நாட்டுக்கு சாதகமற்ற உடன்பாடுகள் ரத்து செய்யப்படும் – சஜித்

0 3

எதிர்காலத்தில் நாட்டிற்கு சாதகமற்ற அனைத்துலக உடன்பாடுகள் ரத்து செய்யப்பட்டு சாதகமான ஒப்பந்தங்கள் மட்டுமே செயற்படுத்தப்படும் என்று புதிய ஜனநாயக முன்னணியின் அதிபர் வேட்பாளர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று பல்கலைக்கழக கல்வியாளர்களுடன் நடத்திய கலந்துரையாடலின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

‘வெளிநாட்டு வணிக உடன்பாடுகள் முக்கியம், பாதுகாப்பு உடன்பாடுகள் முக்கியம், அரசியல் உடன்பாடுகள் முக்கியம்.

எனினும், இந்த உடன்பாடுகளின் ஒப்பீட்டு நன்மைகளை எமது நாடு அனுபவிக்கவில்லை. ஒப்பீட்டு நன்மை இல்லாத இடங்களில், அத்தகைய உடன்பாடுகள் நாட்டுக்குத் தீங்கு விளைவிக்கும்.

அண்மையில், அக்சா, சோபா, எம்சிசி  உள்ளிட்ட பல்வேறு உடன்பாடுகள் குறித்து கடுமையாக விவாதிக்கப்பட்டன.

இந்தக் கொள்கைகள் குறித்து முடிவுகளை எடுக்கும் போது நாம் என்ன செய்ய வேண்டும்?

உடன்பாடுகளின் அடிப்படை, நன்மைகள் – தீமைகள் முன்னேற்றங்கள் மற்றும் குறைபாடுகள் ஆகியவற்றை நாம் கவனிக்க வேண்டும்.

தனிப்பட்ட கருத்துக்களை ஒதுக்கி வைத்து விட்டு, நாபடு என்பதை மையப்படுத்தி இதையெல்லாம் பார்க்க வேண்டும்.

நாட்டுக்கு நன்மை பயக்கும் என்றால் அதை செயற்படுத்த ஒப்புக்கொள்கிறோம். இல்லையென்றால் அதனை நிராகரிக்கிறோம்.

அரசியல் உறவுகளுக்காக தேசிய நலன்களை தியாகம் செய்து, தனிப்பட்ட உறவுகளின் அடிப்படையில் உடன்பாடுகளுக்கு வருவதற்கு ஏற்கனவே விவாதங்கள் நடத்தப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

தனிப்பட்ட நலன்களை பூர்த்தி செய்வதற்காக, நாட்டின் தேசிய நலனையும் தேசிய அடையாளத்தையும் தியாகம் செய்வது தேசபக்தியா என்று நாடு கேள்வி எழுப்ப வேண்டிய நேரம் வந்து விட்டது.” என்றும் அவர் கூறினார்.

Leave A Reply

Your email address will not be published.