சிறிலங்கா கடற்படையுடன் உறவை வலுப்படுத்த அமெரிக்கா ஆர்வம் – அமெரிக்கத் தளபதி

0 22

சிறிலங்காவில் அரசியல் கொந்தளிப்பு இருந்த போதிலும், சிறிலங்கா படைகளுடன் ஒத்துழைப்பையும், கூட்டையும் தொடர்வதில் அமெரிக்கா ஆர்வம் கொண்டுள்ளது என்று அமெரிக்காவின் இந்தோ-பசுபிக் கட்டளை பீடத்தின் தளபதி அட்மிரல் பிலிப் டேவிட்சன் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க செனட் சபையின் ஆயுதப்படை சேவைகள் குழுவின் முன்பாக, நேற்று விளக்கமளித்த போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

“இந்தியப் பெருங்கடலில்  சிறிலங்கா குறிப்பிடத்தக்க மூலோபாய வாய்ப்பாக உள்ளது. இரண்டு நாடுகளுக்கும் இடையில், இராணுவ – இராணுவ  உறவுகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படும்.

அரசியல் குழப்பம், மற்றும் சிங்கள, தமிழ் இனங்களுக்கிடையிலான பதற்ற நிலை என்பன, உறுதியற்ற தன்மை மற்றும், தடைகளை ஏற்படுத்தினாலும், தொடர்ந்தும் எமது ஒத்துழைப்பு  வளர்ந்துள்ளது.

மேலும், சீனாவிடம் பெறப்பட்ட கடன்களுக்காக, அம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனாவுக்கு 99 ஆண்டு குத்தகைக்கு சிறிலங்கா வழங்கியுள்ளது.  இது அனைத்துலக கவலையை ஏற்படுத்தியுள்ளது.

கடல்சார் பாதுகாப்பு ஆற்றலைக் கட்டியெழுப்புதல், கடல்சார் அதிகார வரம்பு விழிப்புணர்வு, மனிதாபிமான உதவிகள், இடர் முகாமைத்துவம், மனிதாபிமான கண்ணிவெடி அகற்றல், மருத்துவ உதவி, மற்றும் அமைதி காப்பு நடவடிக்கைகள் போன்றவற்றில், சிறிலங்கா இராணுவத்துடன் இந்தோ- பசுபிக் கட்டளை பீடம், ஒத்துழைத்துச் செயற்படுகிறது.

அமெரிக்க- சிறிலங்கா கடற்படைகளுக்கிடையிலான ஈடுபாடுகளை அதிகரிப்பதில், 2019இல், இந்தோ- பசுபிக் கட்டளைப்பீடம் கவனம் செலுத்தவுள்ளது.

சிறிலங்கா கடற்படை நன்கு பயிற்சி பெற்ற, தொழில்சார் படையாக, இந்தியப் பெருங்கடலில், பலதரப்பு கடல்சார் பரிமாற்றத்துக்கு பங்களிக்கும் வாய்ப்பைக் கொண்டுள்ளது.

சிறிலங்காவுக்கு கடந்த 2018 ஓகஸ்ட் மாதம் வழங்கப்பட்ட அமெரிக்க கடலோரக் காவல்படைக் கப்பலுக்கு மேலதிகமாக ஜப்பான், இந்தியா ஆகியன வழங்கிய கப்பல்களும், பிராந்திய கடல்சார் ஆதிக்க விழிப்புணர்வு முயற்சிகளை மேற்கொள்வதற்கு சிறிலங்கா கடற்படைக்கு  பெரிய ஆற்றலைக் கொடுத்துள்ளது.

சிறிலங்காவுடன், குறிப்பாக கடற்படையுடன் நிலையான ஈடுபாட்டை பேணுவதும்,   சிறிலங்கா கடற்படையின்  ஆற்றலை துரிதமாக வலுப்படுத்த, ஒத்த கருத்துடைய பங்காளர்களுடன்,   ஆற்றலைக் கட்டியெழுப்பும் பலதரப்பு அணுகுமுறையை உருவாக்குவதும் அவசியமானது.

பிராந்தியத்தில் மூலோபாய உட்கட்டமைப்புகளை அடைவதற்காக, சீனா அதிகரிக்கும் கடன் சுமையைப் பயன்படுத்திக் கொள்ளுகிறது.

சீனாவிடம் பெறப்பட்ட கடனை திருப்பிச் செலுத்த முடியாத நிலையில்,  சிறிலங்கா, அம்பாந்தோட்டை துறைமுகத்தை 99 ஆண்டு குத்தகைக்கு 2017 டிசெம்பரில் சீனாவுக்கு வழங்கியுள்ளது” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.