தமிழர்களுக்கு சிறீலங்காவில் பாதுகாப்பு இல்லை–ஐரோப்பிய மனித உரிமைகள் நீதிமன்றம் தீர்ப்பு!
தமிழர்களுக்கு சிறீலங்காவில் பாதுகாப்பு இல்லை என்பதை, ஐரோப்பிய மனித உரிமைகள் நீதிமன்று, இன்று வழங்கிய தீர்ப்பு ஒன்றின்மூலம் அனைத்துலகுக்கு வெளிப்படுத்தியுள்ளது. பிரித்தானியாவில் தஞ்சம் கோரிய தமிழர் ஒருவர் தொடர்ந்த வழக்கில், அவரை சிறீலங்காவிற்கு திருப்பி அனுப்பக்கூடாது என, ஐரோப்பிய ஒன்றிய மனித உரிமைகள் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
பிரித்தானிய அரசினால் 1999ஆம் ஆண்டு 33 அகவுடைய தமிழர் ஒருவரது தஞ்சக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டதால், ஐரோப்பிய மனித உரிமைகள் நீதிமன்றில் அவர் வழக்குத் தொடர்ந்திருந்தார். குறிப்பிட்ட இளைஞருக்கு விடுதலைப் புலிகளுடன் தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகத்தில் சிறீலங்காவில் 7 வருடங்களில் 6 தடவைகள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்ததாகக் கூறப்பட்டது.
இதனைத் தொடர்ந்து அவரை மீண்டும் சிறீலங்காவிற்கு அனுப்பினால் அவர் மீண்டும் வதைகளுக்கு உட்படுத்தப்பட வாய்ப்பு இருப்பதாக, ஐரோப்பிய மனித உரிமைகள் நீதிமன்று இன்றைய தனது தீர்ப்பில் சுட்டிக்காட்டியுள்ளது.
ஐரோப்பிய மனித உரிமைகள் நீதிமன்றின் இந்த தீர்ப்பு ஐரோப்பாவில் தஞ்சக்கோரிக்கை நிராகரிக்கப்பட்ட ஏனைய தமிழர்களுக்கு சாதகமாக அமைந்திருப்பதாகச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
தமிழ் மக்களிடம் இருந்து மனித உரிமை மீறல்கள் தொடர்பாக அதிக முறைப்பாடுகள் தமக்கு கிடைக்கப்பெற்றுள்ளதாகக் கூறும் ஐரோப்பிய மனித உரிமைகள் நீதிமன்று, பிரித்தானிய அரசு தமிழர்களை திருப்பி அனுப்புவதை நிறுத்த வேண்டும் எனவும், தமது நிதிமன்றில் நிலுவையிலுள்ள 342 வழக்குகளையும் தள்ளுபடி செய்ய வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது.
இருப்பினும் சிறீலங்காவில் அனைத்து தமிழர்களுக்கும் பிரச்சினை இல்லை என்ற பிரித்தானிய சட்டவாளர் தரப்பு வாதத்தையும், ஐரோப்பிய மனித உரிமைகள் நீதிமன்றம் ஏற்றுக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதுபற்றி மேலதிக விபரங்கள் தெரிந்தால்
தமிழ்செய்தி இணையத்தளத்திற்கு அனுப்பி வைக்கலாம். அனுப்பவேண்டிய மின்னஞ்சல்
முகவரி:
Tips@tamilseythi.info