பிரித்தானியா பொங்குதமிழ் நிகழ்வில் பல்லாயிரக்கணக்கான மக்கள்!
பிரித்தானியாவில் இன்று நடைபெற்றுக்கொண்டுள்ள பொங்குதமிழ் நிகழ்வில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டிருப்பதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. இன்று நடைபெற்ற பொங்குதமிழ் நிகழ்வில் சுமார் 40000 மேற்பட்ட மக்கள் கலந்துகொண்டதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
றிச்சர்ட் இவன்ஸ் விளையாட்டுத் திடலில் இன்று மாலை 3:00 மணிக்கு நிகழ்வுகள் தொடங்கி நடைபெற்றுக்கொண்டிருப்பதாக எமது நிருபர் தெரிவித்தார்.
பொங்குதமிழ் நிகழ்வில் பிரித்தானிய ஆளும் தொழிற்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள், மூன்றாவது பெரும் கட்சியான தாராண்மைவாதக் கட்சியின் உறுப்பினர்கள், நகரசபை உறுப்பினர்கள், மனித உரிமை ஆர்வலர்கள், பிரித்தானிய தமிழர் பேரவையின் உறுப்பினர்கள், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஜெயானந்தமூர்த்தி என பலர் உரையாற்றியுள்ளனர்.
ஈழத்தமிழ் மக்களின் பொங்குதமிழ் நிகழ்வுகளுக்கு தமிழீழத் தேசியத் தலைவர் பாராட்டுத் தெரிவித்துள்ள நிலையில், இன்றைய பொங்குதமிழ் எழுச்சி நிகழ்வில் பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் ஒன்றுதிரண்டுள்ளதாக கூறப்படுகின்றது.
தாயகம், தேசியம், தன்னாட்சி உரிமை, விடுதலைப் புலிகளே ஈழத்தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகள் என்பவற்றை வலியுறுத்தி இந்த பொங்குதமிழ் எழுச்சி நிகழ்வுகள் இடம்பெற்று வருகின்றன.