மசூதியில் பெண்களை அனுமதிக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு!

0 13

மசூதியில் பெண்களையும் தொழுகைக்கு அனுமதிக்கக் கோரி, இஸ்லாமியத் தம்பதிகள் உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளனர்.கடந்த ஆண்டு செப்டம்பர் 28-ம் தேதி, ‘சபரிமலை ​ஐயப்பன் கோயிலில், அனைத்து வயதுடைய பெண்களும் செல்லலாம்’ என்று உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு அறிவித்தது. இந்தத்  தீர்ப்புக்கு பலத்த எதிர்ப்பு எழுந்தாலும், அதையும் மீறி,  கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் பெண்கள் பாதுகாப்பாக கோயிலுக்குச் செல்ல ஏற்பாடுகள் செய்திருந்தார். அதனையடுத்து பிந்து ,கனக துர்கா என்ற பெண்கள்  கோயிலுக்குள் நுழைந்தனர். வரலாறாக  ஆன இந்த விவகாரம், நாடு முழுவதும் பேசப்பட்டது. தற்போது, உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை உதாரணமாக வைத்து, மகாராஷ்டிராவைச் சேர்ந்த யாஷ்மீஜ் ஜபூர் அஹமது  பீர்ஷேட் (Yasmeej Zuber Ahmad Peerzade) மற்றும் ஜபூர் அஹமது  பீர்ஷேட் (Zuber Ahmed Peerzade,) என்ற இஸ்லாமியத் தம்பதிகள்,  உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளனர். அந்த மனுவில், பெண்கள் மசூதிக்குச் செல்வதைத் தடுப்பது சட்ட விதிகளுக்கு எதிரானது. இவ்வாறு தடுப்பதன்மூலம் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின்  14, 15, 21, 25 மற்றும் 29-ன் விதிமுறைகளை மீறுவதாகும். மேலும், இஸ்லாமியர்களின் புனித நூலான குரானில், ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையில் வேறுபாடு இல்லை. பிறகு ஏன் அவர்களை மட்டும் மசூதிக்குள் செல்ல தடை விதிக்க வேண்டும். எனவே, பெண்களும் மசூதிக்குள் செல்ல அனுமதிக்க வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது. இந்த மனுவை ஏற்றுக்கொண்ட உச்ச நீதிமன்றம், மனுவின் விசாரணையை நாளைக்கு ஒத்திவைத்துள்ளது . 

Leave A Reply

Your email address will not be published.