TamilSeythi.com - தமிழ்செய்தி இணையம்
முகப்பு எம்மைப்பற்றி செய்தியாளராகலாம்! தொடர்புகளுக்கு விளம்பரம்
பகுதிகள்
தமிழ்நாடு
தமிழீழம்
இலங்கை
தேர்தல் 2010
உலகம்
புலம்பெயர்தமிழர்
கட்டுரை
செய்தி ஆய்வு
நேர்காணல்
இலக்கியம்
கவிதை
வரலாறு
பாடல்கள்
பொழுதுபோக்கு
தினம் ஒரு தகவல்
கருத்துப்படம்
ஆ‌ன்‌மிக‌ம்
வாசகர்
ஆக்கம்
கருத்துக்கள்
Home » கட்டுரை » செய்தி ஆய்வு » அடுத்த இராணுவத்...
பிரதி எடுக்க
மின்னஞ்சலில் அனுப்ப

அடுத்த இராணுவத் தளபதியாக நியமிக்கப்படப் போவது யார்?

[தமிழக நேரம் : June 27th, 2009 at 22:27]

அடுத்த இராணுவத் தளபதியாக நியமிக்கப்படப் போவது யார்?

இலங்கையின் அடுத்த இராணுவத் தளபதியாக யாரை நியமிக்கப் போகிறார் மகிந்த ராஜபக்ஸ? இப்போது எதற்கு இந்தக் கேள்வி?
ஜெனரல் சரத் பொன்சேகா தான் பதவியில் இருக்கிறாரே.
அதற்குள் அடுத்த இராணுவத் தளபதி என்ற கேள்வி ஏன் வந்தது என்று பலரும் குழப்பமடையலாம்.ஆனால், இந்தக் கேள்வியை எழுப்புகின்ற தருணம் வந்து விட்டது.

புலிகளுடனான போரில் வெற்றிபெற்ற பின்னர்- இலங்கை அரசு தனது பாதுகாப்புக் கட்டமைப்புக்களை மாற்றியமைக்கின்ற முயற்சியில் இறங்கியுள்ளது.

இந்தக் கட்டமைப்பு மாற்றத்தின் ஒரு அங்கமாக இராணுவத் தளபதி ஜெனரல் சரத் பொன்சேகா- மேலதிக அதிகாரங்களுடன் 'பாதுகாப்பு அதிகாரிகளின் பிரதானி' (ஊhநைக ழக னுநகநnஉந ளுவயகக) என்ற உயர் பதவியில் அமர்த்தப்படவுள்ளார்.

தற்போதைய படைக் கட்டமைப்பிலும் பாதுகாப்பு அதிகாரிகளின் பிரதானி என்ற பதவி இருக்கிறது.
எயர் சீவ் மார்ஷல் டொனால்ட் பெரேரா, கடந்த 2006ம் ஆண்டில் இருந்து இந்தப் பதவியை வகித்து வருகிறார்.
இவர் கூட்டுப்படைகளின் தலைமையகத்தில் இருந்து கொண்டு, முப்படைகளினதும் நடவடிக்கைகளை ஒருங்கிணைக்கும் பொறுப்பை மட்டுமே மேற்கொண்டு வருகிறார்.
புதிய பாதுகாப்புக் கட்டமைப்பில் பாதுகாப்பு அதிகாரிகளின் பிரதானி அதிகாரம் நிறைந்த ஒருவராக மாற்றப்படவுள்ளார்.
பாதுகாப்பு அதிகாரிகளின் பிரதானி என்ற பதவி- நாட்டின் ஒட்டுமொத்தப் பாதுகாப்புக்கும் பொறுப்பானதாகவும், பாதுகாப்பு அமைச்சின் செயலாளரின் நேரடிக் கட்டுப்பாட்டில் இயங்குவதாகவும் மாற்றப்படுகிறது.
இந்தப் பதவிக்கு இராணுவத்தின் ஜெனரல் தர அதிகாரியோ- விமானப்படையின் எயர் சீவ் மார்ஷல் தர அதிகாரியோ- கடற்படையின் அட்மிரல் தர அதிகாரியோ நியமிக்கப்படுவார்.

