|
|
|
|
முகப்பு »
உலகம்
» அமெரிக்க, இந்திய அரசு மாற்றங்களுக்காக காத்திருக்கும் விடுதலைப் புலிகளின் பதிலடி:அனிதா |
|
|
| | |
|
 | |  |
|
அமெரிக்க, இந்திய அரசு மாற்றங்களுக்காக காத்திருக்கும் விடுதலைப் புலிகளின் பதிலடி:அனிதா
HTML clipboardஅனைத்துலக அரசியலில் தீர்க்கமான ஞானம் கொண்ட பிரபாகரன், தனது
அடுத்து நகர்வினை முன்னெடுப்பதற்கு அமெரிக்க, இந்திய அரசு மாற்றங்களை எதிர்பார்த்து
காத்திருக்கின்றார். அந்தவகையில், சிறிலங்கா அரசின் தற்போதைய போருக்கு அடுத்த
வருடமே புலிகள் பதிலளிப்பார்கள் என்று பிரபல ஊடகவியலாளர் அனிதா பிரதாப் எதிர்வு
கூறியுள்ளார்.
"புதினம்" இணையத்தளத்துக்கு வழங்கிய பிரத்தியேக பேட்டியிலேயே அவர்
மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
தமிழீழ தேசியத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களை 1984 ஆம் ஆண்டு இந்திய
சஞ்சிகை ஒன்றுக்காக முதன் முதலாக செவ்வி கண்டவர் அனிதா பிரதாப். இந்திய இராணுவம்
இலங்கையில் நிலைகொண்டிருந்த காலப்பகுதியில் இலங்கையில் போர் இடம்பெற்ற பகுதிகளில்
தனது பணியை மேற்கொண்டிருந்த அனிதா பிரதாப், இலங்கையில் தனது ஊடகவியல் அனுபவம்
தொடர்பில் "இரத்தத்தீவு" என்ற நூலை எழுதியிருந்தார்.
இந்தியாவின் முன்னணி ஊடகங்கள் பலவற்றில் பணியாற்றிய அனிதா பிரதாப், 1999 ஆம்
ஆண்டுவரை சி.என்.என். தொலைக்காட்சியின் தெற்காசியப் பிரிவின் செய்திப் பணிப்பாளராக
கடமையாற்றினார்.
பேட்டியின் முழுவிவரம் வருமாறு:
இலங்கையில் பரவலடைந்துள்ள வன்முறைகளின்
முடிவு எங்கே என்று நீங்கள் கருதுகின்றீர்கள்?
இலங்கையில் இன வன்முறை என்பது கொடிய வளைவுகளாக அதிகரித்துக்கொண்டே உள்ளன.
ஒருகாலத்தில் வன்முறைகள் உச்சக்கட்டத்தில் காணப்படும். பின்னர், குறையும். பிறகு,
மீண்டும் அதிகரிக்கும். இவை உடனடியாக முடிவுக்கு வரும் என்று எனக்குத் தெரியவில்லை.
தற்போதுள்ள நிலையில் மாற்றம் ஏற்படுமானால், இன்னும் அதிகரிக்கும் என்றே நான்
நினைக்கின்றேன்.
தற்போது தனக்குச் சாதகமான சூழ்நிலை நிலவுவதாக சிறிலங்கா அரசு கருதுகின்றது.
அதனால், அது தனது நடவடிக்கைகளை தொடர்ந்து முன்னெடுப்பதில் நாட்டமாகவுள்ளது.
விடுதலைப் புலிகளை இராணுவ ரீதியாக பலமிழக்கச்செய்வதன் மூலம் அவர்களை பேச்சு
மேசைக்கு கொண்டு வரலாம் என்று சிறிலங்கா அரசு எண்ணுகிறது என்று நான்
நினைக்கின்றேன். கடந்த அரசுகளும் இதேபோன்றுதான் செயற்பட்டன. ஆனால், அவர்கள்
நினைத்தது போன்று நடக்கவில்லை.
"என்றாவது
ஒருநாள் நான் இலங்கைக்குச் சென்று பிரபாகரனை சந்தித்து அவரது வாழ்க்கை வரலாறை
எழுதவேண்டும் என்ற நம்பிக்கையுடன் உள்ளேன்."
