|
டி- ராஜேந்தர் கூட்டத்தில் பெட்ரோல் குண்டுவீச்சு!
லட்சிய திமுக தலைவர் விஜய டி.ராஜேந்தர் கலந்துகொண்ட பொதுக்கூட்டத்தில் நேற்று பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. அதிர்ஷ்டவசமாக யாருக்கும் பாதிப்பில்லை. குண்டு வீசிய தேமுதிக துணைச் செயலாளர் கைது செய்யப்பட்டுள்ளார். காஞ்சிபுரம் வணிகர் வீதியில் லட்சிய திமுக பொதுக்கூட்டம் நேற்றிரவு நடந்தது. கட்சியின் தலைவர் விஜய டி.ராஜேந்தர் பேசினார். அனைத்து அரசியல் கட்சி தலைவர்களையும் விமர்சித்து பேசியிருக்கிறார். ஒரு கட்டத்தில், தேமுதிக தலைவரும் நடிகருமான விஜயகாந்த் பற்றி ராஜேந்தர் கடுமையாக விமர்சித்து பேசினார். அவர் பேசும்போது, ‘Ôதிரைப்படத்தில் நடிகையின் தொப்புளில் பம்பரம் விடுபவர்தான் விஜயகாந்த். நானும் ஒரு நடிகன்தான். ஆனால், எந்த நடிகையையும் தொட்டு நடிக்கவில்லை. புறம்போக்கு நிலத்தை மடக்கிப்போட்டவர் விஜயகாந்த். இவரெல்லாம் முதல்வர் நாற்காலிக்கு ஆசைப்படுகிறார். சினிமாவில் வேண்டுமென்றால் நாற்காலி போட்டு அதை முதல்வர் நாற்காலி என்று சொல்லி அமர்ந்து கொள்ளலாம். ஆனால், நிஜத்தில் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டாமா?ÕÕ என்றார். பேசிமுடித்துவிட்டு மேடையில் இருந்து இறங்கிய ராஜேந்தர், காரில் ஏறி கிளம்ப முயன்றார். அப்போது, கூட்டத்தின் மத்தியில் இருந்து ஒரு வாலிபர் ஆக்ரோஷமாக ராஜேந்தரை கடுமையான வார்த்தைகளால் திட்டினார். திடீரென கையில் வைத்திருந்த பெட்ரோல் குண்டை பற்றவைத்து ராஜேந்தரை நோக்கி வீசியிருக்கிறார். ஆனால், குறிதவறி அந்த குண்டு வெடிக்காமல் மேடையருகே போய் விழுந்தது. திரியில் சரியாக தீப்பிடிக்காததால் குண்டு வெடிக்கவில்லை. கூட்டத்தில் இருந்தவர்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் விரைந்து சென்று அந்த வாலிபரை சுற்றிவளைத்தனர். ராஜேந்தரை காரில் ஏற்றி அந்த இடத்தில் இருந்து அவசர, அவசரமாக அனுப்பிவைத்தனர். பின்னர், அந்த வாலிபரை ஸ்டேஷனுக்கு கொண்டு சென்று விசாரணை நடத்தினர். அவர், காஞ்சிபுரம் ஒன்றிய தேமுதிக துணைச் செயலாளர் உமாபதி (30) என்பதும் சொந்த ஊர் திம்மசமுத்திரம் கிராமம் என்றும் தெரிந்தது. அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் காஞ்சிபுரத்தில் இரு கட்சியினர் இடையே பதற்றம் நிலவுகிறது.
|
இதுபற்றி மேலதிக விபரங்கள் தெரிந்தால்
தமிழ்செய்தி இணையத்தளத்திற்கு அனுப்பி வைக்கலாம். அனுப்பவேண்டிய மின்னஞ்சல்
முகவரி:
Tips@tamilseythi.info |
| |