மயிலிட்டியில் அமெரிக்க செனட் உறுப்பினர்கள் – பாதுகாப்பு சபை கூட்டத்தில் ஆராய்வு

0 26

அமெரிக்க செனட் சபையின் வெளிவிவகாரக் குழு உறுப்பினர்கள் யாழ்ப்பாணம், மயிலிட்டிப் பகுதிக்குச் சென்று ஆய்வு நடத்தியது குறித்து தேசிய பாதுகாப்புச் சபைக் கூட்டத்தில் ஆராயப்படும் என்று சிறிலங்கா பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்த்தன தெரிவித்துள்ளார்.

பியகமவில் நேற்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த அவர்,

“அமெரிக்க செனட் உறுப்பினர்கள் மயிலிட்டிப் பகுதிக்குச் சென்று ஆய்வு நடத்தியது குறித்து நான் அறிந்திருக்கவில்லை.

எனினும், சிலர் அங்கு சென்றிருந்தது குறித்து, அறிந்ததும், இந்த விடயத்தை ஆராய்ந்து எனக்குத் தெரியப்படுத்துமாறு உடனடியாக அறிவுறுத்தியிருந்தேன். தேசிய பாதுகாப்புச் சபைக் கூட்டத்தில் இதுகுறித்து விளக்கமளிக்கப்படும்.

எதிர்காலத்தில் இதுபோன்று நடக்காமல் இருப்பது குறித்து தேசிய பாதுகாப்பு சபையில் உறுதி செய்யப்படும்.

ஏனென்றால் யாரும் நாட்டிற்குள் நுழைந்து இடங்களை எடுத்துக் கொள்ள முடியாது, அதற்கென ஒரு நடைமுறை உள்ளது.” என்றும் அவர் கூறியுள்ளார்.

அமெரிக்க செனட் உறுப்பினர்கள் இருவர் கடந்தவாரம் யாழ்ப்பாணம் சென்று பல்வேறு தரப்பினரையும் சந்தித்துப் பேசியிருந்தனர்.

அத்துடன் இராணுவப் பிடியில் இருந்து விடுவிக்கப்பட்ட மயிலிட்டிப் பகுதிக்கும் சென்று, மீள்குடியேற்றம் உள்ளிட்ட பணிகளைப் பார்வையிட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.