`அது இந்தி இல்லை; தேவநாகரி எழுத்துக்கள்!’ – தஞ்சை பெரிய கோயில் சர்ச்சையில் தொல்லியல் துறை விளக்கம்

0 5

தஞ்சாவூர் பெரியகோயிலில் தமிழ் எழுத்துகளால் ஆன கல்வெட்டுகளை அகற்றி எடுத்துவிட்டு, அந்த இடத்தில் இந்தி எழுத்துகளால் ஆன கல்வெட்டுகளைப் பதிப்பதாகவும் சோழர்களின் வரலாறு மற்றும் ராஜராஜசோழனின் புகழை மறைப்பதற்குமே இப்படிச் செய்வதாகக் கூறி சமூக வலைதளங்களில் வீடியோ ஒன்று பரவி வைரலானது. `கல்வெட்டில் உள்ளது இந்தி எழுத்துகள் இல்லை; மராத்தி மொழி எழுத்து என மறுத்துள்ளதோடு இதுபோன்று வதந்திகளை யாராவது பரப்பினால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்’ என தொல்லியல் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.சோழப் பேரரசில் ராஜராஜ சோழன் கி.பி.985-ல் அரசனாக பொறுப்பேற்ற பிறகு தன் திறைமையாலும், படை பலத்தாலும் பல சிற்றரசர்களை வெற்றி கண்டு சோழப் பேரரசை இந்தியா முழுவதும் பரவச் செய்தார். மேலும், கடல் கடந்து பல நாடுகளை வெற்றிகண்டு தமிழனின் பெருமையை உலகையே அறியச் செய்து மாமன்னன் எனப் பெயரெடுத்தவர் ராஜராஜ சோழன். வேறு எந்த மன்னர்களும் செய்யாத மக்களாட்சி முறையை அறிமுகப்படுத்தி மக்கள் குடவோலை முறையில் வாக்களித்து மக்களுக்கான பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுக்கும் முறையை அறிமுகம் செய்து அதை செயல்படுத்திக் காட்டியவர்.மிகப்பெரிய பேரரசானாக விளங்கிய ராஜராஜ சோழன் கலையிலும், ஆன்மிகத்திலும் அதிக ஈடுபாடு கொண்டு விளங்கினார். ராஜராஜ சோழனால் தஞ்சாவூரில் கட்டப்பட்ட பெரிய கோயில் தமிழர்களின் பாரம்பர்யத்துக்கும், சோழர்களின் கட்டடக்கலைக்கும் மிகச் சிறந்த எடுத்துக்காட்டாக விளங்கி வருகிறது. உலக நாடுகளைச் சேர்ந்தவர்களே பெரிய கோயிலின் கட்டுமானத்தை வியந்து பாராட்டியுள்ளனர். கருவறை மற்றும் கோயில் முன் மண்டபம், சண்டீஸ்வரர், கோயில் சுற்றுப் பிராகாரம் ஆகியவைதான் ராஜராஜ சோழனால் கட்டப்பட்ட பெரிய கோயிலாகும். கோயில் எப்படி கட்டப்பட்டது மற்றும் வரலாறு என்பது குறித்து அப்போதைய தமிழ் எழுத்துகளால் கோயில் முழுவதும் உள்ள கல்வெட்டுகளில் பொறிக்கப்பட்டுள்ளன. அதன் பிறகு பாண்டியர் காலத்தில் அம்மன் மண்டபமும், நாயக்கர் காலத்தில் நந்தி மற்றும் சுப்பிரமணியர் சந்நிதி, விநாயகர் சந்நிதி என சோழர்களின் ஆட்சிக்குப் பிறகு தஞ்சையை ஆண்ட நாயக்கர், மராட்டியர் ஆட்சி காலத்தில் கட்டப்பட்டன. ஒவ்வொரு மன்னரும் பெரிய கோயிலின் தங்கள் பங்களிப்பு இருக்க வேண்டும் என நினைத்து இதுபோன்று விரிவுபடுத்தியுள்ளனர். குறிப்பாக சரபோஜி மன்னர் காலத்தில்தான் மராத்திய மொழியான தேவநாகரி எனப்படும் எழுத்துகளும் பல்வேறு தகவல்கள் பொறிக்கப்பட்டு கல்வெட்டில் வைக்கப்பட்டன. சரபோஜி ஆட்சிக் காலத்தில் பெரிய கோயிலில் கும்பாபிஷேகமும் நடத்தப்பட்டுள்ளது. நாயக்கர் கால ஓவியங்களும் கோயிலில் இடம்பெற்றுள்ளன.