வரவுசெலவுத் திட்டம் வாக்கெடுப்பு – ஒளித்து விளையாடிய கூட்டமைப்பு

0 13

2019ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்தை ஆதரிக்க நேற்று கடைசி நேரத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முடிவு செய்திருந்த போதும், அதன் 11 உறுப்பினர்கள் மாத்திரமே ஆதரவாக வாக்களித்தனர்.

வரவுசெலவுத் திட்டத்துக்கு ஆதரவு அளிப்பதா என்பது தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நேற்று மாலை வரை முடிவெடுக்கவில்லை.

இந்த நிலையில் ஐதேக தலைவர்கள் கூட்டமைப்புடன் பேச்சுக்களை நடத்திய பின்னர், வரவுசெலவுத் திட்டத்தை ஆதரிக்க முடிவு செய்யப்பட்டது.

நேற்று மாலை நடத்தப்பட்ட வாக்கெடுப்பில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாவை சேனாதிராசா, எம்.ஏ.சுமந்திரன், சாந்தி சிறீஸ்கந்தராசா, சித்தார்த்தன், சிறிதரன், யோகேஸ்வரன், கோடீஸ்வரன் கவிந்தன், துரைரட்ணசிங்கம், சிவமோகன் மற்றும் சாள்ஸ் நிர்மலநாதன் ஆகியோர் வரவுசெலவுத் திட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்திருந்தனர்.

கூட்டமைப்பின் 16 உறுப்பினர்களில் ஒருவரான சிவசக்தி ஆனந்தன், கடந்த பல ஆண்டுகளாக வாக்கெடுப்பில் பங்கேற்பதை தவிர்த்து வந்தார். இம்முறையும் அவர் வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை.

அண்மையில் அரசியல் குழப்பங்களின் போது, மகிந்த அணிக்குத் தாவிய உறுப்பினர் வியாழேந்திரன் வரவுசெலவுத் திட்டத்துக்கு எதிராக வாக்களித்தார்.

ஏனைய மூன்று உறுப்பினர்களான, செல்வம் அடைக்கலநாதன், சிறிநேசன், சரவணபவன் ஆகிய மூவரும், நேற்று வாக்கெடுப்பில் பங்கேற்காமல் நழுவினர். இந்த முடிவுக்கான காரணம் தெரியவரவில்லை.

Leave A Reply

Your email address will not be published.