சிறிலங்கா அதிபருக்கு ரணில் எச்சரிக்கை

0 15

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, தொடர்ந்து  அரசியலமைப்பை மீறுவாரேயானால், அவரால் தொடர்ந்தும் அதிபர் பதவியைத் தக்கவைத்துக் கொள்ளாத முடியாத நிலை ஏற்படும் என்று எச்சரித்துள்ளார் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க.

அலரி மாளிகையில் நேற்று நடத்திய செய்தியாளர் சந்திப்பின் போதே அவர் இந்த எச்சரிக்கையை விடுத்தார்.

“அரசியலமைப்புச் சட்டம் தான் மேலானது. அதற்கு மேல் எதுவுமில்லை. அதனை யாரும் மீற முடியாது. அரசியலமைப்பை பாதுகாப்பதாகவே, அதிபர் உள்ளிட்ட எல்லோரும் உறுதி எடுத்துக் கொள்கிறோம்.

ஒக்ரோபர் 26ஆம் நாளில் இருந்து அதிபர் மைத்திரிபால சிறிசேன தொடர்ச்சியாக அரசியலமைப்பை மீறி வருகிறார்.

பிரதமர் மற்றும் அமைச்சர்கள் என்று  அவரது நியமனங்கள் அனைத்துமே அரசியலமைப்புக்கு எதிரானவை தான்.

அவ்வாறு நியமிக்கப்பட்டவர்கள் எவரும் பதவியில் இருக்கத் தகுதியற்றவர்கள்.

அரசியலமைப்புக்கு அமைய, சட்டபூர்வமான அரசாங்கம் ஒன்று அமைக்கப்பட்டால், நாங்கள் எந்த தேர்தலைச் சந்திக்கவும் தயாராக இருக்கிறோம்.

ஏனைய கட்சிகள் திடீர் தேர்தலுக்கு இணங்கினால், நாங்கள் அதற்கு எதிர்ப்புத் தெரிவிக்க காரணம் ஏதும் இல்லை.

எனவே கட்சிகள் தேர்தல் நாளை முடிவு செய்யலாம். ஆனால் இது, நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவுடன் பிரேரணை ஒன்றின் மூலம் அங்கீகரிக்கப்பட வேண்டும்.

அரசியலமைப்புக்கு அமைய அரசாங்கம் ஒன்று உருவாக்கப்பட வேண்டும்.

சிறிலங்கா நாடாளுமன்றத்தை அடிப்படையாகக் கொண்ட அரசாங்கத்தைக் கொண்டது. யாரும் ஹிட்லரைப் போல நடந்து கொள்ள முடியாது.

ஐக்கிய தேசிய முன்னணிக்கு பெரும்பான்மை இருப்பதால், அரசியலமைப்புக்கு அமைய செயற்படுமாறு கேட்கிறோம்.” என்று தெரிவித்தார்.

அதேவேளை ஐதேக பிரதித் தலைவர் சஜித் பிரேமதாச பேசும் போது, மகிந்த – மைத்திரி கூட்டு, நாட்டை சர்வாதிகாரப் பாதைக்கு கொண்டு சென்றிருப்பதாக குற்றம்சாட்டினார்.

Leave A Reply

Your email address will not be published.