சிறிலங்காவின் பாதுகாப்புக்கு சீனா பாரிய உதவி – மைத்திரியிடம் சீன அதிபர் உறுதி

0 12

சிறிலங்காவின் தேசிய பாதுகாப்பை வலுப்படுத்துவதற்கும்,  தீவிரவாதத்தை அடியோடு அழிப்பதற்கும், சாத்தியமான அனைத்து வழிகளிலும் உதவிகளை வழங்கத் தயாராக இருப்பதாக, சீனா உறுதி அளித்துள்ளது.

சீனாவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, நேற்று பீஜிங்கில் சீன அதிபர் ஷி ஜின்பிங்கைச் சந்தித்துப் பேசிய போதே இந்த உறுதிமொழி அளிக்கப்பட்டது.

எந்த நேரத்திலும் எந்த உதவியும் வழங்குவோம்

சீன அதிபர் மாளிகையில் நடந்த இந்தச் சந்திப்பின் போது,

“சீனா எப்போதும் இலங்கையில் கைகோர்த்து செல்ல தயாராக உள்ளது. தீவிரவாத சவால்களில் இருந்து மீண்டு வரும் சிறிலங்காவுக்கு சீன அரசாங்கம், எந்த நேரத்திலும், எந்த உதவியையும் வழங்கத் தயாராக இருக்கிறது.

நாட்டின் எந்தப் பகுதியில் எந்தவகையான தீவிரவாதம் எழுச்சி பெற்றாலும் அதனை நாங்கள் எதிர்க்கிறோம்.

சிறிலங்கா அதிபரின்  கோரிக்கைக்கு அமைய, சிறிலங்கா படைகளுக்கு தற்போதைய அவசர நிலைமைகளில், சீன அரசாங்கம் 2600 மில்லியன் ரூபா பெறுமதியான கொடையை வழங்க சீன அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

1500 மில்லியன் ரூபா பெறுமதியான 100 ஜீப் வாகனங்களையும், ஏனைய பல கருவிகளையும் சிறிலங்கா காவல்துறைக்கு உடனடியாக வழங்குவதற்கும் இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது.” என்று சீன அதிபர் ஷி ஜின்பிங் தெரிவித்துள்ளார்.

தொழில்நுட்ப உதவி கோரினார் மைத்திரி

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் பற்றியும் அதனை அடுத்து சிறிலங்கா அரசாங்கம் எடுத்துள்ள புதிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்தும், சீனத் தலைவருக்கு சிறிலங்கா அதிபர் எடுத்து விளக்கினார்.

சமூக ஊடகங்களின் மூலம் தவறான பரப்புரைகளைச் செய்து, தீவிரவாதத்தைப் பரப்பும,  நபர்களை கண்டறிவதற்கான தொழில்நுட்ப நிபுணத்துவமோ, கருவிகளோ சிறிலங்காவிடம் இல்லை என்று சிறிலங்கா அதிபர் இதன்போது குறிப்பிட்டார்.

விரைவில் சீன நிபுணர்கள் கொழும்புக்கு

அதற்குப் பதிலளித்த சீன அதிபர், சிறிலங்காவுக்கு உடனடியாக தேவையான  தொழில்நுட்ப நிபுணத்துவத்தையும், கருவிகளையும் உடனடியாக வழங்குவதாக உறுதியளித்துள்ளார்.

இந்த விவகாரங்களில் உதவுவதற்காக சிறிலங்காவுக்கு தொழில்நுட்ப குழுவொன்றை விரைவில் அனுப்பி வைப்பதாகவும் சீன அதிபர் தெரிவித்துள்ளார்.

புலனாய்வு பரிமாற்றம்

பாதுகாப்புத் துறையில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்தும், இரண்டு நாடுகளுக்கு இடையில் புலனாய்வு பரிமாற்றங்களைச் செய்வது குறித்தும் இந்தப் பேச்சுக்களின் போது கவனம் செலுத்தப்பட்டது.

சீனாவின் நிதியுதவியுடன் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தித் திட்டங்களின் முன்னேற்றங்கள் குறித்தும் இந்தச் சந்திப்பின் போது கலந்துரையாடப்பட்டது.

பாதுகாப்பு ஒத்துழைப்பு உடன்பாடு

இரு நாடுகளின் தலைவர்களுக்கும் இடையில் நடந்த பேச்சுக்களை அடுத்து, பாதுகாப்பு துறையில், நெருங்கிய ஒத்துழைப்பை ஏற்படுத்தும் வகையிலான உடன்பாடு ஒன்றும் கையெழுத்திடப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.