“நம்புவீங்களா… தினகரன் பி.ஜே.பி ஆதரவாளர்!” நாஞ்சில் சம்பத் குபீர்

0 30

அரசியல் சம்பந்தமான எந்தவிதக் கேள்விகளுக்கும் அசராமல் பதில் அளிக்கக்கூடியவர் நாஞ்சில் சம்பத்! ‘திராவிடம், அண்ணா இல்லாத இடத்தில் இருக்க மாட்டேன்’ என்று அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்துக்கு எதிராக முழக்கமிட்டு டி.டி.வி தினகரன் கூடாரத்தைக் காலி செய்திருப்பவரிடம் பேசினோம்.

”நாஞ்சில் சம்பத் விலகலால் இழப்பு ஏதும் இல்லை என டி.டி.வி தினகரன் கருத்து தெரிவித்திருக்கிறாரே…?”

”நான் விலகியது அவருக்கு மிகப்பெரிய இழப்பு என்று நான் எங்கேயும் சொல்லவில்லையே….”

”நீங்கள் சொல்லவில்லை… ஆனால், உங்களை ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை என்பதைத்தானே அவரது இந்த வார்த்தைகள் சுட்டிக்காட்டுகின்றன….?”

”நான், இனி அரசியலே பேச வேண்டாம் என முடிவெடுத்திருக்கிறேன். அதனால், இதற்கெல்லாம் ஏன் பதில் சொல்லிக்கொண்டிருக்க வேண்டும்?”

”அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் அமைப்பில் உள்ள இரண்டாம்கட்டத் தலைவர்கள் பலர், உங்களைப் போலவே அதிருப்தி மன நிலையில் இருப்பதாகச் செய்திகள் வெளியாகின்றனவே… உண்மைதானா?”

”நான் யாரிடமும் எதையும் பகிர்ந்துகொள்ளத் தயாரில்லை. ஏனெனில், இங்கே சுவருக்கும் காது உண்டு என்று நம்புபவன் நான். அதனால் யாரிடமும் எதுவும் பேச மாட்டேன். எனக்கு விதிக்கப்பட்ட கடமையைத் தவிர வேறு எதிலும் தலையிடுவதில்லை. அவ்வளவு கற்போடும் பாதுகாப்போடும் இருந்த எனக்கே இந்த நிலைமை!”

”கடந்த ஒரு வருடம் தினகரனோடு நீங்கள் பயணித்தபோது, அண்ணாயிசம் மற்றும் திராவிட சிந்தனைகள் தினகரனிடம் இருந்தனவா?”

”முதன்முதலாக தினகரனை கூவத்தூரில் சந்தித்துப் பேசியபோது, ‘திராவிடம் என்பது ஓர் உயிருள்ள செல்; அதனை யார் காப்பாற்றுகிறார்களோ… அவர்களைத் தமிழ்நாடு காப்பாற்றும்’ என்று சொன்னேன். அவரும் சிரித்துக்கொண்டே அதனை உள்வாங்கிக்கொண்டார். அடுத்ததாக ஆர்.கே.நகர் வெற்றிக்குப் பிறகு நடைபெற்ற நிர்வாகிகள் சந்திப்பின்போது, ‘முதல் எதிரி, மூல எதிரி, முக்கிய எதிரி – என இந்த மூன்று எதிரியையும் ஒரு தேர்தலில் வென்று காட்டிய சரித்திரம் உங்களுக்கு மட்டும்தான் சொந்தம்’ என்று சொன்னேன். அதற்கு அவர், ‘மூல எதிரி என்றால் யார்?’ எனக் கேட்டார். ‘மூல எதிரி என்றால், பி.ஜே.பி – சங்பரிவார்’ என்று நானும் விளக்கிச் சொன்னேன்.

நா தழும்பேற நாத்திகம் பேசுபவர்களும், தி.மு.க-வில் இருக்கிறவர்களும்கூட உங்களை நெஞ்சம் நிறைய நேசிக்கிறார்கள். எனவே, ‘திராவிட சித்தாந்த மையப்புள்ளியில் நின்று நீங்கள் பயணத்தைத் தொடர்ந்தால், உங்களுக்கு நிகரான தலைவர் தமிழ்நாட்டில் கிடையாது; உங்களுக்குக் கடமையாற்ற நானும் தயாராகிவிட்டேன்’ என்று சொன்னேன். ஆனாலும்கூட தொடர்ந்த காலங்களில் அவரிடம் திராவிடம் குறித்த சிந்தனை வெளிப்படவில்லை. இப்போது புதிய கட்சிப் பெயரில் அது இன்னும் உறுதிப்படுத்தப்பட்ட பிறகுதான் நான் எனது நிலையைத் தெளிவாக அறிவித்துவிட்டேன்.”

”அ.ம.மு.க அமைப்பின் பெயரிலேயே திராவிடத்தைத் தவிர்த்திருப்பது ஏன் என்று நினைக்கிறீர்கள்?”

”திராவிடம் இல்லாத தமிழ்நாடு என்று திரும்பத் திரும்ப சங் பரிவாரங்கள் சொல்லிக்கொண்டிருக்கும் சூழலில், அதனையே நடைமுறைப்படுத்தும் கருவியாக தினகரனும் மாறிவிட்டதன் பின்னணியில் அவர்மீது சந்தேகத்தின் நிழல் படிகிறது. இதனை உண்மை என்றும் நான் சொல்லவில்லை; அதே சமயம் இந்தச் சந்தேகத்தைப் போக்க வேண்டிய பொறுப்பு டி.டி.வி தினகரனுடையதுதான்.
‘திராவிடம் இல்லாத தமிழ்நாடு’ என்ற சங் பரிவாரங்களின் செயல்முறையை நடைமுறைப்படுத்த இவரே துணை நிற்கிறாரோ என என்னைப்போன்று கொள்கையை நேசிக்கக்கூடியவர்கள் குமுறுகிறோம்.”

”இன்றைய சூழலில், பி.ஜே.பி-யை எதிர்த்துதானே தினகரன் அரசியல் செய்துகொண்டிருக்கிறார்…?”

”மேலோட்டமாகப் பார்த்தால் அப்படித்தான் தோன்றும். ஆனால், நாட்டு நடப்பு, பி.ஜே.பி எதிர்ப்பு போன்ற விஷயங்களில் தீர்க்கமாகவும் தீவிரமாகவும் தினகரன் பேசி நான் இதுவரை கேட்டதில்லை.”

”அரசியல் மேடைகளில் இனி நாஞ்சில் சம்பத்தினைப் பார்க்கவே முடியாதா?”

”அரசியலில் இருந்து நான் விடைபெற்றுவிட்டேன். இனி தமிழ் வீதியில் என் பயணம் தொடரும்…. உங்களைப் போன்றவர்களின் அன்பும் ஆதரவும் என்றும் வேண்டும்!”

கைகூப்பி விடைபெறுகிறார் நாஞ்சில் சம்பத்!

Leave A Reply

Your email address will not be published.