குற்றாலம் அருவிகளில் கொட்டும் தண்ணீர்!- குவியும் சுற்றுலாப் பயணிகள்

0 3

மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்யும் மழையின் காரணமாக குற்றாலம் அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. அதனால் சுற்றுலாப்பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். விடுமுறை என்பதால் அருவிகளில் கூட்டம் அலைமோதுகிறது. மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகள் மற்றும் குற்றாலத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த இரு தினங்களாக கனமழை பெய்தது. அதனால் குற்றாலம் அருவிகளில் தண்ணீர் கொட்டத் தொடங்கியிருக்கிறது. கடந்த சில மாதங்களாகச் சுட்டெரிக்கும் வெயில் வாட்டி வந்த நிலையில், அருவிகள் வறண்டு காணப்பட்டன. ஆனால் தற்போது பெய்யும் மழையால் மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் வரத்து காணப்படுகிறது. தற்போது கோடை விடுமுறை தொடங்கியுள்ள நிலையில் சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகமாக உள்ளது. ஏற்கெனவே அருவிகளில் தண்ணீர் வரத்து குறைவாக இருந்ததால் ஏமாற்றத்துடன் இருந்த சுற்றுலாப் பயணிகள், தற்போது கொட்டும் தண்ணீர் காரணமாக உற்சாகம் அடைந்துள்ளனர். நேற்றும் இன்றும் மாலை நேரங்களில் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கன மழை பெய்தது. நெல்லை  மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருவதால் வெயிலின் தாக்கம் குறைந்து குளிர்ச்சி நிலவுகிறது. அணைகளின் நீர்மட்டம் குறைந்துவிட்ட நிலையில், தற்போது பெய்யும் மழை பொதுமக்களின் குடிநீர்த் தேவைக்கும் விவசாயிகளின் தேவைக்கும் உபயோகமாக இருக்கும் என்பதால் மக்கள் மனம் குளிர்ந்துள்ளனர். நெல்லை மாவட்டத்தில் அதிகபட்சமாக  செங்கோட்டை, தென்காசி மற்றும் சிவகிரியில் 4 செ.மீ மழை பதிவாகியுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.