. விடுதலைப் புலிகளை அசைக்க முடியவில்லை. சிறிலங்காப் படையினருக்கு நடுவில் "பெட்டி" வடிவில் நிலையெடுத்து விடுதலைப் புலிகள் நின்றனர். தொடர்ந்து நின்று ஆனையிறவிற்கான படையினரின் வினியோகத்தை துண்டித்து, ஆனையிறவு தளத்தை விடுதலைப் புலிகள் கைப்பற்றிய வரலாற்று வெற்றிக்கு வழிவகுத்தனர்.

தளபதி பால்ராஜ் வழிநடத்திய சண்டைகளின் இத்தாவில் சமர் அவருக்கு மகுடமாக அமைந்தது.

இன்றைக்கு தளபதி பால்ராஜ் எம்மோடு இல்லை. தமிழீழ விடுதலைப் போரட்டத்தை அடுத்த கட்டத்திற்கு நகர்த்திய முக்கிய சமர்களை எல்லாம் தலைமையேற்று நடத்திய வீரத் தளபதியை நோய் கொண்டு போய்விட்டது. இருதய நோயால் பாதிக்கப்பட்டிருந்த தளபதி பால்ராஜ் 2003ஆம் ஆண்டில் சிங்கப்பூரில் சிகிச்சை எடுத்திருந்தார். இந்த ஆண்டின் ஆரம்பத்திலும் இருதய பாதிப்புக்கு உள்ளாகி வன்னியில் சிகிச்சைகளை மேற்கொண்டிருந்தார். ஆனால் தற்பொழுது மாராடைப்பால் எங்களை விட்டுப் போய்விட்டார்.

தளபதி பிரிகேடியர் பால்ராஜ் அவர்களின் யுத்தக் கலை உலகின் பல்கலைக் கழகங்களின் போரியல் பாடத்தில் இடம் பெறும் தகுதி வாய்ந்தவை. மிகப் பெரும் தளபதியை இழந்து நிற்கும் தமிழினம் தமது வீரத் தளபதிக்கு கண்ணீர் வணக்கம் செய்வதோடு, தளபதி பால்ராஜ் விட்டுச் சென்ற பணியை தொடர்ந்து முன்னெடுக்கும்.


வி.சபேசன்
 

இதுபற்றி மேலதிக விபரங்கள் தெரிந்தால் தமிழ்செய்தி இணையத்தளத்திற்கு அனுப்பி வைக்கலாம். அனுப்பவேண்டிய மின்னஞ்சல் முகவரி: Tips@tamilseythi.info

இப்பகுதியில் உள்ள மேலதிக செய்திகள்
Custom Search

எனது தொடக்கப் பக்கமாக்குக!

இணையத்தில் தேட
முகப்பு  |  எம்மைப்பற்றி  |  ஆவணம்  |  இன்றைய ஒளிப்பதிவு  |  மாவீரர் நாள் 2008
Copyright © 2008 TamilSeythi.com - தமிழ் செய்தி இணையம்