அரசு இதனை மறுத்திருக்கின்றது. ஆனால், அது உண்மை என்றால், அரச தலைவரின்
உலங்குவானூர்தி அணி மீதான தாக்குதல் பாரதூரமான விடயம். இந்த தாக்குதலானது,
சிறிலங்கா அரசின் "இதயம்" வரை அண்மித்து தாக்குதல் நடத்தக்கூடிய சக்தியை விடுதலைப்
புலிகள் கொண்டுள்ளார்கள் என்பதை காட்டியுள்ளது.
புலிகளின் இவ்வாறான தாக்குதல்களுக்கு பதிலளிப்பதானால், அவர்களை முறியடிக்கும்
முயற்சியில் அரசு இன்னமும் கூடுதலாக செயற்பட வேண்டியிருக்கின்றது.
ஆனால், அவ்வாறான அரசின் பதில் நடவடிக்கையில் பொதுமக்கள் பாதிக்கப்பட்டால்-
மக்கள் ஆதரவின் மூலம்- விடுதலைப் புலிகள் மட்டுமே பலம் பெற்றுக்கொள்வார்கள்.
இலங்கையில் நிலவும் தற்போதைய இராணுவ நிலைமை
குறித்து என்ன நினைக்கின்றீர்கள்? விடுதலைப் புலிகள் இராணுவ ரீதியாக பலமிழந்து
விட்டார்கள் என்று கருதுகின்றீர்களா?
ஆம். விடுதலைப் புலிகள் பலமிழந்து விட்டார்கள் என்ற கருத்துநிலை ஒன்று
உள்ளது.
ஆனால், கடந்த காலத்தை எடுத்துக்கொண்டால், நிகழ்காலம் தமக்கு பாதகமாக
அமையும்போதெல்லாம் புலிகள் தமது நடவடிக்கைகளை 'அடக்கி வாசித்துள்ளார்கள்'.
ஆனால், அக்காலப்பகுதியில் அவர்கள் சோம்பல் முறித்துக்கொண்டோ- நேரத்தை
வீணடித்துக்கொண்டோ இருப்பதில்லை.
அந்தவகையில், அவர்கள் தற்போது பெரும் தாக்குதலுக்கு
தயாராகிக்கொண்டிருக்கின்றார்கள். அதற்கு தம்மை
ஒழுங்கமைத்துக்கொண்டிருக்கின்றார்கள். மீண்டும் எழுந்துவர
தயாராகிக்கொண்டிருக்கின்றார்கள்.
பிரபாகரன் பொறுமையான மனிதர். அவர் நேரத்தை வீணடித்து நான் பார்த்ததே இல்லை.
அவரது மூளை ஏதாவது ஒருவிடயத்தை நோக்கி எந்நேரமும் துடித்துக்கொண்டே இருக்கும்.
விடுதலைப் புலிகள் இயக்கம் மிகச்சிறந்ததொரு கெரில்லா அமைப்பு.
ஆனால், நாட்டின் வலிமை குறையும் நேரங்களில், விடுதலைப் புலிகள் மரபுவழி
இராணுவமாக மாறி சமரிட்டார்கள்.
இந்த வழியை 1990 களின் ஆரம்பப் பகுதிகளில் முயற்சித்த பிரபாகரன், இதனைத்
தொடரமுடியாது என்பதை உணர்ந்துகொண்டார். புலிகளிடம் உள்ள வளங்களைப் பொறுத்தவரை இது
மிகவும் விலை மதிப்பானது என்பதையும் விளங்கிக்கொண்டார்.
இராணுவம் எல்லா இடங்களிலும் ஏககாலத்தில் காணப்படும்போது புலிகள் ஒரு கெரில்லா
அமைப்பாக இருந்து, தமது நேரத்தை நடவடிக்கைகளை மீளத்திட்டமிடுவதிலும் தம்மை மீள
ஒருங்கமைத்துக்கொள்வதிலும் செலவிடுகின்றார்கள்.
இதனை இராணுவ வெற்றியாக அரசு கருதுவது பாரதூரமான பிழையாகும்.
வானின் நீலத்தை கிழித்துக்கொண்டு வரும் மின்னல் போன்று சுருக்கமாகவும்
கூர்மையாகவும் தமது தாக்குதல்களை நடத்துவதில் விடுதலைப் புலிகள் வல்லவர்கள்.
ஆகவே, புலிகளை அடிமட்ட நிலைக்கு கொண்டுவந்துவிட்டோம் என்று அரசு பிழையான
முடிவுக்கு வருவது சரி என்று எனக்குப்படவில்லை.
விடுதலைப் புலிகளுக்கு எதிராக நடத்தப்படும்
தற்போதைய போரில் சிறிலங்கா அரசு தனது இலக்கை அடைந்துவிட்டதாக நீங்கள்
கருதுகின்றீர்களா?
