நெஞ்சுக்கு அநீதி
[தமிழக நேரம் : May 28th, 2009 at 07:06]
இந்திய பாராளுமன்றத் தேர்தலில்,அய்ந்தாம் கட்ட வாக்குப்பதிவு, குறிப்பாக தமிழகத்தில் வாக்குப்பதிவு முடிந்தவுடன்,ஈழக் களமுனையில் போர் தீவிரமாகும் எதிர்பார்த்தது தான்.
மே 16 ந்தேதி இந்திய பாராளுமன்றத் தேர்தல் முடிவுகள் வெளிவந்து கொண்டிருக்கையில், சிங்கள இனவெறி ராணுவம் -தமிழர் மரபுவழி தாயகத்தில் ஆக்ரமிப்பு அடாவடித்தனத்தை வேகப்படுத்தியிருந்தது;அன்னை நிலத்தைக் காக்கும் போராட்டத்தில், தங்கள் உடலை உரமாக்கி தமிழனின் இரத்தச் சூட்டை சிங்கள வெறி நாய்களுக்கு உணர்த்திக் காட்டினர் புலிகள்.
புலித்தளபதிகள் பலரும் தங்கள் இன்னுயிரை ஈந்துவிட்டார்கள் என்ற செய்தி, உண்மையான தமிழ் பற்றாளர்களின் நெஞ்சங்களிலெல்லாம் நெருப்பள்ளிக் கொட்டியது.
மே 17 ந்தேதி- நண்பகலில், தேசியத் தலைவர் குறித்து...சிங்கள ஓநாய்கள் ஊளையிட்டத் தொடங்கின; இந்திய பார்ப்பன ஊடகங்களும் எதிரொலித்தன.
மீண்டும், மே 18 ந்தேதியும்- சிங்களத்தின் கோயபல்ஸ் பிரச்சாரத்தால்,பூமிப்பந்தெங்கும் வாழும் தமிழ் சொந்தங்கள் பதைபதைத்து நின்றனர்.
ஆனால்,வீரத் தமிழ்மகன், பேரினவாதத்திற்கு புறநானூற்றை பொழிப்புரையுடன் சொல்லித்தர வந்துவிடுவான் என்பது மானத்தமிழர்களின் நம்பிக்கையாக இருந்தது.
மே 19 ந்தேதி, உயிரற்ற உடலுக்கு முகமூடியிட்டு தன் சிங்கள வெறி கோரமுகத்தை வெளிக்காட்டினான் ராஜபக்சே.
ஆட்காட்டி கருணா, வாங்கிய கைக்கூலிக்கும்,இன்னபிறவற்றிற்கும் பிணங்காட்டும் வேலையையும் செய்து முடித்தான்.
புலிகளின் அரசியற்பிரிவின் அறிக்கைக்குப் பின்பு, உலகெங்கும் அரண்டுகிடந்த தமிழ் சமுகம் ஆறுதல்பட்டுக் கொண்டது.
"தலைவர் நலம்" என்ற ஒற்றைவரி செய்தி மட்டும் ஆறுதலளித்தாலும், இயக்கத்தின் முன்னோடி தளபதிகளின் வீரமரணம்,ராணுவரீதியான பின்னடைவு, இடம்பெயர்ந்து வாழும் தமிழர்களின் இன்றைய நிலை போன்ற விடயங்கள் தமிழர்களின் உள்ளங்களில் சோகச் சுமையை ஏற்றுகின்றன.
மேலும், நடந்தவைகளை இன்னும் நம்ப மறுக்கிறது மனம் !
தமிழரின் மரபுவழித் தாயகத்தை, சிங்களத்திடமிருந்து மீட்டு...நிதி,நீதி,நிர்வாகம்,காவல்,பாதிக்கப்பட்ட மக்களின் மறுவாழ்வு என சீரோடும்,சிறப்போடும் பிரபாகரன் ஆண்ட தமிழ்மண்ணை, தமிழினத்தின் சுய நிர்ணய உரிமையை, சிங்களப் பேரினவாதம் குதறித் தள்ளியிருக்கிறது.
இந்த இன அழிப்பிற்கு சிங்களத்தை மட்டுமே காரணமாக சொல்லிவிடமுடியாது.கண்மூடி கிடக்கும் சர்வதேச சமுகத்திற்கும்,பதவி/பணத்திற்காக கண்டும் காணாமல் இருக்கும் முகமூடித் தமிழர்களுக்கும் இதில் சமபங்கு உண்டு.
நாடாளுமன்றத் தேர்தலில் 18 எம்.பி களை "கல்லா" கட்டிக்கொண்ட திமுக வின் தலைவர் சக்கரநாற்காலியிலே நேரடியாகவே,டெல்லி சென்றார்;இரயிவேத் துறைக்கும்,சுகாதாரத் துறைக்கும் மன்றாடினார்...போராடினார்.
