10 நிமிடங்களுக்கு முன்னரும் கொடுக்கப்பட்ட புலனாய்வு எச்சரிக்கை

0 10

சிறிலங்காவில் தீவிரவாத தாக்குதல்கள் நடத்தப்படுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக, வெளிநாட்டு புலனாய்வு அமைப்புகள் எச்சரிக்கை விடுத்திருந்தன என்று சிறிலங்கா அரசாங்கம் ஒப்புக் கொண்டுள்ளது.

கொழும்பில் நேற்று அலரி மாளிகையில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் அமைச்சர் ராஜித சேனாரத்ன இதனைத் தெரிவித்தார்.

“தாக்குதல் நடத்தப்படுவதற்கு 10 நிமிடங்கள் முன்னதாகக் கூட, உள்ளூர் பாதுகாப்பு அதிகாரிகளை வெளிநாட்டு புலனாய்வு அதிகாரிகள் எச்சரிக்கை செய்துள்ளனர்.

ஏப்ரல் 4ஆம் நாள் தொடக்கம், இந்த புலனாய்வு எச்சரிக்கைகள் காலத்துக்குக் காலம் சிறிலங்கா அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டு வந்தது.

48 மணி நேரத்துக்கு முன்னதாகவும், தாக்குதல்கள் நடப்பதற்கு 10 நிமிடங்கள் முன்னதாகவும் கூட எச்சரிக்கை செய்யப்பட்டது.

ஏப்ரல் 4ஆம் நாள் தாக்குதல் நடத்தப்படும் வாய்ப்புள்ளதாக, முதல் முறையாக எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

தற்கொலைக் குண்டுத் தாக்குதல்கள் நடத்தப்படும் வாய்ப்புகள் இருப்பதாகவும் எச்சரிக்கப்பட்டிருந்தது.

குறிப்பாக, கிறிஸ்தவ, கத்தோலிக்க தேவாலயங்கள், விடுதிகள் இலக்கு வைக்கப்படலாம் என்றும் அந்த புலனாய்வுத் தகவல்கள் எச்சரித்திருந்தன.

பெயர்களை குறிப்பிட்டு எச்சரிக்கை

அதற்குப் பின்னர் தேசிய புலனாய்வுப் பிரிவின் தலைவர் சிசிர மென்டிஸ்,  பாதுகாப்புச் செயலரின் சார்பில், ஏப்ரல் 9ஆமு் நாள், இதுபற்றி காவல்துறை மா அதிபருக்கு தெரியப்படுத்தியிருந்தார்.

தேசிய தௌஹீத் ஜமாத் அமைப்பின் பெயரைக் குறிப்பிட்டு, அதன் உறுப்பினர்களான சிலரது பெயரையும் குறிப்பிட்டு, தற்கொலைத் தாக்குதல்களில் ஈடுபடும் வாய்ப்புகள் இருப்பதாக அந்த அறிக்கையில் கூறியிருந்தார்.

தௌஹீத் ஜமாத்  தலைவர்களான ஷரான் ஹஷ்மி, ஜல்ஹால் ஹிடால், சஜிட் மௌலவி, ஷல்ஹான், ஆகியோர் தாக்குதல்களை ஒருங்கிணைப்பதற்காக சிறிலங்கா வந்துள்ளனர் என்றும் அவர் தகவல் தெரிவித்திருந்தார்.

இருட்டில் இருந்த ரணில்

அதன் பின்னர் பிரதி காவல்துறை மா அதிபர் பிரியலால் தசநாயக்க, ஏப்ரல் 11ஆம் நாள், அமைச்சரவைப் பாதுகாப்பு பிரிவு,  நீதித்துறை பாதுகாப்பு பிரிவு, முன்னாள் அதிபர்களுக்கான பாதுகாப்புப் பிரிவு, இராஜதந்திரிகள் பாதுகாப்பு பிரிவுகளுக்கு இதுபற்றி அறிவித்திருந்தார்.

எனினும், பிரதமர் பாதுகாப்புப் பிரிவுக்கோ, அதிபர் பாதுகாப்புப் பிரிவுக்கோ அவர் அறிவிக்கவில்லை. பிரதமரின் பாதுகாப்பு அதிகாரிகளுக்குக் கூட தெரியப்படுத்தப்படவில்லை. பிரதமர் எதுவும் அறியாதவராக இருந்தார்.

