மட்டக்களப்பில் பாரிய மனித புதைகுழி: 16 பேரின் எலும்புத் துண்டங்கள் மீட்பு
மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள பாலமீன்மடுப் பகுதியில் பாரிய மனிதப்புதைகுழி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்புக்கு வடக்காக ஆறு கிலோமீற்றர் தொலைவில் உள்ள பாலமீன்மடுப் பகுதியில் ஆழிப்பேரலையால் பாதிக்கப்பட்ட மக்கள் குடியமர்த்தப்பட்டுள்ள தற்காலிக வீடமைப்புதிட்டத்தில் கிணறு தோண்டும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த மக்கள் இந்த புதைகுழியை கண்டுபிடித்துள்ளனர்.
இன்று புதன்கிழமை முற்பகல் 9:30 மணி முதல் தோண்டப்பட்ட இடத்திலிருந்து இதுவரை 16 உடலங்களுக்குரிய 32 மனித எலும்புகள் மீட்கப்பட்டுள்ளன என்றும் -
இவற்றில் துப்பாக்கி சூடுபட்ட ஓட்டைகள் காணப்படுவதாகவும் -
மனித எலும்புகள் மீட்கப்பட்ட குழியில் ஆண்களினதும் பெண்களினதும் உக்கிப்போன ஆடைகளும் மீட்கப்பட்டுள்ளன என்றும் - அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
புதைகுழி இருந்த இடத்தை, காவல்துறையினர் மற்றும் மருத்துவ அதிகாரிகளுடன் சென்று நீதிபதி பி.இராமகண்ணன் பார்வையிட்டுள்ளார்.
சிறிலங்கா இராணுவத்தின் சோதனைச் சாவடியிலிருந்து சுமார் ஒன்றரை கிலோமீற்றர் தொலைவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள இந்த புதைகுழி அமைந்துள்ள பாலமீன்மடு, பல வருடங்களாக இராணுவ கட்டுப்பாட்டில் உள்ள பிரதேசம் ஆகும்.
புதைகுழியிலிருந்து மீட்கப்பட்ட வெற்று ரவைகளை வைத்து பார்க்கும்போது இந்த படுகொலைகள் சுமார் நான்கு வருடங்களுக்கு முன்னர் இடம்பெற்றிருக்கலாம் என்றும் -
இந்தப் புதைகுழியில் 16 பேர் படுகொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டிருக்கலாம் என்றும் தமது பூர்வாங்க அறிக்கையில் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
:புதினம்
இதுபற்றி மேலதிக விபரங்கள் தெரிந்தால்
தமிழ்செய்தி இணையத்தளத்திற்கு அனுப்பி வைக்கலாம். அனுப்பவேண்டிய மின்னஞ்சல்
முகவரி:
Tips@tamilseythi.info