உலகெங்கும் தினமும் ஏழாயிரம் பெண்கள் எச்.ஐ.வி.
பாதிப்புக்குள்ளாவதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபையின் மக்கள் தொகை நிதியத்தின் துணை நிர்வாக
இயக்குநர் பூர்ணிமா மாளே தெரிவிக்கையில்;
எய்ட்ஸ் நோய் பரவுவதை கட்டுப்படுத்த இந்திய அரசு எடுத்துவரும் நடவடிக்கைகள்
பாராட்டத்தக்கவை. இந்தியாவில் குழந்தை திருமண சட்டங்களை அமுல்படுத்துவதில் சமூக
அமைப்புகளும், பொதுநல ஆர்வலர்களும் அதிக தீவிரம் காட்டி வருகின்றனர்.
இதன்மூலம் இளம் வயதிலேயே பெண்கள் பாலியல் ரீதியான உறவுகளுக்கு ஆட்படுவதும்,
எச்.ஐ.வி. பாதிப்புக்கு ஆளாவதும் தடுக்கப்படுகிறது. இந்தியா மட்டுமின்றி, எய்ட்ஸ்
நோய் பரவுவதை கட்டுப்படுத்துவதில், தென்னாபிரிக்காவும் வியட்நாமும் கூட சிறப்பான
பங்காற்றி வருகின்றன.
இருந்தாலும், உலக அளவில் தினமும் 7,000 பெண்கள் எச்.ஐ.வி. பாதிப்புக்கு
ஆளாகின்றனர். குறிப்பாக, சிறுமிகள் மற்றும் இளம் பெண்கள்தான் அதிக அளவில்
பாதிக்கப்படுகின்றனர். அதனால், அவர்களை பாதுகாக்க தற்போதுள்ளதை விட இரட்டிப்பு
நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
செக்ஸ் தொடர்பான உடல்நல சேவைகள் பெண்களுக்கு அதிகளவில் கிடைக்க செய்ய
வேண்டுமெனக் கூறினார்.