“இதை நிரூபிக்கும் வேட்பாளர்களுக்கு ஒரு கோடி பரிசு!” – ‘கள்’ நல்லசாமி அதிரடி அறிவிப்பு

0 8

“பவானிசாகர் நீர் நிர்வாகம் நியாயமாகத்தான் நடத்தப்பட்டுவருகிறது என்று நான்கு தொகுதி வேட்பாளர்களோ அல்லது அவர்களுக்கு வாக்குசேகரிக்க வரும் அரசியல் கட்சித் தலைவர்களோ நிருபித்தால், ரூ 1 கோடி பரிசு” என்று தமிழ்நாடு விவசாய சங்கங்களின் கூட்டமைப்புச் செயலாளர் ‘கள்’ நல்லசாமி அதிரடியாகப் பேட்டியளித்துள்ளார்.        கரூரில், ‘கள்’ இயக்கம் ஒருங்கிணைப்பாளரும், தமிழ்நாடு விவசாய சங்கங்களின் கூட்டமைப்பின் செயலாளருமான நல்லசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, “கீழ் பவானி விவசாயிகள் நலச்சங்கம் சார்பில் கரூர், திருப்பூர், ஈரோடு, நீலகிரி ஆகிய 4 நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளர்களுக்கு ஒரு சவால் விடுக்கிறேன்.”பவானி சாகர் நீர் நிர்வாகம் நியாயமாகத்தான் நடத்தப்பட்டுவருவதாக நிரூபித்தால், ரூ 1 கோடி பரிசு கொடுக்கப்படும். கீழ் பவானி விவசாயிகள் நலச்சங்கம் சார்பில் கொடுக்கப்படும் என்று அறிவிக்கிறேன். மேலும், எந்த அரசியல் கட்சி வேட்பாளர்களாக இருந்தாலும் சரி, அல்லது அந்த வேட்பாளர்களை ஆதரித்துவரும் அரசியல் கட்சித் தலைவர்களும் இதை நிரூபிக்கத் தயாரா? இந்த நான்கு தொகுதி வேட்பாளர்களுக்கும் இது சவால்.  இந்தியாவின்  17-வது நாடாளுமன்றத் தேர்தலில் கொள்ளையடித்தவர்களும், குவித்தவர்களும், கோடீஸ்வரர்கள் மட்டுமேதான். வெற்றிபெற முடியுமே தவிர, ஒரு சாதாரண குடிமகன் ஜெயிக்க முடியாது. ஆகையால்தான், திருப்பூரில் மட்டும் ஒரு கொள்கை வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, ‘கர்நாடகாவில் மேக்கேதாட்டூ அணையை கட்டுவேன்’ என்றும், ‘காவிரி நதிநீர் மேலாண்மையை கலைப்பதாகவும்’ கர்நாடகா மக்களிடம் கூறி வாக்குகள் சேகரித்துள்ளதாக, கரூர் வந்த முதல்வர் பழனிசாமி குற்றச்சாட்டு விடுத்துள்ளதாகச் சொல்கிறார்கள்.இந்த மேக்கேதாட்டூவில், கர்நாடகா அணை கட்ட வேண்டுமென்று எண்ணம் வர காரணமே, இந்த நதிநீர் மேலாண்மை வாரியம்தான். தினந்தோறும் நதி நீர் பங்கீடு என்று அறிவித்திருந்தால், இந்தப் பிரச்னை வந்திருக்காது. ஆகவே, மேட்டூர் அணை கட்டப்பட்டு 84 ஆண்டுகால வரலாற்றில் இதுவரை, ஏரி, கண்மாய்கள், வாய்க்கால்களை, கால்வாய்களை நிரப்பும் திட்டம் ஏதாவது செய்திருந்தால், கர்நாடாகா அணை கட்டும் முடிவை எடுத்திருக்காது. அனைத்து தண்ணீரும் கடலில்தான் சேர்கிறது. ஆகவே, அணை கட்டவேண்டிய நிமித்தத்திற்கு தமிழ்நாடு அரசின் நிர்வாகமே காரணம். டெல்லியில், மோடிக்கு எதிரே பல்வேறு போராட்டங்களை நடத்திவிட்டு, தற்போது மோடிக்கு ஆதரவு என்று கூறிய அய்யாக்கண்ணுவிற்கு கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன். அய்யாக்கண்ணு ஏதாவது மாநாடு நடத்தினாரா அல்லது கட்சி சார்பில் ஏதும் செய்தாரா? ஏற்கெனவே, பாரதிய ஜனதா கட்சியின் கீழ் பாரதிய கிஷான் என்கிற விவசாய சங்கத்தில் இருந்து வெளியேறி, தென்னிந்திய நதிகள் இணைப்பு என்கிற சங்கத்தினை ஏற்படுத்தி, அதன்மூலம் தமிழகத்தின் மானத்தினை வாங்கியதுபோல, பல்வேறு போராட்டங்களுக்குக் கண்டனமும் தெரிவித்தார். அவர் அப்படி போராடியதற்கும் கண்டனம் தெரிவித்தேன். இப்போது அவர், இறுதியாக போராட்டத்திற்கு வாபஸ் வாங்கியதுபோல நடித்ததற்கும் கண்டனம் தெரிவித்துக்கொள்கிறேன்” என்றார் அதிரடியாக.

Leave A Reply

Your email address will not be published.