|
கச்சத்தீவு ஒப்பந்தத்தை ரத்து செய்ய உச்ச நீதிமன்றத்தில் ஜெயலலிதா வழக்கு
கச்சத்தீவை இலங்கைக்கு விட்டுக் கொடுப்பதற்காக போடப்பட்ட ஒப்பந்தம் அரசியல் சட்டத்துக்கு விரோதமானது. எனவே கச்சத் தீவை மீட்க நடவடிக்கை எடுக்குமாறு மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிடக் கோரி உச்ச நீதிமன்றத்தில் ஜெயலலிதா வழக்கு தொடுத்துள்ளார்.
அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா, உச்ச நீதிமன்றத்தில் நேற்று தாக்கல் செய்துள்ள பொது நலன் மனுவில் கூறியிருப்பது வருமாறு: * ராமநாதபுரத்தில் இருந்து 11 கடல் மைல் தூரத்தில் 285 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள கச்சத்தீவு இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி என்பதற்கு வரலாற்று ரீதியாகவும், பூகோள ரீதியாகவும் சர்ச்சைக்கு அப்பாற்பட்ட சான்றுகள் உள்ளன. * 1921ம் ஆண்டு வாக்கில் கச்சத்தீவில் தங்களுக்கு உரிமை இருப்பதாக இலங்கை கூற ஆரம்பித்தது. இதற்கு அந்த காலக் கட்டத்திலேயே கடும் எதிர்ப்பு கிளம்பியது. கச்சத்தீவை சுற்றி பாதுகாப்பை வலுப்படுத்துமாறு 1968ல் ராமநாதபுரம் தொகுதி எம்.பி. முகமது ஷெரீப் நாடாளுமன்றத்தில் பேசினார். இதை தொடர்ந்து இலங்கையின் நியாயமற்ற கோரிக்கையை எதிர்த்து நாடாளுமன்றத்தில் அடிக்கடி விவாதம் நடந்துள்ளது. * இந்த ஆதாரங்களை பொருட்படுத்தாமல் 26.6.1974ல் கச்சத்தீவை இலங்கைக்கு விட்டுக் கொடுப்பதற்காக இந்தியா-இலங்கை கடல் ஒப்பந்தம் போடப்பட்டது. இதில் அப்போதைய இரு நாடுகளின் பிரதமர்கள் கையெழுத்திட்டனர். ஆனால், அரசியல் சட்டத்தில் தேவையான திருத்தம் செய்யப்படவில்லை. * 1974 ஜூலை 23ல் அப்போதைய வெளியுறவு அமைச்சர் சுவரண் சிங், நாடாளுமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்து, கச்சத்தீவை இலங்கைக்கு விட்டு கொடுத்த போதிலும், இந்திய மீனவர்களுக்கு பாரம்பரியமாக இருந்து வரும் மீன் பிடிக்கும் உரிமையும், யாத்ரீகர்கள் அந்த தீவுக்கு சென்று வரும் உரிமையும் பாதிக்கப்பட மாட்டாது என்று உறுதி அளித்தார். ஆனால், இந்த உறுதி மொழி காப்பாற்றப்படவில்லை. * இந்த ஒப்பந்தம் அரசியல் சட்டம் 368வது பிரிவுக்கு எதிரானது. ஏனெனில் இதுபோன்ற ஒப்பந்தங்களுக்கு நாடாளுமன்றம் ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று ராம் கிஷோர் வழக்கு உள்ளிட்ட பிற வழக்குகளில் உச்ச நீதிமன்றம் ஏற்கனவே தீர்ப்பளித்து உள்ளது. * மாநில அரசு மற்றும் மாநில சட்டப்பேரவையின் சம்மதம் இன்றி கச்சத்தீவை இலங்கைக்கு தாரை வார்த்த ஒப்பந்தம் கூட்டாட்சி தத்துவத்துக்கு விரோதமானது. * இந்த ஒப்பந்தம் மூலம் அரசியல் சட்டம் 5 மற்றும் 6ம் பிரிவுகளில் மீனவர்கள் மற்றும் யாத்ரீகர்களுக்கு கச்சத்தீவில் வழங்கப்பட்டு இருந்த உரிமை மீறப்பட்டு உள்ளது. * எனவே 26.6.1974ல் போடப்பட்ட கச்சத்தீவு ஒப்பந்தம் மற்றும் 23.3.1976ல் இரு நாட்டு அரசுகளும் பரிமாறிக் கொண்ட கடிதங்கள் அரசியல் சட்டத்துக்கு விரோதமானவை என்று அறிவிக்க வேண்டும். * இந்த ஒப்பந்தம் மூலம் தமிழக ஏழை மீனவர்களின் வாழ்வாதாரமும், அரசியல் சட்டம் 19, மற்றும் 21ன் கீழ் அவர்களுக்கு வழங்கப்பட்ட சுதந்திரமாக நடமாடும் உரிமையும் மறுக்கப்பட்டு உள்ளன. தமிழக மீனவர்கள் வெளிநாட்டு படையினரால் கைது நடவடிக்கைக்கும், படுகொலைக்கும் ஆளாகிறார்கள். சொத்துக்களை இழந்து அவதிக்கு உட்படுத்தப்படுகிறார்கள். * எனவே அரசியல் சட்டத்துக்கு விரோதமான கச்சத்தீவு ஒப்பந்தத்தை ரத்து செய்து விட்டு அதை மீட்க நடவடிக்கை எடுக்குமாறு மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் ஜெயலலிதா கூறியுள்ளார். மனுவை வக்கீல்கள் மனோஜ்பாண்டியன், ஸ்ரீகலா குரு கிருஷ்ணகுமார் ஆகியோர் தாக்கல் செய்தனர்.
|
இதுபற்றி மேலதிக விபரங்கள் தெரிந்தால்
தமிழ்செய்தி இணையத்தளத்திற்கு அனுப்பி வைக்கலாம். அனுப்பவேண்டிய மின்னஞ்சல்
முகவரி:
Tips@tamilseythi.info |
| |