அரசாங்கம் என்பது போர் தொடர்பாகவே சிந்திக்கக்கூடாது. போரை நான்
வெறுக்கின்றேன். போருக்கு ஆதரவளிக்க என்னால் முடியாது. தனது நாட்டு மக்களுக்கு
எதிராக ஒரு போரை நடத்துவது தொடர்பாக எந்த ஒரு அரசும் சிந்திக்கவே கூடாது.
ஆனால், இலங்கையில் அது நடைபெறுகின்றது. அரசு, தனது எதிரிகளுக்கு எதிராக
மட்டுமல்லாமல் தனது சொந்த மக்களுக்கு எதிரான- கீழ்த்தரமான- ஒரு போரை
நடத்திவருகின்றது.
"இன்றைய உலகில்
முழுமையான ஒழுக்கத்துடனும் தனது தலைமைக்கு விசுவாசமாகவும் ஒரு விடுதலை அமைப்பு
உள்ளதென்றால் அது விடுதலைப் புலிகள் இயக்கம் ஒன்றேதான்."
நான் அரசாங்கத்தில் இல்லை. அப்படி இருந்திருந்தால், போரை நடத்துவதற்கான
கட்டாய நிலைக்கு நான் தள்ளப்பட்டால், அமைதியை கொண்டுவருவதற்கான பேச்சுக்களுக்கு ஒரு
கருவியாகவே போரை- கடைசி தெரிவாக- பயன்படுத்தியிருப்பேன்.
அமைதியும் சுபீட்சமும்தான் எந்த அரசினதும் இலக்காக இருக்கமுடியும். போர்
என்பதன் அர்த்தம் முடிவு. போர் எனப்படுவது ஒரு நாட்டின் அமைதிக்கும்
சுபீட்சத்துக்கும் உறுதி நிலைக்குமான முடிவாகவே இருக்கமுடியும்.
இலங்கையைப் பொறுத்தவரை போர்தான் போருக்கு முடிவாக இருக்கமுடியும் போல
தெரிகின்றது. பல தனிநபர்களினதும் குழுக்களினதும் விருப்பத்துக்கு அமையவே போர்
தொடரப்படுகின்றது.
அரசுக்கும் விடுதலைப் புலிகளுக்கும்
இடையில் எதிர்காலத்தில் உடனடிப் பேச்சுக்கள் ஆரம்பமாகும் சாத்தியங்கள் உள்ளனவா?
நிச்சயமாக நடைபெறும். ஆனால், இந்த வருடம் அல்ல. தமது அதிகாரத்தை
இழந்துகொண்டிருக்கும் தலைவர்களைக்கொண்ட இரண்டு நாடுகள் இலங்கையில் அமைதியை
ஏற்படுத்துவதில் பெரும்பங்கு வகிக்கின்றன என்பதை பலர் உணரவில்லை. ஆம். இந்தியாவும்
அமெரிக்காவும்தான் அவை.
இந்த ஆண்டுடன் அமெரிக்காவில் புஷ் பதவி இழக்கின்றார். இந்தியாவில் அடுத்த
ஆண்டு நடைபெறவுள்ள தேர்தலுடன் புதிய அரசியல் முன்னணி ஆட்சிக்கு வரவுள்ளது.
ஆகவே, இன்னும் ஒரு வருடத்துக்குள் சிறிலங்காவில் அமைதிப்பேச்சு எதுவும்
நடைபெறப்போவதில்லை. தற்போது ஏற்பட்டிருப்பது ஒரு வெற்றிடமான காலப்பகுதி.
சிறிலங்கா அரசு, வேகமாகவும் உக்கிரமாகவும் போரில் இறங்கியிருப்பதற்கு இதுவும்
ஒரு காரணம். முக்கியமாக, வரப்போகும் மழை காலத்துக்குப் பின்னர் போரை மேலும்
தீவிரப்படுத்தும்.
தற்போதைய சூழ்நிலையில் இந்தியா என்ன
செய்யவேண்டும் என்று நீங்கள் கருதுகின்றீர்கள்?
இலங்கைப் பிரச்சினை தொடர்பில் இந்தியா மிகவும் கவலை கொண்டுள்ளது. இந்திய
அமைதிப்படை விவகாரத்துக்குப் பின்னர் இலங்கையில் நேரடியான இராணுவத் தலையீட்டை
மேற்கொள்ள இந்தியா தீவிரமாக இல்லை.
