மீனவர்கள் மீதான தாக்குதல் கண்டித்து ராமேஸ்வரத்தில் அதிமுக ஆர்ப்பாட்டம் ஜெயலலிதா அறிவிப்பு
மீனவர்கள் மீது தொடர் தாக்குதல் நடத்தும் இலங்கை கடற்படையினரின் அத்துமீறிய செயலைக் கண்டித்து அதிமுக சார்பில் ராமேஸ்வரத்தில் ஆர்ப்பாட்டம் நடக்கும் என ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
இது குறித்து இன்று அவர் வெளியிட்ட அறிக்கை:
கச்சத்தீவை தாரை வார்த்துக் கொடுத்ததன் விளைவாக மீனவ மக்கள் பெரும் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளனர். கடந்த 3 மாதங்களாக ராமேஸ்வரம் பகுதியில் உள்ள மீனவர்கள் தங்கள் தொழிலை மேற்கொள்ள முடியாத அளவுக்கு இலங்கை கடற்படையினர் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர். கடந்த 31ம் தேதி 600க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் ராமேஸ்வரம் மீனவர்கள் கச்சத்தீவு அருகே இந்திய எல்லையில் மீன் பிடித்துக் கொண்டிருந்த போது, படகுகளில் வந்த இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்களை சுற்றி வளைத்து அவர்களை தாக்கியதோடு மட்டுமல்லாமல், படகுகளில் இருந்த மீன்களையும் பறித்துக் கொண்டதாக தகவல்கள் வந்துள்ளன. இந்தியக் கடல் எல்லையைத் தாண்டி தங்கள் பகுதிக்குள் மீன் பிடிக்க நுழைவதாக பழிசுமத்தி தமிழக மீனவர்கள் மீது துப்பாக்கியால் சுடும் நிகழ்ச்சிகளை அன்றாடம் அரங்கேற்றிக் கொண்டிருக்கும் இலங்கை கடற்படையினரின் செயல் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. இதுபோன்ற நிலைமை தொடர்ந்து நீடித்தால் ஒரு மிகப் பெரிய தொழிலை தமிழ்நாடு இழக்க வேண்டி வரும். இலங்கை கடற்படையினரின் இதுபோன்ற தொடர் தாக்குதலை இனி சகித்துக் கொள்ள முடியாது. தமிழக மீனவர்களின் அச்சத்தைப் போக்கி அவர்களது வாழ்வாதாரத்தை உறுதி செய்யும் வகையில் சட்டரீதியான அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்பதற்கான முயற்சிகளை அதிமுக மேற்கொள்ளும். மத்திய, மாநில அரசுகளின் கவனத்தை ஈர்க்கும் வகையில், ராமேஸ்வரம் மீனவர்கள் மீது தொடர் தாக்குதல் நடத்தும் இலங்கை கடற்படையினரின் அத்துமீறிய செயலைக் கண்டித்து அதிமுக சார்பில் நாளை மறுநாள் ராமேஸ்வரம் பாண்டியன் திடலில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும். இவ்வாறு ஜெயலலிதா கூறியுள்ளார்.
இதுபற்றி மேலதிக விபரங்கள் தெரிந்தால்
தமிழ்செய்தி இணையத்தளத்திற்கு அனுப்பி வைக்கலாம். அனுப்பவேண்டிய மின்னஞ்சல்
முகவரி:
Tips@tamilseythi.info