வெளிநாட்டுத் தொடர்புகள்

இந்த அடிப்படைவாத அமைப்புக்கு வெளிநாட்டு தொடர்புகள் இருப்பதற்கு சாத்தியங்கள் உள்ளன.

அனைத்துலக தொடர்புகள் குறித்தும், எவ்வாறு தற்கொலைக் குண்டுதாரிகளை உருவாக்கினார்கள் என்றும், எவ்வாறு வெடிபொருட்களை பெற்றார்கள் என்றும் விசாரணைகள் நடத்தப்படுகின்றன.

அழைப்பு இல்லை

கடந்த டிசெம்பர் மாதத்துக்குப் பின்னர் நடந்த பாதுகாப்புச் சபைக் கூட்டங்களுக்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்கவோ, பாதுகாப்பு இராஜங்க அமைச்சர் ருவான் விஜேவர்த்தனவோ அழைக்கப்படவில்லை.

சிறிலங்கா அதிபர் வெளிநாடு சென்றபோது பதில் பாதுகாப்பு அமைச்சராக யாரையும் நியமிக்கவில்லை. அதனால் பேரழிவு ஏற்பட்டபோது பாதுகாப்பு அமைச்சுக்கு அரசியல் தலைமைத்துவம் வழங்க யாரும் இருக்கவில்லை.

ரணிலின் உத்தரவை ஏற்க மறுத்த பாதுகாப்புச்சபை

குண்டுவெடிப்பு நடந்த பின்னர் பாதுகாப்புச் சபைக் கூட்டத்துக்கு சிறிலங்கா பிரதமர் ரணில் விக்ரமசிங்க அழைப்பு விடுத்தார். ஆனால் அதன் உறுப்பினர்கள் யாரும் அந்தக் கூட்டத்தில் பங்கேற்கவில்லை.

பிரதமர் பாதுகாப்பு அமைச்சுக்கு விரைந்து சென்று ஒரு கூட்டத்திற்கு அழைப்பு விடுத்தார். ஆனால் 20 நிமிடங்கள் கழித்தும் எவரும் வரவில்லை.  அதனால் பாதுகாப்பு  இராஜாங்க அமைச்சரின் அறையில் காத்திருக்க வேண்டியிருந்தது.

பிரதமரின் அழைப்பை பாதுகாப்புச் சபை ஏற்காத சம்பவம் நாட்டின் வரலாற்றில் முதல்முறையாக- இடம்பெற்றிருக்கிறது.

நாட்டின் அதிபரால் நியமிக்கப்பட்டவர் பிரதமர், அரசியலமைப்பின் படி மக்களால் தெரிவு செய்யப்பட்டவர். பாதுகாப்புச் சபை அவரது அழைப்பை ஏற்க மறுத்திருக்கிறது.

பாதுகாப்பு அமைச்சுக்கு சென்ற பிரதமர், 20 நிமிடங்கள் அறையில் காத்திருந்த பின்னரே அனுமதிக்கப்பட்டார். அதன் பின்னரே தேவையான உத்தரவுகளை வழங்கினார்.

பிரதமர் பிற்பகலில் மற்றொரு பாதுகாப்புக் குழு கூட்டத்திற்கு அழைப்பு விடுத்த போதும்,  யாரும் அக்கறை காட்டவில்லை. அவர்கள் அந்தக் கூட்டத்துக்கு வராததற்கு உயர்மட்ட உத்தரவே காரணம்.

மன்னிப்புக் கோருகிறது அரசாங்கம்

அரசாங்கம் இந்தச் சம்பவங்களுக்கான பொறுப்பை தட்டிக் கழிக்கவில்லை. இதற்காக மன்னிப்புக் கோருகிறது.

இந்தச் சம்பவம் தொடர்பாக முன்னெச்சரிக்கை வழங்கப்பட்டும், அதில் அக்கறை செலுத்தாத காவல்துறை மா அதிபர் உடனடியாக பதவி விலக வேண்டும்.

அவ்வாறு செய்யாவிடின், சம்பந்தப்பட்ட அமைச்சர் என்ற வகையில்,  அவர் மீது நடவடிக்கை எடுத்து, புதிய காவல்துறை மா அதிபரை நியமிக்குமாறு  சிறிலங்கா அதிபரிடம் அமைச்சரவை கோரிக்கை விடுக்கும்.” என்றும் அவர் தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.