வன்முறைகளை மேற்கொள்ளும் அரசுக்கு நாம் தகுந்த பாடத்தினை கற்பிப்போம் - ரவூப் ஹக்கீம்
அரசாங்கம் கட்டவிழ்த்து விட்டுள்ள மோசமான தேர்தல் வன்முறைகளுக்கு சிறுபான்மை முஸ்லிம் வாக்காளர்கள் அஞ்ச மாட்டார்கள் என்று ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் உறுதிபடத் தெரிவித்தார்.
வன்முறைகளை மேற்கொள்ளும் அரசாங்கத்திற்கு நாம் தகுந்த பாடத்தை கற்பிப்போம் என்று அவர் மேலும் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று ஐக்கிய தேசியக் கட்சியினால் கொண்டு வரப்பட்ட ஒத்தி வைப்பு வேளை பிரேரணை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்து உரையாற்றிய ரவூப் ஹக்கீம் எம்.பி. மேலும் கூறியதாவது, இன்று எந்த பத்திரிகையை பார்த்தாலும் தொலைக்காட்சியைப் பார்த்தாலும் வடமத்திய, சப்ரகமுவ மாகாண தேர்தல் வன்முறைகள் தொடர்பான செய்திகளே அதிகம் பிரசுரமாகின்றன.
தேர்தல் வாக்களிப்பு தினத்தில் இடம்பெறப்போகும் பாரிய வன்முறைகளை முன்கூட்டியே அறிவிப்பதற்காகவே எதிர்க்கட்சி சார்பில் இந்த விவாதம் கோரப்பட்டது. ஆனால் தேர்தல் நெருங்கி வந்துள்ள இந்த நிலையில் வன்முறைகள் மிகவும் உச்சக்கட்டத்தை அடைந்துள்ளன. வடமத்திய மாகாணத்தில் அனுராதபுரத்தில் இடம்பெற்ற தேர்தல் வன்முறைகளை நான் நேரடியாகவே கண்டேன்.
வடமத்திய மாகாண சபைக்கு மூன்று முறை தெரிவு செய்யப்பட்டவரும் அந்த மாகாண சபையின் ஒரேயொரு முஸ்லிம் உறுப்பினருமான ராவுத்தர் நைனா முஹமட்டின் வீட்டின் மீது மோசமாக தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. வடமத்திய மாகாணத்தில் உள்ள 100 முஸ்லிம் கிராமங்களை பிரதிநிதித்துவம் செய்யும் வகையில் 2 உறுப்பினர்கள் போட்டியிடுகின்றனர். அந்த இரு உறுப்பினர்களது வீடுகளும் குண்டர்களின் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளன.
கிழக்கில் அப்பாவி மக்களின் வாக்குகளை அபகரித்தது போன்று வடமத்திய, சப்ரகமுவ மாகாண தேர்தலிலும் அரசாங்கம் செய்வதற்கு அனுமதிக்க முடியாது. பொலிஸார் தமது கடமையை சரியாக செய்யவில்லை. பொலிஸ் மா அதிபர் கேலிக்குரியவராக மாறியுள்ளார். சிறுபான்மை முஸ்லிம் வேட்பாளர் மீது தாக்குதல் இடம்பெறுவதை அறிந்தும் கூட அது தொடர்பில் முறைப்பாடு செய்த பின்னர் நடவடிக்கை எடுப்பதாக கூறுகின்றனர்.
இதுபற்றி மேலதிக விபரங்கள் தெரிந்தால்
தமிழ்செய்தி இணையத்தளத்திற்கு அனுப்பி வைக்கலாம். அனுப்பவேண்டிய மின்னஞ்சல்
முகவரி:
Tips@tamilseythi.info