"என்னை கைது செய்யட்டும் பார்க்கலாம்" அரசுக்கு சவால் விடுகிறார் பொன்சேகா
[தமிழக நேரம் : February 8th, 2010 at 14:37]
"அரசை கவிழ்ப்பதற்கு சதி செய்தேன் என்றும் அரசதலைவரை படுகொலை செய்வதற்கு திட்டமிட்டேன் என்றும் அரசுத்தரப்பு குற்றஞ்சாட்டினால் என்னை இவ்வளவு நாளுக்கு கைது செய்திருக்கவேண்டும். அவர்களால் அது முடியாது. ஏனெனில், அவர்கள் வெளியிட்டுவரும் செய்திகள் அனைத்துமே பொய்"
- இவ்வாறு கூறியுள்ளார் முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகா. அரசுக்கு எதிரான சதிமுயற்சியில் ஈடுபட்டார்கள் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட முன்னாள் இராணுவத்தினரின் உறவினர்களை சந்தித்த பின்னர் அங்கு பேசுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில் - தனக்கு எதிரான அரசு தரப்பு பொய்பிரசாரம் மேற்கொண்டுவருவதாகவும் தான் குற்றம் செய்வதாக ஊடகங்களுக்கு வதந்திகளை கூறிவராமல் இயலுமானால் ஆதாரங்களுடன் வந்து தன்னை கைது செய்யலாம் என்றும் அதற்கு தான் தயார் என்றும் முன்னாள் இராணுவத்தினரை கைது செய்து சென்று சித்திரவதை புரிவதால் அரசுதரப்பு சாதிக்கப்போவது ஒன்றுமில்லை என்றும் கூறியுள்ளார்.
இதேவேளை, சரத் பொன்சேகாவுடன் சேர்ந்து அரசுக்கு எதிரான சதி முயற்சியில் ஈடுபட்டார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட முன்னாள் இராணுவ அதிகாரிகளில் எட்டுப்பேர் இன்று திங்கட்கிழமை தமது கைதுக்கு எதிராக உயர்நீதிமன்றில் அடிப்படை மனித உரிமை மீறல் வழக்கு தாக்கல் செய்துள்ளனர்.
|