சக்திவாய்ந்த நாட்டின் இராணுவ முகாமில் ஐ.எஸ் தலைவர் – பேராயர் மல்கம் ரஞ்சித் தகவல்

0 11

ஈஸ்டர் ஞாயிறு தாக்குல், ஒரு அனைத்துலக, சதி என்றும், அனைத்துலக சக்திகளின் நலன்களுக்கு துணைபோன சிறிலங்கா அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்பும் நேரம் வந்துள்ளதாகவும், கத்தோலிக்க திருச்சபையின் பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் வேண்டுகோள் தெரிவித்துள்ளார்.

ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல்களில் சேதமடைந்த நீர்கொழும்பு கடுவாப்பிட்டிய செபஸ்தியார் தேவாலயம் மறுசீரமைக்கப்பட்ட பின்னர் நேற்று திறந்து வைக்கப்பட்ட நிகழ்வில் உரையாற்றிய போதே அவர் இந்த வேண்டுகோளை விடுத்தார்.

ஒரு அனைத்துலக சதி

“ஈஸ்டர் ஞாயிறு  தாக்குல், இஸ்லாமிய தீவிரவாதிகளின் வேலை மட்டுமல்ல அது ஒரு அனைத்துலக, சதி.

குண்டு தாக்குதல்களை நடத்திய இளைஞர்கள், அனைத்துலக சதிகாரர்களால் பயன்படுத்தப்பட்டுள்ளனர். அனைத்துலக சக்திகளுக்கு உலகளாவிய முஸ்லிம்கள் பலியாகி விட்டனர்.

உலகெங்கிலும் அழிவுகளை உருவாக்க இஸ்லாமிய சித்தாந்தங்களைப் பயன்படுத்தும் சதிகாரர்களுக்கு எதிராக, உலகளாவிய முஸ்லிம்கள் துணை நிற்க வேண்டும்.

தங்கள் அபிலாசைகளை நிறைவேற்ற இஸ்லாமிய மதத்தை அவமதிக்கும் சக்திகளுக்கு எதிராக போராட, அவர்கள் பிற மத மக்களுடன் சேர வேண்டும்.

இராணுவ முகாமில் அல்-பாக்தாதி

ஐ.எஸ் அமைப்பின் தலைவர் அபுபக்கர் அல்-பாக்தாதி, உலகின் மிக சக்திவாய்ந்த நாடு ஒன்றினால் நடத்தப்படும் இராணுவ முகாமில் இருப்பதாக ஒரு அறிக்கையை நான் பார்த்தேன்.

அந்த நாட்டின் பெயரை நான்  குறிப்பிடமாட்டேன், ஆனால் ஐ.எஸ் தலைவர் அந்த சக்திவாய்ந்த நாட்டினால் நடத்தப்படும் ஒரு இராணுவ முகாமில் இருக்கிறார் என்பது தெளிவு.

ஐ.எஸ் தலைவர்கள், இந்த சக்திவாய்ந்த நாட்டின் சொந்த நலன்களை நிறைவேற்ற பயன்படுத்தப்படுகிறார்கள் என்று நாங்கள் கவலைப்படுகிறோம். குண்டு தாக்குதல்களைப் பற்றி இந்த நாட்டுக்குத் தெரியுமா என்பதே எமது கேள்வி.

பிளவை ஏற்படுத்த முயற்சி

சிலர் சிங்கள – முஸ்லிம் பிளவை ஏற்படுத்தி, நாட்டில் அமைதியின்மையை உருவாக்க முயற்சிக்கிறார்களா என்றும் நாங்கள் சந்தேகம் கொள்கிறோம்.

இஸ்லாமிய சித்தாந்தங்கள் காரணமாக, இளைஞர்கள் குழு, ஈஸ்டர் ஞாயிறு படுகொலையை நிகழ்த்தியதாக நான் நம்பவில்லை

பாப்பரசர் பிரான்சிஸ், சிறிலங்கா மைத்ரிபால சிறிசேனாவை சந்தித்தபோது, இன்று உலகில் ஏன் பல மோதல்கள் நிகழுகின்றன என்று கேட்டார்.தனக்குத் தெரியாது என்று சிறிலங்கா அதிபர் கூறிய போது, ஆயுதங்களை அதிக அளவில் உற்பத்தி செய்வதால் தான் என்று   பாப்பரசர் கூறியிருந்தார்.

