TamilSeythi.com - தமிழ் செய்தி இணையம்
முகப்பு எம்மைப்பற்றி ஆவணம் இன்றைய ஒளிப்பதிவு மாவீரர் நாள் 2008
பக்கங்கள்
தமிழீழம்
இலங்கை
தமிழ்நாடு
உலகம்
புலம்பெயர்தமிழர்
கட்டுரை
நேயர்காணால்

கேலிச்சித்திரம்

விளம்பரங்கள்




Tamil Search Engine
முகப்பு » தமிழ்நாடு » தமிழீழம் பிறப்பது காலத்தின் கட்டாயம் - புலமைப்பித்தன்
பிரதி எடுக்க
 நண்பருக்கு அனுப்ப
தமிழீழம் பிறப்பது காலத்தின் கட்டாயம் - புலமைப்பித்தன்

தமிழீழம் பிறப்பது காலத்தின் கட்டாயம் - புலமைப்பித்தன்

ஐரோப்பிய நாடுகளுக்கு 26 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டு அங்கே ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக கூட்டங்களில் முழங்கிவிட்டு வந்திருக்கிறார் அ.தி.மு.க. முன்னாள் அவைத் தலைவர் புலவர் புலமைப்பித்தன். இது தவிர, இலங்கைப் பிரச்னை பற்றி புதிய கோணத்தில் 'ஒரு பூகோளமே பலிபீடமாய்...' என்ற புத்தகத்தையும் எழுதியிருக்கிறார் புலவர்.

''ஐரோப்பிய நாடுகளுக்கு திடீர் விசிட் ஏன்?''

''புலம் பெயர்ந்த தமிழர்கள் ஈழத்துக்கு ஆதரவாக கூட்டங்களை நடத்தி வருகிறார்கள். ஆரம்பத்தில் இருந்தே ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக எழுதியும் பேசியும் வருவதால் என்னை அவர்கள் அழைத்தார்கள். அதனால் நார்வே, சுவீடன், பெல்ஜியம், ஆலந்து ஆகிய நாடுகளுக்குப் போனேன். 'பொங்குத் தமிழ்' என்ற பெயரில் நடந்த நிகழ்ச்சிகளில், 'எங்கள் பிள்ளை களிடம் இருக்கும் ஆயுதங்கள் மட்டுமே விடுதலையைப் பெற்றுத் தரும். அதற்குத் தமிழர்களின் ஆதரவு அவசியம். அந்த நெருப்பு அணையாமல் பார்த்துக் கொள்ளவேண்டும்' என்று பேசினேன்.

அதோடு, இலங்கைப் பிரச்னைக்காக அமைதிப் பேச்சு வார்த்தை நடத்திவரும் நார்வே அரசின் வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செயலாளரும் இலங்கை
அமைதிப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருபவருமான ஜான் ஹேன்ஸன் பாவரிடம் நீண்ட நேரம் பேசினேன். அவர் என்னிடம், 'இலங்கைக்குப் பக்கத்தில் இருக்கும் தேசமான இந்தியா இந்தப் பிரச்னைக்குத் தீர்வு காண அக்கறை எடுத்துக் கொள்ளவில்லை. அதன் ஆதரவு இல்லாத நிலையில் என்ன செய்ய முடியும்? அமைதி முயற்சிகள் ஏற்பட இந்தியா உதவவேண்டும்' என்று வருத்தப்பட்டார்.''



''இலங்கைப் பிரச்னைப் பற்றிய உங்கள் புத்தகம் எந்த நிலையில் இருக்கிறது?''

''தனி ஈழத்துக்காக உண்ணாவிரதம் இருந்து உயிர் நீத்த திலீபன் நினைவு நாளான செப்டம்பர் 26-ம் தேதி புத்தகத்தை சென்னையில் வெளியிட முடிவு செய்திருக்கிறேன். இலங்கையில் தமிழ் சமூகம் தொடர்ந்து அழிக்கப்படுவதற்கு என்ன காரணம் என்று தொடர்ந்து சிந்தித்தபோது எனக்குத் தெரிந்த ஒரே காரணம் இந்தியாவின் பூகோள அமைப்புதான். அதற்காகத்தான், 'ஒரு பூகோளமே பலிபீடமாய்...' என்று புத்தகத்துக்கு தலைப்பு வைத்திருக்கிறேன். புத்தகத்தின் மையவிஷயம் இதுதான்...

