ரணிலுடன் அமெரிக்க அதிபர் பேச்சு – உதவுவதாக வாக்குறுதி

0 9

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், நேற்றுக்காலை சிறிலங்கா பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு உரையாடியுள்ளார்.

நேற்று முன்தினம் சிறிலங்காவில் நடந்த குண்டுவெடிப்புகளில் கொல்லப்பட்டவர்களுக்காக இதன்போது, அமெரிக்க அதிபர், இரங்கல் தெரிவித்துள்ளார்.

அத்துடன், சிறிலங்காவின் தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்த அமெரிக்கா உதவும் என்று சிறிலங்கா பிரதமரிடம், அமெரிக்க அதிபர் உறுதியளித்துள்ளார்.

குற்றவாளிகளை நீதியின் முன் நிறுத்த சிறிலங்காவுக்கு அமெரிக்கா உதவும் என்று அமெரிக்க அதிபர் கூறியதாகவும், தீவிரவாதத்துக்கு எதிரான உலகளாவிய போரில் தமது அர்ப்பணிப்பை தலைவர்கள் மீள உறுதி செய்ய வேண்டும் என்று கோரியதாகவும் வெள்ளை மாளிகையின்  பிரதி ஊடகச் செயலர் ஹோகன் கிட்லி தெரிவித்தார்.

மீண்டும் சொதப்பிய ட்ரம்ப்

சிறிலங்கா பிரதமருடன் நடத்திய தொலைபேசி உரையாடல் தொடர்பாக அமெரிக்க அதிபர் டரம்ப் தனது கீச்சகத்தில் தவறான பதிவு ஒன்றை இட்டு குழப்பினார்.

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசி இரங்கல் தெரிவித்ததாக நேற்று பிற்பகல் அமெரிக்க அதிபர் கீச்சகப் பதிவு ஒன்றை இட்டிருந்தார்.

எனினும் சிறிலங்கா பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுடனேயே அவர் பேசியிருந்தார்.

இந்த தவறு சுட்டிக்காட்டப்பட்டதை அடுத்து, அந்த கீச்சகப் பதிவை நீக்கிய அமெரிக்க அதிபர், பின்னர் சிறிலங்கா பிரதமருடன் பேசியதாக பதிவை இட்டார்.

முன்னதாக நேற்று முன்தினம் குண்டுவெடிப்பில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்து வெளியிட்ட கீச்சக செய்தியிலும் அமெரிக்க அதிபர் சொதப்பியிருந்தார்.

அதில் அவர், 138 மில்லியன் மக்கள் கொல்லப்பட்டதாக குறிப்பிட்டிருந்தார். எனினும் பின்னர் தவறை அவர் திருத்திக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது,

Leave A Reply

Your email address will not be published.