ஐ.நாவை நம்ப முடியாது

ஐந்து நாடுகளால் கட்டுப்படுத்தப்படுவது தான் ஐ.நா. அவர்களின் நோக்கங்களை நிறைவேற்றுவதற்காக மட்டுமே அது உள்ளது.  ஐ.நா.வை யாரும் நம்ப முடியாது.

குண்டுவெடிப்பினால் பாதிக்கப்பட்டவர்களை ஐ.நா. அதிகாரிகள் யாரும் பார்வையிடவில்லை. ஆனால் சர்ச்சைக்குரிய மருத்துவர் உட்பட தாக்குதலுக்குப் பின்னர் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களை மட்டுமே பார்வையிட்டனர்.

இந்த நாட்டில் தலைவர்கள் துணிச்சலான முடிவுகளை எடுக்க பயப்படுகிறார்கள்.  அனைத்துலக சக்திகளை சுதந்திரமாக நடமாட அனுமதித்ததே இதற்குக் காரணம்.

தடுத்திருக்க முடியாதா?

ஈஸ்டர் ஞாயிறு பேரழிவை தவிர்க்கப்பட்டிருக்க முடியுமா என்று கேட்கிறார்கள். நிச்சயமான அதைத் தவிர்த்திருக்கலாம்.

தாக்குதல்கள் குறித்து பல முறை சிறிலங்கா அரசாங்கத்துக்கு எச்சரித்ததாக இந்திய தூதரகம் எனக்குத் தெரிவித்தது.

விசாரணைகளில் நம்பிக்கையில்லை

தாக்குதல்கள் குறித்து விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஒரு ஆணைக்குழுவின் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டதாக எமக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாங்கள் அதைப் பார்க்கவில்லை.

இது குறித்து மற்றொரு குழு விசாரித்து வருகிறது. இந்த ஆய்வுகள் எதிலும் எங்களுக்கு நம்பிக்கை இல்லை.

அரசியல் தலைவர்கள் தங்கள் விருப்பங்களுக்கும், ஆர்வங்களுக்கும் ஏற்ப ஒரு அறிக்கையை சமர்ப்பிக்க ஒரு அமைக்கிறார்கள் என்று தெரிகிறது.

1970 களில் இருந்து நடந்த பல சம்பவங்கள் குறித்த விசாரணைகள் மூடி மறைக்கப்பட்டுள்ளன.

புலனாய்வு அமைப்புகள் சீரழிப்பு

ஒரு காலத்தில் மிகவும் வலுவாக இருந்த புலனாய்வு அமைப்புகளை இந்த அரசாங்கம் சீரழித்து விட்டது.

அனைத்துலக அமைப்புகள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் தேவைகளை பூர்த்தி செய்வதற்காகவே இது செய்யப்பட்டது.

வனத்தவில்லுவில் தீவிரவாதிகள் பயன்படுத்திய பயிற்சி முகாமை படையினர் கண்டறிந்த போது, கைது செய்யப்பட்ட தீவிரவாதிகள் விடுவிக்கப்பட்டனர்.

மைத்திரி – ரணில் மோதலின் விளைவு

நிறைவேற்று அதிகாரத்துக்கும், நாடாளுமன்றத்துக்கும் இடையிலான மோதலின் விளைவாக பாதுகாப்பு சபை கூட்டங்களை நடத்த முடியவில்லை.

அரசியல் தலைவர்கள் குண்டு தாக்குதல்கள் குறித்து முன் எச்சரிக்கைகளை புறக்கணித்தனர். இதன் விளைவாக கிட்டத்தட்ட 300 பேர் கொல்லப்பட்டனர்.

பதவியை விட்டு வெளியேறுங்கள்

ஆற்றலுள்ளவர்களிடம் நாட்டை ஒப்படைத்து விட்டு வீட்டுக்குச் செல்லுமாறு இந்த தலைவர்களிடம் கூறுகின்ற நேரம் வந்துள்ளது.

தாக்குதல்களுக்கு காரணமானவர்களை மன்னிக்குமாறு கத்தோலிக்கர்களிடம் நான் கூற விரும்புகிறேன்.

முஸ்லிம்களுக்கு எதிரான கோபம் வேண்டாம். அவர்களுக்கு தீங்கு செய்யாதீர்கள். அவர்கள் குற்றம் சாட்டப்பட வேண்டியவர்கள் அல்ல.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.