“எனக்குப் பிள்ளைகள் இல்லை, ஆனால் நூற்றுக்கணக்கான பிள்ளைகளுக்குத் தாய்” – `மரம்’ திம்மக்கா பாட்டி

0 4

கோவை மாவட்டம், சிங்கநல்லூர் குளம்தான் இப்பெயருக்கு காரணம். மிகவும் மாசுபாடு அடைந்த குளத்தை நகர்ப்புற பல்லுயிர் பாதுகாப்பு மற்றும் கல்வி நிலையத்தினர் பராமரித்தும் மரம் நட்டும் பாதுகாத்தும் வருகிறார்கள். இந்தக் குளத்தை ஆய்வு செய்ததில் 160 பறவைகள், 62 பட்டாம்பூச்சிகளும் 700-க்கும் மேற்பட்ட பல்லுயிர் இனங்கள் இருப்பதாக ஆய்வில் கூறப்படுகிறது. இவ்வளவு சிறப்பு வாய்ந்த இடத்தை மாநகராட்சி நிர்வாகம் பல்லுயிர் மண்டலமாக அறிவித்து தன்னார்வ அமைப்புடன்(CUBE) இணைந்து பணியாற்றி வருகிறது.இதுமட்டுமல்லாமல் இயற்கை சார்ந்த கல்வியையும் விழிப்புணர்வையும் வழங்கி வருகிறது. மாநகராட்சிப் பள்ளி, தனியார் பள்ளி மாணவ- மாணவிகள் அழைத்து வரப்பட்டு இயற்கை மீதான காதலையும், அறிவையும் இவர்கள் கற்பித்துக் கொடுக்கிறார்கள். மாணவர்கள் குளத்துக்கு வரும்போதே அவர்களின் பெயர்கள் மாற்றப்படுகிறது. அதற்குப் பதிலாக பறவைகளின் பெயர்களும் பட்டாம் பூச்சிகளின் பெயர்களும் வைக்கப்படுகிறது. இந்தப் பெயர்கள் இந்த இடத்தை விட்டுச் சென்றாலும் மறக்கமாட்டார்கள். ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் காலை 7.30 மணிமுதல் 9 மணி வரை பெற்றோர்களுடன் குழந்தைகளும், பொதுமக்கள் உள்ளிட்டோர் வருகை தருகின்றனர். மரம் நடுதல், இயற்கையைப் புரிந்துகொள்ளுதல், பறவை காணுதல் போன்ற செயல்பாடுகளில் தங்கள் குழந்தைகளை ஈடுபடுத்தி வருகிறார்கள்.மேலும், ஒவ்வொரு வாரம் இயற்கை சார்ந்த துறையில் உள்ள ஆளுமைகள் வரவழைக்கப்பட்டுச் சிறப்பு வகுப்புகளும் எடுக்கப்படுகிறது. அதேபோல இந்த முறை கர்நாடகாவைச் சேர்ந்த பத்மஸ்ரீ விருது பெற்ற சாலுமரத திம்மக்கா சிறப்பு அழைப்பாளராக வருகை தந்தார். 107 வயதான திம்மக்கா தனது கிராமத்தில் ஆலமரங்களை நட்டு இன்றும் பாதுகாத்து வருகிறார். கிட்டத்தட்ட அவருடைய கிராமத்திலிருந்து 4 கிலோமீட்டர் தூரத்துக்குச் சாலையின் இரு புறங்களிலும் 500-க்கும் மேற்பட்ட ஆலமரங்கள் உட்பட 8000-க்கும் மேற்பட்ட மரங்களை நட்டு ஒரு பூங்காவனத்தை உருவாக்கியுள்ளார். அவர் இன்றைக்கும் இளைய தலைமுறைக்கு ஒரு முன்மாதிரியாக இருந்து வருகிறார். சாலுமரத திம்மக்கா பேசும்போது, “நாம் எதற்காக வாழ்கிறோம். எல்லாம் இயற்கைக்காகவே. அதைக் காப்பதுதான் முதல் கடமை. பிள்ளைகள்கூட பெற்றவர்களை மட்டும்தான் பார்த்துக்கொள்வார்கள். ஆனால், ஒரு மரத்தை நட்டு வைத்தால் ஊரையே பார்த்துக் கொள்ளும். எனக்குக் குழந்தைகள் இல்லை. ஆனால், நான் நூற்றுக்கணக்கான மரங்களுக்குத் தாய். இதுபோதும் என் வாழ்க்கைக்கு. வாழ்வில் ஒரு கடமை என்று இருந்தால் அது மரங்களை நட்டுப் பாதுகாப்பது தான்” என்றவர், பேசிக்கொண்டிருக்கும்போது, இடையே ஒரு சிறுவன் ஏன் நீங்கள் ஆலமரங்களை நட்டு வளர்க்கிறீர்கள் என்று கேட்டார். புன்சிரிப்புடன் தொடர்ந்த திம்மக்கா, “ஆலமரம்  நிழலும், குளிர்ச்சியையும் தருகிறது. இந்தியாவில் புனிதமாகவும், பெண் மலட்டுத்தன்மைக்கு நிவாரணமாகவும் கருதப்படுகிறது” என்றார். அவருடன் அவரின் வளர்ப்பு மகன் வந்திருந்தார். அவரும் 1 லட்சம் மரங்களை நட்டு தேசிய விருதை வாங்கியுள்ளார்.இன்றைய நாளில் மரங்களின் தாய் எனக் கூறப்படும் திம்மக்கா பாட்டி இந்தக் குளத்தின் அருகேயுள்ள இடத்தில் ஓர் ஆலமரக்கன்றை நட்டு வைத்துச் சென்றார். பிற்காலத்தில் இம்மரம் பாட்டியின் பெயரைச் சொல்லும் என்ற நம்பிக்கை உள்ளது என்கிறார்கள் இயற்கை ஆர்வலர்கள். இக்காலத்தில் அரசியல்வாதிகளையும், சினிமா பிரபலங்களையும் ரோல் மாடலாக நினைத்து வாழ்கிறோம். அதையும் தாண்டி இயற்கையைக் காக்க இன்னும் எத்தனையோ திம்மக்கா பாட்டிகள் இருந்துகொண்டுதான் இருக்கிறார்கள் அவர்களின் அடையாளம் தான் தெரிவதில்லை.

Leave A Reply

Your email address will not be published.