ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிராக இந்தியா வாக்களிக்கும் நோக்குடன் இருப்பதாக இந்திய பிரதமர் மன்மோகன் சிங் இன்று திங்கட்கிழமை தெரிவித்துள்ளார்.இலங்கைத் தமிழர்களுக்கு சமத்துவம், கௌரம், நீதி, சுயமரியாதை ஆகியவற்றின் அடிப்படையிலான எதிர்காலம் கிடைக்கவேண்டுமென்ற இந்தியாவின் நோக்கத்தை இப்பிரேரணை கொண்டிருக்க வேண்டும் என அவர் கூறினார்.
அமெரிக்க அனுசரணையுடனான தீர்மானத்தின் இறுதியான பிரதியை நாம் இன்னும் பார்வையிடவில்லை. ஆனால் நாம் ஆதரவான மனப்பாங்குடன் உள்ளோம்' என இந்திய நாடாளுமன்றத்தின் லோக்சபாவில் உரையாற்றுகையில் இந்திய பிரதமர் மன்மோகன் சிங் கூறினார்.
இந்திய நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி பிரதீபா பாட்டிலின் உரைக்கு நன்றி தெரிவித்து உரையாற்றும்போதே அவர் இவ்வறிவிப்பை விடுத்தார்.
ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பான அமெரிக்காவின் பிரேரணையின் வாக்கெடுப்பில் இந்தியா பங்குபற்றாமல் தவிர்த்தால் அல்லது இலங்கைக்கு ஆதரவாக இந்தியா வாக்களித்தால் இந்திய மத்திய அமைச்சரவையிலிருந்து தனது அமைச்சர்களை வாபஸ் பெறப் போவதாக திமுக எச்சரித்த பின்னணியில் மன்மோகன் சிங்கின் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
லோக்சபாவிலுள்ள 18 திமுக எம்.பிகளின் ஆதரவானது பிரதமர் மன்மோகன் சிங்கின் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசாங்கம் நிலைத்திருப்பதற்கு அவசியமாகவுள்ளது.
இரண்டாம் இணைப்பு
அமெரிக்காவின் பிரேரணையை இந்தியா ஆதரிக்கும்! நாடாளுமன்றத்தில் பிரதமர் மன்மோகன் சிங் தெரிவிப்பு
ஐ.நா மனித உரிமைச் சபையில் இலங்கை தொடர்பில் அமெரிக்காவினால் முன்வைக்கப்பட்டுள்ள பிரேரணைக்கு இந்தியா ஆதரவாக வாக்களிக்குமென இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் அவர்கள் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
நடைபெற்று வரும் நாடாளுமன்றக் கூட்டத் தொடரின் போது இன்று திங்கட்கிழமை குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் உரையின் போதே பிரதமர் மன்மோகன் சிங் இதனைத் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் தமிழர் பகுதிகளில் இயல்புநிலை திரும்பி வருகிறதென்றும், இலங்கைத் தமிழர்கள் குறித்த நாடாளுமன்ற உறுப்பினர்களின் கவலைகளையும் உணர்வுகளையும் மத்திய அரசு பகிர்ந்துகொள்ளும் எனவும் பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்தார்.
ஐ.நா மனித உரிமைச் சபையின் 19வது கூட்டத் தொடரில் அமெரிக்காவினால் முன்வைக்கப்பட்டுள்ள இறுதி வரைவு அறிக்கை தமக்கு இன்னும் கிடைக்கவில்லை எனினும் அந்த தீர்மானத்துக்கு ஆதரவாக இந்தியா வாக்களிக்கும் எனவும் அவர் தெரிவித்தார்.
இந்திப் பிரதமரின் இந்த அறிவிப்பை தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் வரவேற்றுள்ளனர்.
இலங்கைக்கு எதிராக கொண்டுவரப்படும் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும் என்று திமுக வலியுறுத்தி வந்தது.
இதுதொடர்பாக நாளை உயர்நிலைக் குழுக் கூட்டத்தில் முக்கிய முடிவு எடுக்கப்படும் என திமுக அறிவித்திருந்தது.
இந்தநிலையில் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.