இந்த நிலையில், சமூக வலைதளங்களில் வீடியோ ஒன்று வைரலானது அதில் தஞ்சாவூர் பெரியகோயிலில், தமிழ் எழுத்துகளால் ஆன கல்வெட்டுகளை அகற்றி எடுத்துவிட்டு, அந்த இடத்தில் இந்தி எழுத்துகளால் ஆன கல்வெட்டுகளைப் பதிப்பதாகவும் சோழர்களின் வரலாறு மற்றும் ராஜராஜசோழனின் புகழை மறைப்பதற்குமே இப்படிச் செய்வதாகக் கூறி அந்த வீடியோவில் உள்ள நபர் பேசியிருந்தார். பெரியகோவிலுக்குச் சுற்றுலா வந்த பயணிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் சமூக வலைதளங்களில் வந்த வீடியோவைப் பார்த்துவிட்டு கல்வெட்டுகள் பதியப்பட்ட இடத்தைப் பார்க்க ஆர்வம் காட்டி வருகின்றனர். இது தொடர்பாக உளவுத்துறையினரும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.இதையடுத்து, இந்திய தொல்லியல்துறை முதுநிலை பராமரிப்பு அலுவலர் சங்கர் கூறியதாவது, “பெரியகோயிலில் தென்மேற்கு மூலையில் உள்ள சுவர்களில் இந்தி எழுத்துகள் போன்று உள்ளவை, மாரத்தி மொழியில் உள்ள தேவநாகரி எழுத்துகள் ஆகும். இந்தக் கல்வெட்டில் உள்ள எழுத்துகள் 1990-ம் ஆண்டு எடுக்கப்பட்டு புத்தகமாக வெளியிட்டுள்ளனர். இதன் பிரதிகள்  சரஸ்வதி மஹால், தமிழ்ப் பல்கலைகழகத்திலும் உள்ளது.தற்போது பெரியகோயிலில் இந்தி எழுத்துகள் உள்ளது போல சிதைந்து கிடக்கும் கல்வெட்டுகள், கோயிலின் கிரிவலப் பாதையில் பராமரிப்பு பணிக்காக தோண்டியபோது கிடைத்த கல்வெட்டுகள் ஆகும். அவற்றைப் பாதுகாப்பாக வைக்க வேண்டும் என்பதற்காக திருச்சுற்று மாளிகையில் வைக்கப்பட்டுள்ளன. சமூக வலைதளங்களில் வரும் தகவல்கள் உண்மைக்குப் புறமானது. கோயிலில் உள்ள தமிழ் எழுத்துகளை மறைக்கவும், அழிக்கவும் இல்லை. விஷமிகள் இதுபோன்று வதந்திகளை பரப்பி வருவது வரலாற்று ஆய்வாளர்களை வேதனையில் ஆழ்த்தி வருகிறது. இதுபோன்று இனி யாராவது வதந்தி பரப்பினால் அவர்கள்மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.சமூக ஆர்வலர்களோ, “பெரியகோயிலுக்கு உள்நாடு மற்றும் வெளிநாட்டிலிருந்து தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள், சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர். அனைவரும் எந்த இடையூறும் இல்லாமல் தங்கள் செல்போனைப் பயன்படுத்தி கோயிலை பல கோணங்களில் பயன்படுத்தி சமூக வலைதளங்களில் பரப்பி வருகிறார்கள். இதை ஆர்வமாக அவர்கள் செய்தாலும் கோயில் பாதுகாப்பு விஷயம் என்பது கேள்விக்குறியாக உள்ளது. கோயில் பாதுகாப்பில்  நிர்வாகம் மெத்தனத்துடனேயே செயல்படுகிறது. அப்படி இல்லாமல் பாதுகாப்பை பலப்படுத்தி கோயிலைக் காக்க வேண்டும்” என்றனர்.

Leave A Reply

Your email address will not be published.