புலனாய்வுப் பிரிவை வலுப்படுத்த சிறிலங்காவின் உதவியைக் கோரும் இந்தியா

0 41

புலனாய்வுப் பிரிவுகளை வலுப்படுத்துவதற்கு சிறிலங்காவின் உதவியை எதிர்பார்ப்பதாக இந்திய இராணுவத் தளபதி ஜெனரல் பிபின் ராவத் தெரிவித்துள்ளார்.

சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டிருந்த இந்திய இராணுவத் தளபதி ஜெனரல் பிபின் ராவத், தனது பயணத்தின் இறுதி நாளான நேற்றுக்காலை சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவைச் சந்தித்துப் பேச்சு நடத்தினார்.

இந்தப் பேச்சுக்களின் போதே, புலனாய்வுப் பிரிவுகளை பலப்படுத்த வேண்டியது, தேசிய மற்றும் பிராந்திய நலன்களுக்கு முக்கியமானது என்றும், இதற்கு சிறிலங்காவின் உதவியை எதிர்பார்ப்பதாகவும், இந்திய இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார்.

அத்துடன் புலனாய்வுப் பிரிவுகளுக்குப் பயிற்சி அளித்தல், மற்றும் புதிய தொழில்நுட்பங்களை இரண்டு நாடுகளும் பரிமாறிக் கொள்ளுதல் என்பனவும் முக்கியமானது என்றும், அவர் கூறினார்.

அதேவேளை சட்ட விரோத போதைப் பொருள் வணிகத்தினால், சிறிலங்கா பாதிக்கப்படுவதாகவும், அதனை முற்றாகத் தடுப்பதற்கு இந்தியா உதவ வேண்டும் என்றும் சிறிலங்கா அதிபர் கோரிக்கை விடுத்துள்ளார்.

சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டிருந்த இந்திய இராணுவத் தளபதி ஜெனரல் பிபின் ராவத், நேற்று தமது பயணத்தை முடித்துக் கொண்டு புதுடெல்லி திரும்பினார்.

இந்தப் பயணத்தின் போது அவர் சிறிலங்கா பிரதமர், பாதுகாப்புச் செயலர், முப்படைகளின் தளபதிகளையும் சந்தித்துப் பேச்சு நடத்தியிருந்தார்.

மேலும், கண்டியில் உள்ள சமிக்ஞைப் படைப்பிரிவு பாடசாலையில் அமைக்கப்பட்ட தொலைத்தொடர்பு ஆய்வகத்தையும் திறந்து வைத்தார்.

தியத்தலாவ, காலி, திருகோணமலை படைத்தளங்களையும் சென்று பார்வையிட்டிருந்தார்.

Leave A Reply

Your email address will not be published.