சிங்களராணுவம், மடுவைத் தாண்டி...மன்னாரை வளைத்து...கிளிநொச்சியும் விழுந்து..ஆனையிறவை கைப்பற்றி...முல்லைத்தீவுக்குள் நுழைந்தது. ஆயிரமாயிரம் தமிழர்கள் கொல்லப்பட்டனர்.அப்போதெல்லாம், கடிதம் எழுதிய/தந்திகொடுத்த மு.க,புறாவை மட்டும் மறந்துவிட்டார்.குடும்பத்தினருக்கு பதவி பெற நேரடியாக டெல்லிக்கு சென்று முகாமிட்டார்.
வகுப்புவாரி பிரதிநிதித்துவத்திற்காக குரல் கொடுத்த பெரியாரின் கை பிடித்து வளர்ந்த மு.க,குடும்பவாரி பிரதிநிதித்துவத்திற்காக டெல்லியில் கை கட்டி நிற்கிறார்.
சென்னை மேடையில் அடிமையால் என்ன செய்யமுடியும்? என்று திமு.கழக உடன்பிறப்புகளிடம் அழுது கூடக் காண்பித்த அதே கருணாநிதி தான்,டெல்லியில் அமைச்சர் பதவிக்காக அடம்பிடித்து அழுதுக் கொண்டிருக்கிறார். அடிமைகளையும் அமைச்சராக்கி அழகுப் பார்க்கும் இந்தியத்தேசியத்தின் சூட்சமம் அண்ணாவின் தம்பிக்கு தான் புரிகிறது.அப்பாவி பெரியார் தொண்டர்களுக்கு புரிய மறுக்கிறது.
ஊழல்/முறைகேட்டில் ஈடுபட்டதாக பாலு மற்றும் ராசா வை அப்பழுக்கற்ற காங்கிரஸ்(?) நிராகரிக்கிறதாம்!
ஸ்பெக்ட்ரம் ஊழலின் கதாநாயகனான ராசாவிற்கும் அமைச்சர் பதவி வேண்டுமாம்!!
ஸ்பெக்ட்ரம் ஊழலை தன் சன் டி.வி முலம் அம்பலப்படுத்திய தயாநிதிக்கும் அமைச்சர் பதவி வேண்டுமாம்!!!
2004-ல் திமுகவின் தயவு தேவைப்பட்டதால் மு.க வின் தாளத்திற்கு காங்கிரஸ் ஆடியது.2009-ல் நிலைமை அப்படியில்லை.காங்கிரஸின் தயவில் தான் திமுக தமிழகத்தில் ஆட்சியில் ஒட்டிக்கொண்டுள்ளதாலேயே, ஈழப்பிரச்னையில் இத்தனை சமரசமும், இத்தனை நாடகங்களும்.
இதைச் சொன்னால் ஒரு மாநில முதல்வராக இதை விட என்ன செய்து விடமுடியும்?நீங்களே சொல்லுங்களேன் என்பது நம் முன் வைக்கப்படும் கேள்வி.
தமிழினத்தலைவனாக மு.க "ஆக்ட்" கொடுக்க பாமரனான நம்மிடம் வசனம் எழுதிக் கேட்பது அவரின் அரசியல் சமரசங்களுக்கெல்லாம் வக்கீல் வேலைப் பார்க்கும் கொளுகைவாதிகள் தான்!
ஜெயலலிதா முதல்வராக இருந்து, மத்திய அரசு இலங்கைக்கு ராணுவ உதவி செய்தால், எதிர் கட்சி வரிசையில் அமர்ந்திருக்கும் மு.க,ஈழத்தமிழனுக்காக எப்படியெல்லாம் அழுது புலம்பி இருப்பார்? எப்படியெல்லாம் வசன ஒப்பாரி வைத்திருப்பார்?முரசொலி, கொத்துக் குண்டுகளின் கொடுமைகளை படம் போட்டு விளக்கியிருக்கும்கலைஞர் டி.வி செய்தியோ பாஸ்பரஸ் குண்டு கொடுரத்தையே விளம்பர இடைவெளிவரை ஒலி,ஒளி பரப்பியிருக்கும்.
தற்போது,இந்திய-இத்தாலிய Hyprid made ராகுல் காந்தியை "இளஞ்சிங்கம்" என வர்ணிக்கும் கருணாநிதி,சோமாலிய குழந்தையாகவே மாறிவிட்ட தமிழ் பிஞ்சுகளை நினைத்து,நினைத்து...அழுது,அழுது..அவரின் கருப்பு கண்ணாடியின் சாயமே கரைந்திருக்கும்.
ஆளும் கட்சியாக இருந்தால் ஒரு நீதி! எதிர்கடசியாக இருந்தால் ஒரு நீதி!! இது நெஞ்சுக்கு அநீதி!!!
-ஈரோட்டுக் கண்ணாடி
|