விடுதலைப் புலி உறுப்பினர்களை சரணடையுமாறு இராணுவத்தினர் அழைப்பு - உதய நாணயகார
அரசாங்கப் படைகளுக்கு எதிராகப் போராடிவரும் விடுதலைப் புலிகளின் உறுப்பினர்கள் ஆயுதங்களைக் கைவிட்டு சரணடைய முன்வரவேண்டும் என இராணுவத்தினர் அழைப்பு விடுத்துள்ளனர். அவ்வாறு சரணடைபவர்களுக்கு உரிய புனர்வாழ்வளிக்கப்படும் என இராணுவத்தினர் அறிவித்துள்ளனர்.
“வடபகுதியில் மோதல்களில் ஈடுபட்டிருக்கும் விடுதலைப் புலி உறுப்பினர்கள் எவ்வளவு விரைவில் சரணைடைய முடியுமோ அவ்வளவு விரைவில் இராணுவத்தினரிடம் சரணடையுமாறு அழைப்பு விடுக்கிறோம்” என இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயகார தெரிவித்துள்ளார்.
இந்த இராணுவத்தினரின் அழைப்பு பல்வேறு ஊடகங்கள் மூலம் விடுதலைப் புலி உறுப்பினர்களுக்கு ஏற்கவே விடுக்கப்பட்டுள்ளது எனக் குறிப்பிட்ட இராணுவப் பேச்சாளர், இராணுவத்தினருக்கு எதிராகப் போராடுவதற்காகப் பெரும் எண்ணிக்கையிலான இளைஞர்கள் விடுதலைப் புலிகளின் தலைமைத்துவத்தால் பலவந்தமாக இணைத்துக்கொள்ளப்பட்டவர்கள் எனக் கூறியுள்ளார்.
அதேநேரம், விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளிலுள்ள மக்களை இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்கு வருமாறு அழைப்பு விடுப்பதாகவும் இராணுவப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
அவ்வாறு வெளியேறும் மக்களைத் தங்கவைப்பதற்கான அடிப்படை வசதிகளைச் செய்துகொடுப்பதற்கு தாம் தயாராகவிருப்பதாகவும், இதுவரை நூற்றுக்கணக்கான பொதுமக்கள் இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்கு வந்திருப்பதாகவும் இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயகார மேலும் கூறியுள்ளார்.
இதுபற்றி மேலதிக விபரங்கள் தெரிந்தால்
தமிழ்செய்தி இணையத்தளத்திற்கு அனுப்பி வைக்கலாம். அனுப்பவேண்டிய மின்னஞ்சல்
முகவரி:
Tips@tamilseythi.info