சப்ரகமுவ மாகாணசபைத் தேர்தல்களில் 70 சதவீதமான வாக்குகள் பதிவாகியுள்ளன!
வடமத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணசபைத் தேர்தல்களில் 70 சதவீதமான வாக்குகள் பதிவுசெய்யப்பட்டிருப்பதாக தேர்தல்கள் திணைக்களம் தெரிவித்தது. ஒருசில வன்முறைச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளபோதும் தேர்தல் சுமுகமாக முடிவடைந்திருப்பதாக அந்தத் திணைக்களம் கூறியது.
இரண்டு மாகாணங்களிலும் சில சில வன்முறைச் சம்பவங்கள் இடம்பெற்றிருந்தாலும் தேர்தல் சுமுகமான முறையில் இடம்பெற்றிருப்பதாக அந்தப் பகுதிகளிலிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
எனினும், தேர்தல் சுதந்திரமாக நடைபெறவில்லையென ஜே.வி.பி.யின் வடமத்திய மாகாணசபையின் முதலமைச்சர் வேட்பாளர் வசந்த சமரசிங்க கூறியுள்ளார். ஆளும் கட்சி அனைத்து அதிகாரங்களையும் பயன்படுத்தி தேர்தல் வன்முறைகளில் ஈடுபட்டதாக அவர் குற்றஞ்சாட்டினார்.
நண்பகல்வரை எந்தவிதமான பாரிய அசம்பவாவிதங்களும் இடம்பெறவில்லையென ஐக்கிய தேசியக் கட்சியின் வடமத்திய மாகாணசபை முதலமைச்சர் வேட்பாளர் மேஜர் ஜென்ரல் ஜானக பெரேரா கூறியிருந்தார். பெருமளவான வாக்காளர்கள் தமது வாக்குகளை அளித்திருப்பதாக அவர் தெரிவித்தார்.
சப்ரகமுவ மாகாணத்தில் பெருமளவான வாக்குகள் பதிவுசெய்யப்பட்டிருப்பதாகத் தெரிவித்த அமைச்சர் நிமால் சிறிபால.டி.சில்வா, அமைதியான முறையில் வாக்குப் பதிவு இடம்பெற்றிருப்பதாகக் கூறினார்.
இதேவேளை, சப்ரகமுவ மாகாணத்தின் முதலமைச்சராகத் தானே தேர்ந்தெடுக்கப்படுவேன் என ஐக்கிய தேசியக் கட்சியின் முதலமைச்சர் வேட்பாளர் ரஞ்சன் ராமநாயக்க நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
அமைச்சர்களான அமீர் அலி, குசைன் பைலா ஆகியோர் பயணித்த வாகனத் தொடரணியை இலக்குவைத்து நேற்றிரவு 11.45 மணியளவில் கைக்குண்டுத் தாக்குதலொன்று நடத்தப்பட்டது. எனினும், இதில் அமைச்சர்களுக்கோ வேறு எவருக்குமோ பாதிப்பு ஏற்படவில்லையெனப் பொலிஸார் தெரிவித்தனர்.
இதுபற்றி மேலதிக விபரங்கள் தெரிந்தால்
தமிழ்செய்தி இணையத்தளத்திற்கு அனுப்பி வைக்கலாம். அனுப்பவேண்டிய மின்னஞ்சல்
முகவரி:
Tips@tamilseythi.info