இந்தியா மூன்று பக்கமும் கடலால் சூழப்பட்ட ஒரு தீபகற்பம். நிலப்பரப்பு வழியாக நம் மீது அன்னிய நாடுகள் தாக்குதல் நடத்த முயன்றால், வடக்கில் இருந்தோ தெற்கில் இருந்தோதான் வரவேண்டும். வடக்கில் நம்முடைய பாதுகாப்புக்காகப் படைகளை நிறுத்தி வைத்திருக்கிறோம். தெற்கில் நமக்குப் பக்கத்திலேயே இலங்கை இருப்பதால் அங்கே நம்முடைய படைகளை நிறுத்த முடியாத நிலை. தெற்கே இருக்கும் நாடான இலங்கை நமக்கு நேச நாடாக இருக்கவேண்டும். அப்போதுதான் நமக்குப் பாதுகாப்பு என்று இந்தியா கருதுகிறது. ஆகவே, இந்தியாவின் இந்த பூகோள அமைப்புதான் எல்லாப் பிரச்னைகளுக்கும் அடிப்படைக் காரணம். இந்த அடிப்படையில்தான் ஈழத்தமிழர்களும் இந்தியத் தமிழர்களும் தொடர்ந்து தண்டிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

விளக்கமாகச் சொல்ல வேண்டுமென்றால், இந்த பூகோள அமைப்பால் நம்முடைய தேசத்துக்கு ஊறு ஏதும் வந்துவிடக் கூடாதென பிரதமர்கள் லால்பகதூர் சாஸ்திரி, இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி ஆகியோர் ஆட்சிக்காலத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் தமிழர்களுக்கு துரோகங்களாக மாறிவிட்டன. சாஸ்திரி பிரதமராக இருந்த நேரத்தில் 1965-ம் ஆண்டு இந்தியா-பாகிஸ்தான் போர் நடந்தது. அப்போது இலங்கையின் 'கட்டுநாயகா' விமான நிலையத்தை போருக்காகப் பயன்படுத்திக்கொள்ள பாகிஸ்தான் முயன்றது. உடனே, 'இதற்கு அனுமதிக் கக்கூடாது' என்று அப்போதைய இலங்கை அதிபர் சிறீமாவோ பண்டாரநாயகாவிடம் இந்தியா கேட்டுக் கொண்டது. இதனைப் பயன்படுத்திக்கொண்ட இலங்கை, 'ஒன்பதரை லட்சமுள்ள இலங்கை தேயிலைத் தோட்டத் தமிழர்களில் ஐந்து லட்சம் பேரை இந்தியா திரும்பப் பெற்றுக்கொள்ள வேண்டும்' என்று நிபந்தனை போட்டது. இந்தியாவின் பாதுகாப்பைக் கருதி இந்தியாவும் சம்மதித்தது. இலங்கையோடு நட்பாக இருக்க, தமிழர்கள் தண்டிக்கப்பட்டார்கள்.



இந்திராகாந்தி பிரதமராக இருந்த போதும், இந்தியா-பாகிஸ்தான் போர் மூண்டது. அப்போது பாகிஸ்தானுக்கு ஆதரவாக 'என்டர்பிரைஸ்' என்ற போர் கப்பலை இந்தியக் கடல் எல்லையில் நிறுத்தியது அமெரிக்கா. அப்போது ரஷ்யா நமக்கு ஆதரவாக இருந்ததால், இந்த விவகாரம் ஐ.நா. சபை வரை போனது. 'இந்தியப் பெருங்கடலில் நின்றுகொண்டோ பறந்துகொண்டோ கடலையே எல்லைகளாகக் கொண்ட நாடுகளை அச்சுறுத்தக்கூடாது' என்று தீர்மானம் நிறைவேற்றியது ஐ.நா. அதனால், அமெரிக்கா பின் வாங்கியது. அதேநேரம், தனக்கு தரைப்பகுதி வேண்டும் என்பதற்காக பாகிஸ்தானுடன் சேர்ந்து இலங்கையில் தளம் அமைக்கும் முயற்சியில் அது இறங்க... வேறு வழியில்லாமல் 'தண்ணீரில் மிதக்கும் தங்கச்சுரங்கம்' என்று வர்ணிக்கப்படும் கச்சத்தீவை இலங்கைக்குத் தாரை வார்த்தார் இந்திரா காந்தி. இன்றுவரை நம்முடைய மீனவர்கள் இலங்கைக் கடற்படையால் சுட்டுக் கொல்லப்படுவதற்குக் காரணமே கச்சத்தீவுதான். இந்தியாவின் பாதுகாப்புக்கு இலங்கை அனுசரணையாக இருக்கவேண்டும் என்பதற்காகவே தமிழர்கள் தொடர்ந்து கொல்லப்பட்டாலும், கவலைப்படாமல் கண்ணைமூடிக் கொண்டு இருக்கிறது இந்தியா.

