பாதை மாறிய ரதயாத்திரை… தடுத்து நிறுத்திய போலீஸ்! – கீழக்கரையில் பதற்றம்

0 24

ராமேஸ்வரத்திலிருந்து தூத்துக்குடி செல்லும் ராமராஜ்ஜிய ரதயாத்திரை, கீழக்கரை வழியாகச் செல்ல போலீஸார் அனுமதி அளிக்கவில்லை. கீழக்கரை வழியாக அனுமதிக்கக் கோரி, போலீஸாரிடம் இந்து முன்னணியினர் வாக்குவாதம். இதனால் ராமநாதபுரம் அருகே திடீர் பதற்றம் ஏற்பட்டது.

அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதை வலியுறுத்தியும், நாட்டில் ராம ராஜ்ஜியம் ஏற்படுத்தவேண்டியதன் அவசியம்குறித்தும் அயோத்தியில் இருந்து ராம ராஜ்ஜிய ரதயாத்திரை துவங்கப்பட்டது. உ.பி, மகாராஷ்டிரா, கர்நாடகா, கேரள மாநிலங்கள் வழியாக தமிழகத்திற்கு இந்த ரதயாத்திரை நேற்று முன் தினம் வந்தது. இந்நிலையில், ரதயாத்திரைக்கு அனுமதி வழங்கிய தமிழக அரசைக் கண்டித்தும், ரதயாத்திரையைத் தடுக்க வலியுறுத்தியும், தி.மு.க, இடது சாரி இயக்கங்கள், தமிழ் அமைப்புகள் உள்ளிட்ட அனைத்துக் கட்சியினரும் போராட்டம் மற்றும் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், நேற்று காலை மதுரையிலிருந்து ராமநாதபுரம் வழியாக ராமேஸ்வரத்தை வந்தடைந்தது ரதயாத்திரை. இரவு முழுவதும் ராமேஸ்வரத்தில் முகாமிட்டிருந்த ரதயாத்திரை, இன்று காலை தூத்துக்குடி வழியாக கன்னியாகுமரி மாவட்டத்திற்குச் செல்கிறது. இதற்கென, இன்று காலை ராமேஸ்வரத்திலிருந்து கிளம்பியது. ராமநாதபுரம் அருகே உள்ள கிழக்குக் கடற்கரைச் சாலை வழியாக கீழக்கரை மற்றும் ஏர்வாடி ஆகிய ஊர்களின் வழியாகச் செல்ல ரதயாத்திரைக் குழுவினர் திட்டமிட்டிருந்தனர்.

கீழக்கரை மற்றும் ஏர்வாடி வழியாக ரதயாத்திரை சென்றால் பிரச்சனை ஏற்பட வாய்ப்புள்ளதாகக் கருதிய போலீஸார், ரதயாத்திரையை கீழக்கரை சாலையில் செல்ல அனுமதி அளிக்கவில்லை. இதனால் போலீஸாருக்கும் இந்து இயக்கங்களைச் சேர்ந்தவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால், சுமார் 10 நிமிடம் ரதயாத்திரை அப்பகுதியிலேயே நிறுத்தி வைக்கப்பட்டது. போலீஸார் தாங்கள் அனுமதித்த வழியில் மட்டுமே செல்ல வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தனர்.

இதனால் வேறு வழியில்லாமல், கிழக்குக் கடற்கரைச் சாலை வழியாக உத்தரகோசமங்கை சென்று, அங்கிருந்து இதம்பாடல் வழியாக தூத்துக்குடிக்கு ரதயாத்திரை புறப்பட்டுச்சென்றது. இந்தச் சம்பவத்தினால், ராமநாதபுரம் கிழக்குக் கடற்கரைச் சாலையில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

Leave A Reply

Your email address will not be published.