பொலிவிழந்த 200 ஆண்டு பாரம்பர்யத் திருவிழா! – கவலையில் வைத்தீஸ்வரன் கோயில் வியாபாரிகள்  

0 4

நாகப்பட்டினம் மாவட்டம், வைத்தீஸ்வரன்கோவில் சித்திரைத் திருவிழா ஆண்டுதோறும், சுமார் இரண்டு லட்சம் பக்தர்கள் ஒன்றுகூடக் கோலாகலமாக நடைபெறும். காரைக்குடியிலிருந்து நகரத்தார் நடைப்பயணமாகவும், மாட்டுவண்டி பூட்டிக்கொண்டும், சித்திரை முதல் செவ்வாய் கிளம்பி இரண்டாம் செவ்வாய் அன்று வைத்தீஸ்வரன்கோயில் வந்து வைத்தீஸ்வரனை வழிபடுவர். 200 ஆண்டுகளாகத் தொடரும் இந்தப் பாரம்பர்ய வழிபாடு, இந்த ஆண்டும் களைகட்டும் என்று எதிர்பார்த்த நிலையில், ஏமாற்றத்தை அளித்துள்ளது. இந்த ஆண்டு சித்திரை திருவிழா நடைபெறும், சித்திரை இரண்டாம் செவ்வாயான இன்று (23.4.19) பக்தர்கள், பாதசாரிகளாகவோ அல்லது மாட்டுவண்டிகளிலோ வந்துசேர்ந்திருக்க வேண்டும் என்றால் அவர்கள் சித்திரை முதல் செவ்வாய்க் கிழமையான 16-ம் தேதி அன்றே காரைக்குடியில் இருந்து கிளம்பியிருக்க வேண்டும். ஆனால், 2019 மக்களவைத் தேர்தல் 18-ம் தேதி என்பதால் பக்தர்கள் வாக்களித்துவிட்டு, 18-ம் தேதிக்குப் பிறகு தங்கள் ஊரில் இருந்து கிளம்ப வேண்டிய சூழலுக்குத் தள்ளப்பட்டனர்.18-ம் தேதிக்குப் பிறகு நடைப்பயணம் மேற்கொண்டால், வைத்தீஸ்வரன்கோயிலை வந்தடைய முடியாது என்பதாலும், கோடை வெயில் சுட்டெரிக்கும் காலம் என்பதாலும் வழக்கத்துக்கு மாறாக  இந்த ஆண்டு பக்தர்களின் எண்ணிக்கை மிகக் கணிசமாகக் குறைந்தது. சுமார் 2 லட்சம் பக்தர்கள் வருவார்கள் என்று எதிர்பார்த்த நிலையில் 50,000 பக்தர்கள்கூட வராதது, வைத்தீஸ்வர்கோயில் வியாபாரிகளுக்கு மிகுந்த ஏமாற்றத்தை அளித்துள்ளது.திருவிழா நாளுக்கு முதல் நாள் இரவு, அனைத்து பக்தர்களும் வைத்தீஸ்வரன்கோயில் வந்து சேர்ந்துவிடுவர் என்பதால், வைத்தீஸ்வரன்கோயில் முழுவதும் கூட்டம் நிரம்பி வழியும். ஆனால் இந்த ஆண்டு, கோயிலைச் சுற்றியுள்ள பிரதான தேர் சாலைகளில்கூட பக்தர்களின் எண்ணிக்கை குறைவாகவே காணப்படுகிறது.மக்களவைத் தேர்தலும், கோடை வெயிலும் இந்த ஆண்டு வைத்தீஸ்வரன் கோயில் சித்திரைத் திருவிழாவை பொலிவிழக்கச் செய்துவிட்டன.

Leave A Reply

Your email address will not be published.