|
முகாம்களில், வாழும் தமிழ் மக்கள் அங்கேயே நிரந்தரமாக வாழ நேரிடலாம் ;'த டைம்ஸ்'
[தமிழக நேரம் : July 3rd, 2009 at 09:15]
இடைத்தங்கல் முகாம்களில், வாழும் தமிழ் மக்கள் அங்கேயே நிரந்தரமாக வாழ நேரிடலாம் என 'த டைம்ஸ்' பிரபல நாளிதழ் எச்சரித்துள்ளது.இது தொடர்பாக அங்கு பணிபுரியும் தொண்டு நிறுவன ஊழியர்களிடம் சேகரித்த தகவல்களை கொண்டு இக்கட்டுரையை வெளியிட்டுள்ளது 'த டைம்ஸ்'
'மெனிக் பாம் முகாமில் நிரந்தர கட்டிடங்கள் கட்டப்பட்டு வருவதாக தொண்டு நிறுவன பணியாளர்கள் தெரிவித்துள்ளனர். மெனிக் பாம் பகுதியில் 6 முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றில் நான்கில் சர்வதேச தொண்டுப்பணியாளர்கள் பணிபுரிய அனுமதிக்கப்பட்ட போதும், ஏனைய இரண்டு முகாம்களுக்கு செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக, ரிலிப் இண்டர்நெஷனல் தொண்டு நிறுவனத்தின் பணியாளர் ரஜிந்த ஜயசிங்க தெரிவித்துள்ளார்.
குறித்த முகாம்கள் அமைக்கப்பட்டுள்ள பகுதியிலேயே நிரந்தர கட்டிடங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. வைத்திய சாலைகள், பாடசாலைகள், வங்கிகள், என சகல விதமான கட்டிடங்களும் குறித்த வலயத்தில் நிர்மாணிக்கப்பட்டு வருவதுடன், இவை அனைத்துமே நீண்ட காலப்பாவணைக்காக அமைக்கப்பட்டு வருகின்றன. கொழும்பிற்கு அடுத்தபடியான பெரிய நகரமாக இப்பிரதேசம் உருவாக்க கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.
எனவே இடம்பெயர்ந்த மக்கள் தமது சொந்த நிலங்களுக்கு மீள் குடியேற்றப்படாமல், இங்கேயே குடியமர்த்தப்படலாம் என தொண்டு நிறுவன பணியாளர்கள் சுட்டிகாட்டியுள்ளனர்.இதேவேள இந்நிரந்தர கட்டிடங்கள் அமைப்பதற்காக, அரசு இடம்பெயர்ந்த மக்களையே பயன்படுத்தி வருவதாகவும், அவர்களுக்கு எவ்வித கொடுப்பனவுகளும் வழங்கப்படுவதில்லை எனவும், சுட்டிக்காட்டப்படுகிறது.
ஊதியம் கொடுக்கப்படாமல், இவர்களை பணிகளில் ஈடுபடுத்துவது ஐ.நாவின் சட்ட விதிகளுக்கு முரணானதென தெரிவிக்கப்படுகிறது. எனினும் இக்கருத்துக்களை மறுத்துள்ள அரசு தரப்பு, இன்னமும் 180 நாட்களுக்குள் அதிக எண்ணிக்கையிலான பொதுமக்களை தமது சொந்த இடங்களில் மீள் குடியமர்த்த நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்துள்ளது. இவ்வாறு 'த டைம்ஸ்' தெரிவித்துள்ளது.
| |