பலத்த காற்று, மழைக்கு ஒதுங்கிய பெண் டாக்டருக்கு நடந்த சோகம்!

0 2

நாமக்கல்லில் மழைக்கு ஒதுங்கியபோது சுவர் இடிந்து விழுந்து பெண் டாக்டர் உட்பட 2 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவம் நாமக்கல்லில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.நாமக்கல் திருச்சி ரோட்டில் அமைந்துள்ளது தங்கம் மருத்துவமனை. இம்மருத்துவமனையின் அருகில் கேன்டீன் ஒன்று உள்ளது. கேன்டீன் முன்பு நிழலுக்காக ஆஸ்பெட்டாஸ் ஷீட் போடப்பட்டிருந்தது. மேலும் அதன் சுவர் மீது விளம்பரப் பலகை ஒன்றும் வைக்கப்பட்டிருந்தது. நாமக்கல்லில் நேற்று மாலை பலத்த காற்றுடன் மழை பெய்தது. இதையடுத்து வழக்கம் போல கேன்டீன் முன்பு உள்ள ஆஸ்பெட்டாஸ் ஷீட்டுக்குக் கீழே சிலர் மழைக்கு ஒதுங்கினர். காற்றின் வேகத்தை தாக்குப் பிடிக்க முடியாமல் விளம்பரப் பலகை பொருத்தியிருந்த சுவர் இடிந்து கீழே விழுந்தது. இந்த இடிபாட்டில் மழைக்கு ஒதுங்கியவர்கள் சிக்கிக்கொண்டனர். இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி நாமக்கல் கூட்டுறவு காலனியைச் சேர்ந்த டாக்டர் கலா உயிரிழந்தார். இவர் நாமக்கல் அரசு ஆஸ்பத்திரி சூப்பிரண்டு செல்வகுமாரின் மனைவி ஆவார். மேலும் தனியார் ஆஸ்பத்திரியின் டிரைவர் சேந்தமங்கலத்தைச் சேர்ந்த மோகன்ராஜ் என்பவரும் இந்த இடிபாட்டில் சிக்கி சிகிச்சை பலனின்றி இறந்தார்.இந்தச் சம்பவத்தில் மேலும், நாமக்கல் ஜெய்நகரைச் சேர்ந்த சிக்கந்தர் பாஷா, கணேசபுரத்தைச் சேர்ந்த பாலகிருஷ்ணன், பொட்டிரெட்டிப்பட்டியைச் சேர்ந்த போஸ், சிவகாசியைச் சேர்ந்த மருதுபாண்டியன், புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாம்பட்டினத்தைச் சேர்ந்த முத்தரசன் ஆகிய 5 பேரும் படுகாயமடைந்தனர். அவர்கள் நாமக்கல்லில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். மழைக்கு ஒதுங்கிய பெண் டாக்டர் உட்பட 2 பேர் சுவர் இடிந்து விழுந்து இறந்த சம்பவம் நாமக்கல்லில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 

Leave A Reply

Your email address will not be published.