நாட்டில் முன்னெடுக்கப்படுவது யுத்தமல்ல; மனிதாபிமான நடவடிக்கையே- இலங்கை ஜனாதிபதி மகிந்த!
பயங்கரவாதத்தை இல்லாதொழிப்பதற்கு மக்கள் தனக்கும் தனது அரசாங்கத்திற்கும் வழங்கிய ஆணையை நிறைவேற்றுவதற்கு ஒருபோதும் தான் பின்னிற்கப்போவதில்லை எனக்குறிப்பிட்டுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, நாடு இரண்டாகப் பிளவுபடுவதற்கு தான் ஒருபோதும் அனுமதிக்கமாட்டேன் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
நேற்று முன்தினம் சனிக்கிழமை கண்டியிலுள்ள ஜனாதிபதி இல்லத்தில் நடைபெற்ற தேயிலை வர்த்தகர்களுடனான சந்திப்பின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இந்த நாட்டில் நடப்பது யுத்தமல்ல எனக்குறிப்பிட்ட ஜனாதிபதி, பயங்கரவாதிகளின் பிடியிலுள்ள மக்களை மீட்டெடுப்பதற்கான மனிதாபிமான நடவடிக்கை மாத்திரமே முன்னெடுக்கப்படுவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
இனம், மதம், சாதி, கொள்கை, அரசியல் நலன்கள் ஆகியவற்றுடன் ஒரே குடும்பமாக இந்த நாட்டில் வாழ்வதற்கேற்ற சிறந்த சூழலை ஏற்படுத்திக்கொடுக்கும் மனிதாபிமான நடவடிக்கையே தற்போது மேற்கொள்ளப்பட்டுவருவதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
"பயங்கரவாதத்தை இல்லாதொழிப்பதற்கான ஆணையை மக்கள் எனக்குத் தந்திருக்கிறார்கள். இதற்கு யாரும் சவாலாக இருக்க முடியாது" என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
உலகளாவிய ஜனநாயகத்தை உறுதிப்படுத்துவதற்கு பயங்கரவாதத்தை தோற்கடிப்பது அவசியமானது எனக் குறிப்பிட்ட ஜனாதிபதி, நீண்டகாலமாக உலகில் இல்லாதுபோயுள்ள ஜனநாயகத்தை மீண்டும் நிலைநாட்டுவதற்கு இலங்கை கூடுதல் பங்களிப்புச் செய்யவேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
பயங்கரவாதமற்ற ஒரு சமூகத்தை உருவாக்கும் தமது கனவை நிறைவேற்றுவதற்கு சிறிய, பெரிய நாடுகள் அனைத்தும் தமது ஆதரவை வெளிப்படுத்தியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தற்போதைய மனிதாபிமான முன்னெடுப்பின்மூலம் மடு உள்ளிட்ட பல்வேறு பிரதேசங்கள் மீட்டெடுக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட அவர், தமது இலக்கை அடைவதற்கு கொழும்பு மற்றும் ஏனைய பகுதிகளிலுள்ள சிலர் தடைகளை ஏற்படுத்த முயல்வதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதுபற்றி மேலதிக விபரங்கள் தெரிந்தால்
தமிழ்செய்தி இணையத்தளத்திற்கு அனுப்பி வைக்கலாம். அனுப்பவேண்டிய மின்னஞ்சல்
முகவரி:
Tips@tamilseythi.info