ஜெனிவா சென்றுள்ள சிறிலங்கா அரசின் உயர்மட்டக்குழு!
[தமிழக நேரம் : February 8th, 2010 at 14:39]
சிறிலங்காவுக்கு எதிரான போர்க்குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபையினருக்கு விளக்கமளிப்பதற்காக சிறிலங்கா அரசின் உயர்மட்டக்குழு ஒன்று ஜெனிவா சென்றுள்ளது. இந்தக்குழுவினர் நாளை செவ்வாய்க்கிழமை ஐ.நா. மனித உரிமைகள் ஆணைக்குழு தலைவர் நவநீதம்பிள்ளையை சந்தித்து பேச்சு நடத்தவுள்ளனர்.
ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையகத்தில் இடம்பெறவுள்ள நாளைய சந்திப்பில் சிறிலங்கா அரசு தரப்பினர், சரணடைந்த விடுதலைப்புலிகளின் தலைவர்கள் சிறிலங்கா படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டதாக முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகாவினால் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டு தொடர்பாக அரசு தரப்பின் மறுப்பினை தெரிவிக்கவுள்ளனர். அத்துடன், இந்த சந்திப்பில் சிறிலங்கா அரசதலைவர் மகிந்தவின் விசேட கடிதமொன்றும் கையளிக்கப்படவுள்ளதாக இராஜதந்திரத் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இன்று ஜெனிவா புறப்பட்டுள்ள சிறிலங்கா அரசுத்தரப்பு குழுவில் மனித உரிமைகள் அமைச்சர் மகிந்த சமரசிங்க, சட்டமா அதிபர் மொஹான் பீரிஸ் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
சிறிலங்கா அரசின் மீது சுமத்தப்பட்டுள்ள மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கள், போர்க்குற்றச்சாட்டுக்கள் ஆகியவை தொடர்பாக தமது தரப்பு விளக்கங்களை முன்வைக்கவுள்ள இந்தக்குழுவினர் -
சிறிலங்காவில் தற்போது ஊடக ஒடுக்குமுறை, மனித உரிமை மீறல்கள் என்பன இடம்பெறவில்லை என்றும் எதிர்காலத்தில் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறாது என்ற உறுதிமொழியை வழங்கவுள்ளனர் என்றும் அறியவருகிறது.
அத்துடன், ஜீ.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகையைப் பெற்றுக்கொள்வதற்காக விசேட அனுமதியொன்றை வெளியிடுமாறு சிறிலங்கா அரசுத்தரப்பினர் மனித உரிமை ஆணைக்குழுவிடம் கோரிக்கைவிடுக்கவுள்ளதாகவும் தெரிகிறது.
|