ஆனால், பிராந்தியம், பாதுகாப்பு, உபகண்ட உறுதிநிலை ஆகியவை தொடர்பிலேயே
இந்தியா, இலங்கை விவகாரத்தில் மிகவும் தீவிரமாகவுள்ளது.
ஆனால், இலங்கையில் அமைதிப்பேச்சுக்களுக்கு அனுசரணை வழங்குமளவுக்கு
இந்தியாவில் தற்போது ஆட்சியில் உள்ள அரசுக்கு விருப்பமோ நேரமோ இல்லை.
அதற்காக, இந்தியா முற்றுமுழுதாக இலங்கை விவகாரத்திலிருந்து விலகி விட்டதாக
அது அர்த்தமாகிவிடாது. இலங்கையை முழுமையாக போர் சூழ்ந்தநிலை இருக்கக்கூடாது
என்பதில் இந்தியா தெளிவாக இருக்கின்றது.
அண்மையில் இலங்கைக்கான இந்திய
உயர்மட்டக்குழுவினரின் திடீர்ப் பயணம், அதன்பின்னர் வெளியான இந்தியாவின் இராணுவ
உதவி குறித்தான செய்தி ஆகியவை தொடர்பான உங்கள் கருத்து என்ன?
நான் மேற்கூறிய காரணங்களே இந்தப் பயணத்தின் நோக்கமாகும்.
உயர்மட்டக்குழுவினரின் இந்த வருகை வழமையாக நடைபெறுகின்றதொரு பயணமோ அல்லது
பொதுமக்கள் தொடர்பான பயணமோ அல்ல என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.
இந்திய அரசானது அரசியல் குழப்பநிலைக்குள் சிக்கி, தற்போதைய ஆட்சியாளர்கள்
அதிகாரத்தை இழந்து செல்லவேண்டிய நிலையில் தேர்தலை எதிர்நோக்கி வங்குரோத்தான
நிலையில் உள்ளது என்ற கணிப்பீடு சிங்கள அதிகாரப்பீடத்தின் மத்தியில் உள்ளது என்பது
இந்திய அரசுக்கு தெரியும்.
இந்தியாவின் இந்த நிலை சிங்கள ஆட்சிப்பீடத்தின் ஒரு பகுதியினருக்கும் பல
'கண்டுபிடிப்புக்களுக்கு' வித்திட்டிருக்கின்றது. இந்த கண்டுபிடிப்புக்களுக்கு
எதிரான- கடுமையான- தனது எச்சரிக்கையை விடுப்பதற்கே இந்திய உயர்மட்டக்குழு அண்மையில்
கொழும்புக்கு சென்றிருந்தது.
விடுதலைப் புலிகளினதோ சிறிலங்கா அரசினதோ ஆதிக்கநிலையை இந்தியா விரும்பவில்லை.
வெகுதூரத்திலுள்ள அமைதி உடன்பாட்டால் இலங்கையில் அமைதிக்காக ஏற்பட்டுள்ள
வெற்றிடத்தில், வரையறைக்குட்பட்ட வன்முறைகளை கடைப்பிடிப்பதன் மூலம் அரசும்
புலிகளும் சமபலத்தை பேணிக்கொள்ளட்டும். நிலைமை கைமீறிப்போகுமளவுக்கு பாரிய போர்
ஏற்பட்டுவிடக்கூடாது.
இதுவே இந்தியாவின் பாதுகாப்புத்தரப்பினதும் வெளிவிவகாரத் தரப்பினதும் இலங்கை
தொடர்பான பார்வையும் எதிர்பார்ப்பும் ஆகும்.
"பிரபாகரன்
பொறுமையான மனிதர். அவர் நேரத்தை வீணடித்து நான் பார்த்ததே இல்லை. அவரது மூளை ஏதாவது
ஒருவிடயத்தை நோக்கி எந்நேரமும் துடித்துக்கொண்டே இருக்கும்."
தமிழீழ விடுதலைப் போராட்டம் தொடர்பான மேற்கு நாடுகளின் பார்வையில் கொள்கை
மாற்றங்கள் ஏதாவது ஏற்பட்டுள்ளனவா? கனடாவிலும் இத்தாலியிலும் அண்மையில் ஈழத்தமிழ்
ஆதரவாளர்கள் கைது செய்யப்பட்ட சம்பவங்களின் பின்னணியில், இது தொடர்பில் உங்கள்
விளக்கம் என்ன?