 இரண்டு வருட பதவிக்காலத்தைக் கொண்ட இந்தப் பதவியில் இருப்பவருக்கு, தேவைப்பட்டால் ஜனாதிபதியால் சேவை நீடிப்பு வழங்கமுடியும்.
முப்படைகளினதும் தளபதிகளைக் கொண்ட ஒரு பாதுகாப்புக் குழுவின் தலைவராகவும் பாதுகாப்பு அதிகாரிகளின் பிரதானி இருப்பார்.
முப்படைகளினது தளபதிகளுடன் ஆலோசனை நடத்தி முடிவுகளை எடுக்கும் அதிகாரம் அவருக்கு வழங்கப்படுகிறது.

பாதுகாப்பு அமைச்சில் இந்தப் பதவியை புதிதாக உருவாக்குவதற்கான பிரேரணையை பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்க நாடாளுமன்றில் சமர்ப்பித்திருந்தார்.

நாடாளுமன்றத்தின் அங்கீகாரம் பெறப்பட்டதும் பாதுகாப்பு அதிகாரிகளின் பிரதானி என்ற பதவியில் ஜெனரல் சரத் பொன்சேகா நியமிக்கப்படுவார்.
நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவது- புலிகள் மீண்டும் இராணுவ ரீதியாகச் செயற்பட முடியாத நிலையை ஏற்படுத்துவது போன்ற விசேட கடமைகளுக்காக அவருக்கு கூடுதல் அதிகாரங்கள் வழங்கப்படவுள்ளன.
புதிய பாதுகாப்புத் திட்டத்தின் படி இராணுவத்தைப் பலப்படுத்தி விரிவாக்கும் திட்டம் தம்மிடம் இருப்பதை ஜெனரல் சரத் பொன்சேகா உறுதிசெய்திருக்கிறார்.

உள்நாட்டு, வெளிநாட்டு அச்சுறுத்தல்களை எதிர்கொள்வதற்கு ஏற்ற வகையில் இராணுவத்தை வலுப்படுத்துவதும்- நவீன மயப்படுத்துவதும் தான் இவரது திட்டம்.

பாதுகாப்பு அதிகாரிகளின் பிரதானி பதவியில் நியமிக்கப்;பட்டதும், ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு இராணுவம், கடற்படை, விமானப்படை, பொலிஸ் மற்றும் சிவில் பாதுகாப்பு படை ஆகியவற்றினது ஆட்சேர்ப்பு, புலனாய்வு, திட்டமிடல், நடவடிக்கை மற்றும் கட்டமைப்பு மாற்றங்கள் உள்ளிட்ட பல அதிகாரங்கள் வழங்கப்படவுள்ளன.

இந்த மாற்றம் நடைமுறைக்கு வந்ததும் இராணுவத் தளபதியாக புதியவர் ஒருவரை நியமிக்க வேண்டிய தேவை அரசாங்கத்துக்கு வரப் போகிறது.
இந்தநிலையில் தான் அடுத்த இராணுவத் தளபதி யார் என்ற கேள்வி முக்கியம் பெறுகிறது.

தற்போது இராணுவத்தின் இரண்டாவது நிலைத் தளபதியாக இருப்பவர் மேஜர் ஜெனரல் சுமித் பாலசூரிய.

இவர் இராணுவத்தின் தொண்டர் படைப்பிரிவுகளின் தளபதியாக இருக்கிறார்.
அடுத்த நிலையில் இருப்பவர் மேஜர் ஜெனரல் ஜி.ஏ.சந்திரசிறி.
இவர் இப்போது இராணுவத் தலைமை அதிகாரியாக இருக்கிறார்.
அத்துடன இவரது பொறுப்பில் தான் வன்னியில் உள்ள இடம்பெயர்ந்தோருக்கான தடுப்பு முகாம்கள் இருக்கின்றன.
யாழ்.படைகளின் கட்டளைத் தளபதியாக இருந்த மேஜர் ஜெனரல் ஜி.ஏ.சந்திரசிறி கடந்த ஜனவரி 7ம் திகதியுடன் 55வயதைப் பூர்த்தி செய்து விட்டார்.

