ஆட்சிக்கு வந்தவுடன் சிறையிலுள்ள படையினரை விடுவிப்பேன் – கோத்தா வாக்குறுதி

0 6

தாம் ஆட்சிக்கு வந்தவுடன், முதல் வேலையாக, தற்போதைய அரசாங்கத்தினால் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அனைத்து படையினரையும் விடுதலை செய்யப் போவதாக வாக்குறுதி அளித்துள்ளார் பொதுஜன பெரமுனவின் அதிபர் வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ச.

அனுராதபுர- சல்காடோ மைதானத்தில் இன்று பிற்பகல் நடந்த பொதுஜன பெருமுனவின் முதலாவது தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் உரையாற்றிய போது அவர் இந்த வாக்குறுதியைக் கொடுத்திருக்கிறார்.

“ நான் அதிபராகப் தெரிவு செய்யப்பட்டால், பதவியேற்றவுடன், பொய்யான குற்றச்சாட்டுகளின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ள சிறிலங்கா படையினர் அனைவரையும்  விடுதலை செய்வேன்.

பொய்யாக குற்றச்சாட்டுகளின் பேரில், இராணுவ புலனாய்வு அதிகாரிகள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

என்னை ஒரு இராணுவ மனிதராக அரசாங்கம் பரப்புரை செய்கிறது. ஒரு இராணுவ மனிதராகத் தான், நான், 2009இல் விடுதலைப் புலிகளை தோற்கடிப்பதை உறுதிப்படுத்த முடிந்தது.

இராணுவ மனிதராக இல்லாவிட்டால், போரில் வெற்றியைப் பெற்றிருக்க முடியாது.

முன்னைய அரசாங்கம்  போரை முடிவுக்குக் கொண்டு வந்தது. ஆனால், தற்போதைய அரசாங்கம் பாதுகாப்பை உறுதிப்படுத்த தவறி விட்டது.” என்றும் அவர் குற்றம்சாட்டினார்.

அனுராதபுரவில் இன்று நடந்த கோத்தாபய ராஜபக்சவின் முதலாவது பரப்புரைக் கூட்டத்தில், சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த திசநாயக்கவும் கலந்து கொண்டார். அவர் கோத்தாபய ராஜபக்சவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.