புஷ் ஆரம்பித்த பயங்கரவாதத்துக்கு எதிரான போரினால், சுதந்திரத்துக்காகப்
போராடும் அமைப்புக்கள் உட்பட அனைத்து குழுக்களும் பயங்கரவாத அமைப்புக்கள் என்ற
பெயருக்குள் அடக்கப்பட்ட மிகப்பெரிய தவறு இடம்பெற்றிருக்கிறது.
பயங்கரவாதத்துக்கு எதிரான இந்தப் போர் இரண்டு தசாப்தங்களுக்கு முன்னர்
நடைபெற்றிருக்குமானால், நெல்சன் மண்டேலா உலகின் மிகப்பயங்கரமான தீவிரவாதியாக
முத்திரை குத்தப்பட்டு இன்னமும் சிறைவாசம் அனுபவித்துக்கொண்டிருப்பார். அதேவேளை,
மண்டேலா அண்மையில்தான் பயங்கரவாதிகளின் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டிருக்கிறார்.
பயங்கரவாதத்துக்கு எதிரான போர் எனப்படுவது பயங்கரவாதிகளின் நடவடிக்கைகளையும்
விடுதலை அமைப்புக்களின் நடவடிக்கைகளையும் வேறுபடுத்திப் பார்க்கவில்லை. நோர்வேயின்
பிரதி அமைச்சரும் இலங்கையின் அமைதி முயற்சிகளின் அனுசரணையாளருமான விதார் ஹெல்கிசன்
இது தொடர்பில் அருமையான ஆய்வறிக்கை ஒன்றை மேற்கொண்டுள்ளார்.
ஆகவே, உலகின் பார்வையில் விடுதலை அமைப்புக்களும் பயங்கரவாத அமைப்புக்களாக
காணப்படுகின்றன. அந்தவகையில், விடுதலைப் புலிகள் அமைப்பும் பயங்கரவாத அமைப்பாக
கருதப்பட்டு பலநாடுகளில் தடைசெய்யப்பட்டுள்ளன. இவ்வாறு பயங்கரவாத அமைப்புக்களாக
சித்தரிக்கப்பட்ட அமைப்புக்களுடன் அமைதிப்பேச்சுக்களை நடத்த மறுத்து பல நாடுகள்
கதவடைத்துள்ளன. இந்த நடவடிக்கை விடுதலை அமைப்புக்களை அழித்தொழிக்க முயற்சித்துவரும்
அரசுகளின் கைதுகளை பலப்படுத்தியுள்ளன.
தமிழ் மக்களின் உரிமைகள் தொடர்பில் என்ன
நினைக்கின்றீர்கள்?
தமிழ்மக்களுக்கு விடுதலைப் புலிகள் தொடர்ந்து பக்கபலமாக உள்ளார்கள்.
பயங்கரவாதம் தொடர்பில் பேசும் ஐக்கிய நாடுகள் சபையும் ஏனைய நாடுகளும்
பயங்கரவாதத்துக்கு இதுவரை காலமும் ஒரு வரைவிலக்கணம் கொடுக்கவில்லையே என்று நீங்கள்
எப்போதாவது ஆச்சரியப்பட்டதுண்டா? அந்தச் சொல்லை விளக்குவதில் அப்படி என்ன கஷ்டம்
இருக்கின்றது?
அப்பாவி மக்களை காயப்படுத்துவதோ கொலை செய்வதோ அல்லது அவர்களின் உடமைகளுக்குச்
சேதம் விளைவிப்பதோ அவை தொடர்பான எதுவும் பயங்கரவாதமே ஆகும். அப்படியானால், எல்லா
நாடுகளும் சேர்ந்து ஏன் இதனை வரைவிலக்கணமாக கொள்ளக்கூடாது.
ஏனெனில், சுருக்கமாக- தெளிவாக- அர்த்தமளிக்கும் இந்த வரைவிலக்கணம் பல
நாடுகளுக்கு பயங்கரவாதம் தொடர்பான குற்ற உணர்ச்சியை ஏற்படுத்தும்.
"விடுதலைப்
புலிகளினதோ சிறிலங்கா அரசினதோ ஆதிக்கநிலையை இந்தியா விரும்பவில்லை."
| |
 | |  |
 | |  |
|
இப்பகுதியில் உள்ள மேலதிக செய்திகள்
| |
 | |  |
|
|
|
|
|
|
மன்னார் - முழங்காவில் பகுதி சிறீலங்கா இராணுவத்தினரின் வசம்!
|
|
|
|
|