இதனால் அவர் ஜனவரி 6ம் திகதியுடன் ஓய்வுபெறுவதாக இருந்தது.
ஆனால் அவரை மயிரிழையில் காப்பாற்றி விட்டார் இராணுவத் தளபதி ஜெனரல் சரத் பொன்சேகா.

ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு மிகவும் நெருக்கமானவர் என்பதால் மேஜர் ஜெனரல் ஜி.ஏ.சந்திரசிறிக்;கு ஒரு வருட சேவை நீடிப்பு பெற்றுக் கொடுக்கப்பட்டது.

ஜெனரல் சரத் பொன்சேகா இராணுவத் தளபதியாக நியமிக்கப்பட்ட காலத்தில் இருந்தே யாழ்.படைகளின் கட்டளைத் தளபதியாகப் பதவி வகித்தவர் இவர்.
மேஜர் ஜெனரல் ஜி.ஏ.சந்திரசிறியை கடந்த 2007ம் ஆண்டில் இராணுவ பிரதித் தலைமை அதிகாரியாக நியமிப்பதற்கு இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் சரத் பொன்சேகா முயற்சி செய்தார்.

ஆனால் அதற்கு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ இணக்கம் தெரிவிக்கவில்லை.
காரணம் அப்போது அவர் இராணுவ அதிகாரிகளின் மூப்பு வரிசையில் இவர் பின்னால் இருந்தார்.

இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் சரத் பொன்சேகா தனக்கு நெருக்கமான அதிகாரிகளை மட்டும் முன்னே கொண்டு செல்வது வழக்கம்.
தன்னுடன் ஒத்துவராத மூத்த அதிகாரிகளைக் கழுத்தறுத்து விடுவதும், ஓரங்கட்டி ஒதுக்குவதும் அவரது இயல்பான குணம்.
ஜெனரல் சரத் பொன்சேகாவினால் ஓரம் கட்டப்பட்டு- ஒதுக்கப்பட்டதால் இராணுவ சேவையை விட்டு விலகிச் சென்ற சிரேஷ்ட மேஜர் ஜெனரல்களின் எண்ணிக்கை மிக அதிகம்.
தனக்கு விருப்பமில்லாத அதிகாரிகளை திறமையற்றவர்கள் என்று ஒதுக்குவதும், அவர்களுக்கு சேவைநீடிப்புக்கு ஜனாதிபதியிடம் சிபார்சு வழங்காமல் ஓய்வுபெற வைப்பதும் இவரது தனித்துவமான கழுத்தறுப்புப் பாணி.
இவர் இராணுவத் தளபதியாகப் பதவியேற்ற போது மேஜர் ஜெனரல் ஜி.ஏ.சந்திரசிறியை யாழ்.படைகளின் தளபதியாக நியமித்;திருந்தார்.
அப்போது, யாழ்.படைகளின் தலைமையகம் கொழும்பிலுள்ள இராணுவத் தலைமையகத்துக்கு அடுத்த நிலையில் உள்ள ஒரு வலுவான கட்டளைப் பீடமாக விளங்கியது.
51, 52, 53, 55 என நான்கு டிவிசன்களை- 40 ஆயிரத்துக்கும் அதிகமான படையினரைக் கொண்டதாக இருந்தது.
இராணுவத் தளபதி, தொண்டர் படைகளின் தளபதி, இராணுவத் தலைமை அதிகாரி, பிரதித் தலைமை அதிகாரி ஆகியோருக்கு அடுத்த நிலையில் - இராணுவத்தில் 5வது நிலை அதிகாரத்;தைக் கொண்டிருந்தார் யாழ்.படைகளின் தளபதி.
இதற்குப் பொறுப்பான தளபதியாக சேவை மூப்பு அடிப்படையில் 5வது நிலையில் உள்ள மேஜர் ஜெனரல் அதிகாரியை நியமிப்பதற்குப் பதிலாக- அப்போது 14வது நிலையில் இருந்த மேஜர் ஜெனரல் சந்திரசிறியை நியமித்திருந்தார் ஜெனரல் சரத் பொன்சேகா.
படைக் கட்டளைப் பீடத்துக்குள் இது பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியது.
 இதேபோன்று தான், சேவை மூப்புள்ள அதிகாரிகள் பலர் இருக்கத் தக்கதாக பின்வரிசையில் இருந்த மேஜர் ஜெனரல் சந்திரசிறியை பிரதித் தலைமை அதிகாரியாக நியமிப்பதற்கு இராணுவத் தளபதி ஜெனரல் சரத் பொன்சேகா முயற்சித்தார்.
ஆனால், அப்போது பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஸவும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவும் இதனை அனுமதிக்க மறுத்து விட்டனர்.
பிராந்தியப் படைத் தலைமையகங்களின் கட்டளை அதிகாரிகளை நியமிக்கின்ற அதிகாரம் இராணுவத் தளபதிக்கே இருக்கிறது.
ஆனால், இராணுவத் தளபதிக்கு அடுத்த நிலையிலுள்ள மூன்று அதிகாரிகளை நியமிக்கும் போது அதற்கான அனுமதியை பாதுகாப்பு அமைச்சின் ஊடாக ஜனாதிபதியிடம் இருந்து பெற வேண்டும்.
அங்கே தான் மேஜர் ஜெனரல் சந்திரசிறியை பிரதித் தலைமை அதிகாரியாக நியமிக்க முடியாத நிலை இராணுவத் தளபதி ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு ஏற்பட்டது.
இந்த முரண்பாட்டின் காரணமாக, பிரதித் தலைமை அதிகாரி பதவிக்கு வேறெந்த அதிகாரியையும் நியமிக்காமல்- தனது எதிர்ப்பை வெளிப்படுத்தவும் ஜெனரல் சரத் பொன்சேகா தயங்கவில்லை.
மேஜர் ஜெனரல் ஜி.ஏ.சந்திரசிறியை கடந்த மார்ச் மாதம் இராணுவத் தலைமை அதிகாரியாக நியமித்த பின்னர்- இரண்டு மாதங்களுக்கு முன்னரே இந்தப் பதவிக்கு வேறொரு அதிகாரியை நியமித்தார் அவர்.
ஜெனரல் சரத் பொன்சேகாவின் இந்தப் பிடிவாதப் போக்கு அரச உயர்மட்டத்தில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியிருந்த போதும்- போரை அவர் வெற்றிகரமாக நடத்தி வந்ததால் இந்தப் பிரச்சினையை அவரால் சுலபமாகச் சமாளித்துக் கொள்ள முடிந்தது.
புலிகளுடனான போரில் சறுக்கியிருப்பாரேயானால் அவரது பிடிவாதப் போக்கே ஆபத்தாக மாறியிருக்கும்.
இப்போது இராணுவத் தலைமை அதிகாரியாக உள்ள மேஜர் ஜெனரல் ஜி.ஏ.சந்திரசிறிக்கு பிரகாசமான எதிர்காலம் உருவாகியிருக்கிறது.
இந்தப் பதவி அடுத்த இராணுவத் தளபதி பதவிக்கான போட்டியில் நேரடியாக இவரைக் களமிறக்கி விட்டிருக்கிறது.
இராணுவத்தின் இரண்டாவது நிலை அதிகாரியாக உள்ள தொண்டர் படைகளின் தளபதி மேஜர் ஜெனரல் சுமித் பாலசூரியவுக்கே இராணுவத் தளபதி பதவி கொடுக்கப்பட வேண்டும்.
இப்போது அவருக்கு 54வயது தான்.
அவர் 2010ம் ஆண்டு பெப்ரவரி 20ம் திகதி வரை சேவைநீடிப்புப் பெறாமலேயே பணியாற்ற முடியும்.
ஆனால், மேஜர் ஜெனரல் ஜி.ஏ.சந்திரசிறி 2010 ஜனவரி 6ம் திகதி வரையே பதவியில் இருக்க முடியும். அவருக்கு இப்போது 56 வயது.
இராணுவத் தளபதி பதவிக்கு மேஜர் ஜெனரல் சந்திரசிறியும், மேஜர் ஜெனரல் சுமித் பாலசூரியவும் நேரடியாக மோதுகின்றனர்.
இதில் யார் அடுத்த இராணுவத் தளபதியாகும் வாய்ப்பைப் பெறுவார் என்பது சிக்கலானதொரு கேள்வி தான்.
காரணம,; இந்த நியமனத்தில் அரசியல் விருப்பு வெறுப்புகள் மட்டுமன்றி, இராணுவத்துக்குள்ளே இருக்கின்ற குத்துவெட்டுகளையும் சமாளிக்க வேண்டும்.
பாதுகாப்பு அதிகாரிகளின் பிரதானியாக நியமிக்கப்படப் போகும் ஜெனரல் சரத் பொன்சேகா இந்த நியமனத்தில் முக்கிய பங்கை வகிக்கப் போகிறார்.
அப்படியான நிலையில் அவர் நிச்சயமாக மேஜர் ஜெனரல் ஜி.ஏ.சந்திரசிறிக்கு முக்கியத்துவம் கொடுத்து சிபார்சு செய்வார் என்று எதிர்பார்க்கலாம்.
ஏனென்றால், இவர்கள் இருவருக்கும் இடையிலான நெருக்கம் இராணுவ வட்டாரங்களில் மிகப் பிரபல்யம்.
மேஜர் ஜெனரல் சந்திரசிறியை பிரதித் தலைமை அதிகாரியாக நியமிக்க முடியாது போனதால்- அந்தப் பதவியில் வேறெவரையும் நியமிக்காமல் இருந்தவர் ஜெனரல் சரத் பொன்சேகா.
எனவே, அவர் நிச்சயமாக அடுத்த இராணுவத் தளபதியாக மேஜர் ஜெனரல் ஜி.ஏ.சந்திரசிறியை நியமிக்கவே முழுமையான முயற்சியையும் எடுப்பார்.
ஏற்கனவே சேவை நீடிப்பில் இருக்கின்ற மேஜர் ஜெனரல் ஜி.ஏ.சந்திரசிறிக்கு இந்த வாய்ப்பைத் தவற விட்டால்- அடுத்த ஜனவரியோடு வீட்டுக்குப் போக வேண்டியது தான்.
எனவே ஜெனரல் சரத் பொன்சேகாவின் ஆசீர்வாதம் அவருக்கு இருப்பதால் மேஜர் ஜெனரல் சந்திரசிறியே அடுத்த இராணுவத் தளபதியாக நியமிக்கப்படலாம்.
இப்படியான நிலை வரும்போது மேஜர் ஜெனரல் சந்திரசிறியை விட மூத்த அதிகாரியாக உள்ள மேஜர் ஜெனரல் சுமித் பாலசூரிய- வெளிநாட்டுத் தூதரகத்தில் முக்கிய பதவியில் அமர்த்தப்படும் வாய்ப்பு உள்ளது.

