`110 டிகிரி வெயில், பறிபோகும் வெளவால்கள், குரங்கு, தேவாங்கு உயிர்கள்!’- கரூரை அச்சுறுத்தும் வறட்சி

0 7

“கடந்த தேர்தல்களில் வேட்பாளர்கள், `நாங்க ஜெயித்தால், கடவூர் மலையில் வசிக்கும் தேவாங்குகளை பாதுகாக்க சரணாலயம் அமைப்போம்; வறண்டு கிடக்கும் பொன்னணியாறு அணைக்கு தண்ணீர் கொண்டு வருவோம்’னு சொன்ன வாக்குறுதிகளை, ஜெயிச்சு எம்.பி-யான எந்த வேட்பாளரும் நிறைவேத்தலை. இதனால், கடும் வறட்சியால் ஒவ்வொர் உயிரினங்களா செத்துக்கிட்டு இருக்கு” என்று எள்ளும் கொள்ளுமாக வெடிக்கிறார்கள் கடவூர் பகுதி மக்கள். கரூர் மாவட்டத்தில், கரூர், திருச்சி, திண்டுக்கல் மாவட்டங்களின் எல்லையில் இருக்கிறது கடவூர். கடவூர் மற்றும் 31 குக்கிராமங்களை உள்ளடக்கி, அந்த ஊர்களைச் சுற்றி இயற்கையே வட்ட வடிவில் மலைகளை அமைத்திருக்கிறது. கடவூர் உள்ளிட்ட 32 கிராமங்களுக்கும் வெளியிலிருந்து உள்ளே வந்து போக மூன்றே மூன்று வழிகள்தாம் உள்ளன. அதில் ஒரு வழிதான திருச்சி மாவட்ட எல்லையையொட்டி அமைந்துள்ள பொன்னணியாறு அணை அமைந்துள்ள பகுதி. இந்த பகுதி மலைகளில் உலக அளவில் மிகவும் அரிதாகக் காணப்படும் உயிரினமான தேவாங்குகள் அதிகமாக வாழ்கின்றன. பொன்னணியாறு அணையையொட்டி, குரங்குகள், காட்டுப்பன்றிகள், பாம்புகள், மான்கள் என்று பல வனவிலங்குகளும் உயிரினங்களும் வாழ்கின்றன.1972-ம் ஆண்டில் வனவிலங்கு பாதுகாப்புச் சட்டத்தின்படி தேவாங்கு வனவிலங்கு பட்டியலில் அட்டவணை 1- ன்கீழ் பாதுகாக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், இரவில் மட்டுமே உணவுதேடும் பழக்கமுள்ள தேவாங்குகள், வறட்சியால் மலைகாடுகள் கருகிக் கிடக்க, இரவு நேரங்களில் குடியிருப்பு பகுதிகளுக்கு உணவுதேடி வருகின்றன. அப்படி வரும்போது, அடிக்கடி வாகனங்களில் அடிபட்டு இறப்பதாகச் சொல்லப்படுகிறது. இந்நிலையில், இந்த வருடம் தமிழகத்திலேயே வறட்சியும், கோடையும் அதிகம் நிலவும் மாவட்டமாக கரூர் மாறியிருக்கிறது. 110 டிகிரிக்கு மேல் இங்கே வெயில் அடிக்கிறது. இந்நிலையில், திடீரென 100க்கும் மேற்பட்ட வௌவால்கள் பொன்னணியாறு அணைப்பகுதியில் மர்மமாக இறந்துகிடக்க, அதைப்பார்த்து கடவூர் பகுதி மக்கள் கொதித்துப் போயிருக்கிறார்கள்.