`பறிபோனது ஒரு தொழிலாளியின் உயிர்; குவிந்த 1,000 பேர்!’ – கூடங்குளம் அணுமின் நிலையம் முன் பதற்றம்

0 7

நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் செயல்பட்டுவரும் அணு மின் நிலையத்தில் பணியாற்றும் ஒப்பந்தப் பணியாளர் தவறி விழுந்து உயிரிழந்தார். அவருடைய மரணத்துக்கு உரிய இழப்பீடு வழங்க வலியுறுத்தி 1,000-க்கும் அதிகமான பணியாளர்கள் வேலைக்குச் செல்லாமல் கூடங்குளம் அணுமின் நிலையம் முன்பாகப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக அங்கு பதற்றம் நிலவுகிறது. நெல்லை மாவட்டம், தேவர்குளம் அருகே உள்ள புளியம்பட்டியைச்  சேர்ந்தவர் இன்பராஜ், இவர் கூடங்குளம் அணுமின் நிலையத்தில் ஒப்பந்தத் தொழிலாளராகப் பணியாற்றி வந்தார். கூடங்குளம் அணு மின் நிலையத்தில் ஏற்கெனவே இரு உலைகள் செயல்பட்டு வரும் நிலையில், 3-வது அணு உலை அமைப்பதற்கான கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. அந்தப் பணியில் இன்பராஜ் ஈடுபட்டிருந்தார். கட்டுமானம் நடக்கும் இடத்தில் கிரேன் பணியில் ஈடுபட்டிருந்தபோது கிரேனில் பழுது ஏற்பட்டது. அந்தப் பழுதை அவர் சரிசெய்ய முயன்றபோது எதிர்பாராதவிதமாகத் தவறிவிழுந்தார். அதில் பலத்த காயம் அடைந்த அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவர் பணியாற்றி வந்த நிறுவனம், இன்பராஜின் உயிரிழப்புக்கு எந்த உதவித்தொகையையும் வழங்க முன்வரவில்லை. அதனால் ஒப்பந்தப் பணியாளர்கள் கடும் அதிருப்தி அடைந்தனர். பணியின்போது தவறி விழுந்து உயிரிழந்த இன்பராஜின் மனைவி ஜெபஅன்னபூரணத்துக்கு  பணி வழங்க வேண்டும் எனத் தொழிலாளர்கள் வலியுறுத்தியுள்ளனர். அத்துடன், இன்பராஜ் குடும்பத்துக்கு உரிய நிவாரணத் தொகை வழங்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளனர். இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி கூடங்குளம் அணு மின் நிலையத்தில் பணியாற்றும் ஆயிரத்துக்கும் அதிகமான ஒப்பந்தத் தொழிலாளர்கள் இன்று காலை முதல் அணு மின் நிலையத்துக்குப் பணிக்குச் செல்லாமல் பணிகளைப் புறக்கணித்துப் போராட்டத்தில் ஈடுபட்டனர். அணுமின் நிலையம் முன்பாக அமர்ந்து தங்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பியதால் அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. ஒப்பந்தப் பணியாளர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டதால், அவர்களிடம் தனியார் நிறுவன நிர்வாகிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். ஆனால், உயிரிழந்த இன்பராஜின் மனைவிக்கு உடனடியாக பணி வழங்கவும் உரிய நிவாரணத் தொகை வழங்கவும் உத்தரவாதம் வழங்கும் வரை போராட்டம் தொடரும் என அறிவித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களின் போராட்டம் காரணமாக அணுமின் நிலையத்தில் ஒப்பந்தப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. கூடங்குளம் அணுமின் நிலையம் முன் போராட்டம் நடந்து வருவதால் அங்கு பதற்றம் நிலவுகிறது.

Leave A Reply

Your email address will not be published.