இலங்கைக்கு அழுத்தங்கள் அதிகரிப்பு!- அமெரிக்காவின் இராஜதந்திர நகர்வுகளால் கலக்கம்!
March 17th, 2012 at 10:19
ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடர் இறுதிக்கட்டத்தை அடைந்து கொண்டிருக்கும் நிலையில், ஜெனிவாவில் இலங்கைக்கு எதிரான அழுத்தங்கள் தீவிரமடைந்துள்ளதாக கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
கடந்த மாதம் 27ம் நாள் ஜெனிவாவில் ஆரம்பமான ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் நான்கு வாரகால கூட்டத்தொடர் அடுத்த வாரத்துடன் நிறைவடைகிறது.
இந்தக் கூட்டத்தொடரின் நிறைவுக்கட்டத்தில் வரும் 22ம் திகதி இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வந்துள்ள தீர்மானம் விவாதத்துக்கு எடுக்கப்பட்டு வாக்கெடுப்புக்கு விடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தநிலையில் இலங்கைக்கு எதிரான பரப்புரைகளையும் நெருக்கடிகளையும் அமெரிக்கா தீவிரப்படுத்தியுள்ளது.
இதற்கென வாசிங்டனில் இருந்து மேலதிகமாக 100 இராஜாங்கத் திணைக்கள அதிகாரிகள் ஜெனிவாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
இது இலங்கைக்கு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக இராஜதந்திர வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
அமெரிக்காவின் தீவிர பரப்புரைகள் மற்றும் ஆயத்தங்களை அடுத்து எழுந்துள்ள புதிய சூழல் குறித்து விழிப்பாக இருக்குமாறு இலங்கை வெளிவிவகார அமைச்சு ஜெனிவாவில் உள்ள இலங்கை தூதரகத்தை எச்சரிக்கை செய்துள்ளது.
அதேவேளை, இலங்கைக்கு எதிரான தீர்மானத்துக்கு ஆதரவு கோரி அமெரிக்க - ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகள் அடங்கிய தூதுக்குழுக்கள் ஆபிரிக்க மற்றும் இலத்தீன் அமெரிக்க நாடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
|