ராஜீவ் காந்தி ஆட்சியில் திரிகோணமலையை தன்னுடைய தளமாக்கிக்கொள்ள அமெரிக்கா முயன்றது. இதனால், தங்களுக்கு ஆபத்து ஏற்படலாம் என்ற அச்சம் இந்தியாவுக்கு இருந்தது. இதுபற்றி இலங்கையுடன் கடிதப் பரிமாற்றம் நடத்தியது. புலிகளிடம் அடிவாங்கி இலங்கை பலவீனமாக இருந்த அந்த சமயத்தில், சாதுர்யமாக காய் களை நகர்த்தியது இந்தியா. இலங்கைப் பிரச்னைக்குத் தீர்வு காண்பதாகச் சொல்லி ஜெயவர்த்தனேவுடன் ராஜீவ் காந்தி ஒப்பந்தம் போட்டார். இந்தியாவுக்கு அரணாக ஈழப் பகுதியை தன்னுடைய ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வர, தமிழர்களைப் பலிகடாவாக்கி, இந்தியா போட்ட மறைமுக ஒப்பந்தம் அது. சொந்தநாட்டின் ஆதிக்கத்தை எதிர்த்துப் போரிட்ட ஈழத் தமிழர்கள் எப்படி அந்நிய நாட்டின் ஆதிக்கத்தை ஏற்றுக்கொள்வார்கள்? அங்கே போன இந்திய அமைதிப்படை, சுமார் 7 ஆயிரம் பேரைக் கொன்று குவித்தது.

இதுபோன்ற காரணங்களை வைத்துதான் இந்திய பூகோள அமைப்பே தமிழர்களைத் தண்டிப்பதாக இருக்கிறது என்கிறேன்.''

''ஈழப் பிரச்னைக்குத் தீர்வுதான் என்ன..?''

''அதையும் புத்தகத்தில் தெளிவாகக் குறிப்பிட்டிருக் கிறேன். இந்தியாவின் பாதுகாப்பு முக்கியம்தான். அதற்காக இந்தியாவின் பூகோளத்தை திருத்த முடியாது. ஆனால், இலங்கையின் பூகோளத்தை திருத்த முடியும். 'தமிழ் ஈழம்', 'சிங்கள தேசம்' என்று இலங்கை இரண் டாகப் பிரிந்தால்தான் இந்தியாவுக்குப் பாதுகாப்பு. தமி ழீழம் பிறக்காவிட்டால் தொடர்ந்து போர்ச் சூழல் இருந்துகொண்டே இருக்கும். இது இலங்கையின் பொருளாதாரத்தைப் பாதிக்கும். இலங்கைத் தமிழர்கள், சிங்கள அரசு, இந்திய அரசு மூன்று பேருக்குமே நன்மை தரக்கூடியது தமிழீழம்தான். ஜெயவர்த்தனேவுடன் இந்தியா ஒப்பந்தம் போட்டது போல தமிழீழம் பிறந்ததும் தம்பி பிரபாகரனோடு ஒப்பந்தம் போட்டுக்கொள்ளலாம். தெற்கே நமக்கு எந்த அச்சுறுத்தலும் இருக்காது. ஈழம், இந்தி யாவின் பாதுகாப்புக்கு அரணாக இருக்கும். அதோடு 60 ஆண்டு கால தமிழர்களின் போராட்டத்துக்கும் விடிவு பிறக்கும். 1947-க்குப் பிறகு உலகம் முழுவதும் 104 நாடுகள் விடுதலை பெற்று சுதந்திரக் காற்றை சுவாசித்துக் கொண்டிருக்கின்றன. தமிழீழம் பிறப்பது காலத்தின் கட்டாயம்!''

 நன்றி-விகடன்

 

இதுபற்றி மேலதிக விபரங்கள் தெரிந்தால் தமிழ்செய்தி இணையத்தளத்திற்கு அனுப்பி வைக்கலாம். அனுப்பவேண்டிய மின்னஞ்சல் முகவரி: Tips@tamilseythi.info

இப்பகுதியில் உள்ள மேலதிக செய்திகள்
Custom Search

எனது தொடக்கப் பக்கமாக்குக!

இணையத்தில் தேட
முகப்பு  |  எம்மைப்பற்றி  |  ஆவணம்  |  இன்றைய ஒளிப்பதிவு  |  மாவீரர் நாள் 2008
Copyright © 2008 TamilSeythi.com - தமிழ் செய்தி இணையம்