`தத்ரூபமாக நிறுவப்பட்ட வெண்கல காளை சிலையின் காது துண்டிப்பு!’- புதுக்கோட்டை அவலம்

0 6

புதுக்கோட்டையில் நகராட்சி நிர்வாகத்தால், நிறுவப்பட்ட ஜல்லிக்கட்டுக் காளை சிலையின் காது மர்ம நபர்களால் உடைக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் அறந்தாங்கியில் பெரியார் சிலை உடைத்த சம்பவத்தின் பரபரப்பு அடங்குவதற்குள், ஜல்லிக்கட்டுக் காளை சிலை உடைக்கப்பட்டிருப்பது புதுக்கோட்டையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.தமிழகத்தில் அதிகமாக ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடைபெறும் மாவட்டங்களில் முதன்மை மாவட்டமாக புதுக்கோட்டை திகழ்கிறது. தமிழகத்தின் முதல் ஜல்லிக்கட்டுப் போட்டியும் இங்குதான் நடத்தப்படுகிறது. இத்தனை சிறப்புகளையும் குறிக்கும் வகையில்தான் புதுக்கோட்டையில் நகராட்சி நிர்வாகத்தால் ஜல்லிக்கட்டுக் காளை சிலை நிறுவ முடிவு செய்யப்பட்டது. அதன்படி, அரசு மகளிர் கல்லூரி அருகே ஜல்லிக்கட்டுக் காளையை வீரர் அடக்குவது போன்ற வெண்கலச் சிலை தத்ரூபமாக நிறுவப்பட்டது. சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், மாவட்ட ஆட்சித்தலைவர் உமா மகேஸ்வரி உள்ளிட்டோர் கலந்துகொண்டு சிலையைத் திறந்து வைத்தனர். பொதுமக்கள் பலரும் ஜல்லிக்கட்டுக் காளையின் அருகே நின்று உற்சாகத்துடன் செல்ஃபி எடுத்து மகிழ்ந்து வந்தனர். இந்த நிலையில்தான் தற்போது, காளை சிலையின் ஒரு பக்க காதுப் பகுதி முழுவதும் துண்டிக்கப்பட்டுள்ளது.இது ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் மத்தியில் வேதனையை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் பெரியார் சிலை உடைக்கப்பட்ட நிலையில், அந்தச் சம்பவத்தின் பரபரப்பு அடங்குவதற்குள் புதுக்கோட்டையில் ஜல்லிக்கட்டுக் காளை சிலை உடைக்கப்பட்டுள்ளது. தொடரும் சிலை உடைப்பு சம்பவங்கள் புதுக்கோட்டை மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிலை உடைப்பு சம்பவங்களில் ஈடுபடுபவர்கள்  மீது போலீஸார் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.

Leave A Reply

Your email address will not be published.