வேட்புமனு தாக்கலின் பின்னரே யாருக்கு ஆதரவு என்று முடிவு – கூட்டமைப்பு

0 10

வரும் அதிபர் தேர்தலில் போட்டியிடும் எந்தவொரு கட்சி அல்லது வேட்பாளரையும், ஆதரிக்கும் விடயத்தில், தமிழ்த் தேசிய பிரச்சினைக்கு அர்த்தமுள்ள வகையில் அதிகாரப்பகிர்வு என்ற விடயமே, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதான கரிசனையாக இருக்கும் என்று கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

“தேசியப் பிரச்சினைக்கான தீர்வு மேலும் தாமதிக்கப்படக் கூடாது. ஏற்கனவே பல ஆவணங்கள் இணங்கிக் கொள்ளப்பட்டுள்ளன. அவற்றின் அடிப்படையில் தீர்வு ஒன்று காணப்பட வேண்டும்.

இணங்கிக் கொள்ளப்பட்ட அவ்வாறான ஆவணங்களில், மகிந்த ராஜபக்ச ஆட்சிக்காலத்தில் பேராசிரியர் திஸ்ஸ விதாரண தலைமையிலான அனைத்துக்கட்சி பிரதிநிதிகள் குழுவினால் சமர்ப்பிக்கப்பட்ட அரசியலமைப்பு யோசனையும் உள்ளடங்கியுள்ளது.

அதிபர் தேர்தலில் போட்டியிட விரும்பும் எந்தவொரு வேட்பாளருடனும், பேசுவதற்கு கூட்டமைப்பு தயாராக உள்ளது.

தேர்தலுக்கான வேட்புமனுக்கள் பெற்றுக் கெபாள்ளப்பட்ட பின்னரே, எமது ஆதரவு யாருக்கு என்பது குறித்து முடிவு செய்வோம்.

எந்த வேட்பாளருடன் பேச்சு நடத்தவும் நாங்கள் தயாராக இருக்கிறோம்.

இராணுவத்திடம் உள்ள காணிகள் விடுவிப்பு, பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களின் விடுதலை போன்ற ஏனைய கோரிக்கைகளும் இருக்கின்றன.

ஆனால், தேசியப் பிரச்சினைக்கான தீர்வே பிரதான கோரிக்கையாக இருக்கும்” என்றும் அவர் கூறினார்.

Leave A Reply

Your email address will not be published.