கலெக்டர், எஸ்பி-யின் எச்சரிக்கையை மீறினர்! – வாட்ஸ்அப்பில் வீடியோ வெளியிட்ட 3 பேர் சிக்கினர்

0 4

கடலூர் மாவட்டத்தில், கலெக்டர் அன்புச்செல்வன், மாவட்ட எஸ்பி சரவணன் ஆகியோரின் எச்சரிக்கையையும் மீறி, சமூக வலைதளங்களில் சாதி மோதலைத் தூண்டும் விதமாகத் தகவல் பரப்பிய 3 பேரை போலீஸார் அதிரடியாகக் கைதுசெய்துள்ளனர்.கடலூர் மாவட்ட கலெக்டர் அன்புச்செல்வன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கடலூர் மாவட்டத்தில் சட்டம்- ஒழுங்கு சிறப்பாக பராமரிக்கப்பட்டுவருகிறது. கடந்த 18-ம் தேதி நடந்த நாடாளுமன்றத் தேர்தல், பொது மக்களின் முழு ஒத்துழைப்புடன் எந்த விதமானஅசம்பாவிதமும் இன்றி அமைதியான முறையில் நடந்துமுடிந்தது. இந்நிலையில், கடந்த சில நாள்களாக சமூக விரோதிகள்சிலர் பொதுமக்களின் பொதுஅமைதிக்கு  குந்தகம் விளைவிக்கும் வண்ணம் வாட்ஸ் அப் மூலம் செய்திகளை, வீடியோக்களை வெளியிட்டு, பொதுமக்களிடையே அமைதியின்மையை ஏற்படுத்த  முயன்றுவருகின்றனர். இதனை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. இனி வரும் காலங்களில், இதுபோன்ற செயல்களில் ஈடுபடுபவர்கள்மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு, குண்டர் சட்டத்தில் கைது செய்யப்படுவார்கள்” என்று எச்சரித்திருந்தார்.கடலூர் மாவட்ட எஸ்பி சரவணன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கடலூர் மாவட்டத்தில், சமூக விரோதிகள் சிலர் அப்பாவி இளைஞர்களிடம் வன்முறையைத் தூண்டும் விதமாக ஃபேஸ்புக், வாட்ஸ் அப் போன்ற சமூக வலைதளங்களில் பதிவுசெய்து வருகின்றனர். இதன் உள் நோக்கம் புரியாமல், படித்த இளைஞர்கள் அதனை மற்றவர்களுக்கு அனுப்பிவைப்பதால், அவர்களை அறியாமலேயே அந்த குற்றச் செயலுக்கு உடந்தையாக இருந்ததாகக் கருதி வழக்குகளில் சிக்குகின்றனர். சமீபத்தில் நடந்த இரண்டாம் நிலை காவலர் தேர்வில், அனைத்துத் தகுதிகளும் பெற்றிருந்தாலும் 10 இளைஞர்கள் மீது காவல் துறையில் வழக்கு நிலுவையில் இருந்ததால் பணியில் சேர முடியாத நிலை உள்ளது. எனவே, கடலூர் மாவட்ட இளைஞர்கள், சமூக வலைதளங்களில் வரும் செய்தியைக் கண்டு உணர்ச்சி வசப்படாமல், சட்ட ரீதியாகக் காவல் துறையை அணுக வேண்டும். யார் சட்டத்தை மீறினாலும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்” என்று கூறியுள்ளார்.கடலூர் மாவட்ட கலெக்டர் அன்புச்செல்வன், மாவட்ட எஸ்பி சரவணன் ஆகியோர் எச்சரிக்கையையும் மீறி, சாதி மோதலைத் தூண்டும் விதமாகப் பேசிய வீடியோவை வாட்ஸ் அப்பில் வெளியிட்ட தொண்டமாநத்தத்தைச் சேர்ந்த  சுந்தரமூர்த்தி (71), காட்டுமன்னார்கோயிலைச் சேர்ந்த அருள்ராஜ் (28), குண்டியமல்லூர் கிராமத்தைச் சேர்ந்த சௌரிராஜன் (25) ஆகியோரை போலீஸார் கைதுசெய்துள்ளனர். அவர்களைக் குண்டர் சட்டத்தின் கீழ் கைதுசெய்யவும் காவல் துறையினர் நடவடிக்கை எடுத்துவருகின்றனர். 

Leave A Reply

Your email address will not be published.