யாழ். நடேஸ்வரா கல்லூரியின் கட்டடத்தை விடுவிக்க வலியுறுத்தல்!

0 241

பொலிஸாரின் பயன்பாட்டிலுள்ள யாழ். நடேஸ்வரா கல்லூரியின் கட்டடத்தையும், கிணற்றையும் உடனடியாக விடுவிக்க வடமாகாண பிரதி பொலிஸ்மா அதிபர் உத்தரவிட்டுள்ளதாக வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

மாவட்ட பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகளுடன் யாழில் இன்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற சந்திப்பை தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

யாழ். மாவட்டத்தின் சட்டம் ஒழுங்கு தொடர்பான பிரச்சினைகள் குறித்து விவாதிக்கும் வகையில் இவ்விசேட கலந்துரையாடல் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

குறித்த பொலிஸ் அதிகாரிகளுடன் கலந்துரையாடப்பட்ட விடயங்கள் தொடர்பாக ஊடகங்களுக்கு விளக்கமளித்த அவர், ”யாழ். மாவட்டத்தில் பாரியளவில் குற்றச்செயல்கள் குறைந்துள்ள போதிலும் தற்போது மணல் கடத்தல் என்பதே பாரிய பிரச்சினையாக இருப்பதாகவும் அதனை தடுக்க நடவடிக்கை எடுத்து வருவதாகவும் பொலிஸார் கூறினர்.

தொடர்ந்து யாழ். மாவட்டத்தின் தீவக பகுதிகளில் இறைச்சிக்காக கால்நடைகள் களவாடப்படுகின்றமை குறித்து விவாதிக்கப்பட்டது. இதன்போது மாட்டிறைச்சி உண்பதை தடைசெய்தால் என்ன? என பொலிஸார் வினவினர்.

ஆனால் அவ்வாறு செய்தால் அது மாட்டிறைச்சி உண்பவர்கள் மத்தியில் பாரிய எதிர்ப்பை கிளப்பிவிடும் என்ற காரணத்தினால் அவ்யோசனையை நாம் நிராகரித்தோம். அதற்கேற்ப, கால்நடை திருட்டை தடுக்க தாம் உச்சக்கட்ட நடவடிக்கை எடுப்பதாக பொலிஸார் உறுதியளித்தனர்.

மேலும் வடமாகாணத்தில் தமிழ் பொலிஸார் இல்லாமை தொடர்பாக பேசப்பட்டபோது 81 ஆண் தமிழ் பொலிஸாரும், 2 பெண் தமிழ் பொலிஸாரும் சேவையில் இணைத்து கொள்ளப்பட்டுள்ளதாக கூறியிருந்தார்கள்.

தமிழ் இளைஞர்களை பொலிஸில் இணையுமாறு கூறுவது தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் என்னை விமர்சித்திருந்தார். ஆனால் தமிழ் பொலிஸார் இல்லாமையினால் தமிழ் மக்களே அதிகம் பாதிக்கப்படுகின்றார்கள்” எனத் தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.