நிலவரத்துக்காக கபிலன்
இப்பகுதியில் மேலதிகமாக உள்ளவை: செய்தி ஆய்வு
SEARCH
PAST WEEK'S TOP 5
Page Views: 477
பிரபாகரன் இருக்கின்றாரா? இல்லையா?
Page Views: 419
மாவீரன் பண்டாரவன்னினின் நினைவுக்கல்லும் சிங்களப் படைகளால் சிதைப்பு!!
Page Views: 281
சாமியார் நிதியானந்தா நடிகையுடன் உல்லாசம் - ஆசிரமங்கள் மீது மக்கள் தாக்குதல்
Page Views: 188
மூன்று படையினரால் பாலியல்வல்லுறவுக்குள்ளாக்கப்பட்டுள்ள 9 வயது தமிழ் மாணவி!
Page Views: 150
உயிருக்கு ஆபத்து: பொன்சேகாவை கைது செய்தவர் வெளிநாட்டுக்கு தப்பியோட்டம்!!
tamilseythi.com

Promote Your Page Too
RANDOM PICK
யாரொடு நோவோம்…….? இரகசியம் என்றோ ஒரு நாள் பரகசியம்!!
யாரொடு நோவோம்…….? இரகசியம் என்றோ ஒரு நாள் பரகசியம்!!
முகப்பு  |  எம்மைப்பற்றி  |  செய்தியாளராகலாம்!  |  தொடர்புகளுக்கு  |  விளம்பரம்
Copyright © 2007 TamilSeythi.com - தமிழ்செய்தி இணையம்