இதுசம்பந்தமாக, நம்மிடம் பேசிய கடவூர் பகுதி சமூக ஆர்வலர்கள் சிலர், “ரிசர்வ் ஃபாரஸ்ட் கட்டுப்பாட்டில் இந்த மலைக்காடுகள் உள்ளன. ஆனால், வனத்துறை கொடுமையான வறட்சியில் தத்தளிக்கும் இந்த வனத்தையும், வனவிலங்குகளையும் காபந்துபண்ண, ஒருநடவடிக்கையும் எடுக்கலை. கரூர், திருச்சி மாவட்டங்கள் பயன்பெறும் வகையில், தி.மு.க ஆட்சியில் அமைக்கப்பட்டதுதான் பொன்னணியாறு அணை. வட்டவடிவில் உள்ள இந்த மலைகளில் பெய்யும் மழைநீர் அனைத்தும், இந்த அணையில் தேங்கி, அது திருச்சி மாவட்டம் வையம்பட்டி, மணப்பாறை ஒன்றியங்கள் பயன்பெறும் வகையில் அமைக்கப்பட்டது. ஆனால், இங்கு நிலவும் வறட்சியால், இந்த அணை நிரம்பி பத்து வருஷத்துக்கு மேல் ஆவுது. கோடைக்காலங்களில் கொஞ்சம்கூட தண்ணீர் இல்லை. இதனால், இங்குள்ள உயிரினங்கள் செத்துக்கிட்டு இருக்கு. இங்கு மலைகளில் உள்ள மரங்கள், செடிகொடிகளும் கருகிக்கிடப்பதால், இங்கு வாழும் குரங்கு, தேவாங்கு உள்ளிட்ட உயிரினங்கள் மலையைவிட்டு இறங்கி, குடியிருப்பு பகுதிகளுக்கு வருகின்றன. அப்படி வரும்போது, வாகனங்களில் அடிபட்டு இறக்கின்றன. பாம்புகளும் வாகனங்களில் சிக்கி, இறக்கும் கொடுமை நடக்குது. உச்சகட்ட கொடுமையா, நேற்று 100க்கும் மேற்பட்ட வௌவால்கள் பொன்னணியாறு பகுதியில் ஆங்காங்கே இறந்து கிடந்துச்சு. வனத்துறைகிட்ட கேட்டதுக்கு, `வரலாறு காணாத வறட்சி இங்கே நிலவுது. நாங்க என்ன பண்ணுறது’னு கையை விரிக்கிறாங்க. கரூர் நாடாளுமன்றத் தொகுதியில் இதற்கு முந்தைய தேர்தல்களில் போட்டியிட்ட தம்பிதுரை, தி.மு.க கே.சி.பழனிசாமி, சின்னசாமி உள்ளிட்டவர்களெல்லாம், `நாங்க வெற்றி பெற்றால், கடவூர் மலையை சுற்றுலாதலமாக்குவோம்; தேவாங்குகளுக்கு சரணாலயம் அமைப்போம்;காவிரியிலிருந்து வாய்க்கால் வெட்டி தண்ணீர் கொண்டு வந்து, இடைப்பட்ட பஞ்சப்பட்டி உள்ளிட்ட பெரிய ஏரிகளில் தண்ணீர் நிரப்பி, இறுதியாக பொன்னணியாறு அணையை நிரப்பி, கடவூர் மலைப்பகுதியை சோலையாக்குவோம்’னு ஏகப்பட்ட வாக்குறுதிகள் கொடுத்தாங்க. மூன்று பேரும் ஜெயிச்சதும், அதை நிறைவேத்தலை. அதனால், கடவூர் பகுதியே வறட்சியின் கோரப்பிடியில் சிக்கி, அங்குள்ள வனவிலங்களும், உயிரினங்களும் கொத்துக்கொத்தாக இறந்துகொண்டிருக்கின்றன. இதை தடுக்கலன்னா, கடவூர் மலையில் வாழும் தேவாங்கு உள்ளிட்ட அபூர்வ உயிரினங்களும் அழிந்துபோகும் கொடுமை ஏற்படும்” என்றார்கள். 

Leave A Reply

Your email address will not be published.