கொடியேற்றத்துடன் தொடங்கியது பங்குனி உத்திரப் பெருந்திருவிழா!

0 30

அரியலூர் மாவட்டம் ஆலந்துறையார் கோயிலில், பங்குனி உத்திரப் பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் வெகு விமரிசையாகத் துவங்கியது.

அரியலூர் மாவட்டம் திருமானூர் அருகே உள்ள கிழப்பழுவூரில் அமைந்துள்ளது, ஆலந்துறையார் (வடமூலநாதர்)அருந்தவநாயகி அம்பாள் திருக்கோயில். இத்தலத்தில், சிவபெருமானுக்கு சாம்பிராணித்தைலம் பூசப்படுகிறது. மூலவர் லிங்கம் மிகச்சிறியது என்பதால், அதை அடையாளம் காட்ட அதன்மீது ஒரு குவளை கவிழ்த்தப்பட்டிருக்கிறது. இந்தக் குவளைக்கே அபிஷேகம் நடக்கும். பரசுராமர் தன் தாய் ரேணுகா தேவியைக் கொன்ற பாவம் நீங்க வழிபட்ட தலமாக இது கருதப்படுகிறது. அவர் உருவாக்கிய குளம், ‘பரசுராம தீர்த்தம்’ எனப்படுகிறது.

சில சிவன் கோயில்களில் மூலவர் சந்நிதியின் நுழைவு வாயிலின் மேற்பகுதியில், கஜலட்சுமி சிற்பம் அமைந்திருக்கும். ஆனால், இத்தலத்தில் பரசுராமர் சயனத்தில் இருப்பதைக் காணலாம். விநாயகர் நடனம் ஆடும் கோலமும், சண்டிகேஸ்வரரின் பஞ்சலோகச் சிலையும் உள்ளது.வேறு எந்தத் தலங்களிலும் இல்லாத சிறப்புடன் இக்கோயில் அமைந்துள்ளது. அதேபோல, பங்குனி மாதம் 18ல், சூரியன் தன் கதிர்களால் இத்தல இறைவனை வழிபாடுசெய்கிறான். திருஞான சம்பந்தரின் தேவாரப்பாடல் பெற்ற தலம். வள்ளலார் விண்ணப்பக்கவி வெண்பாவில் ‘நற்கருணை வாய்க்கும் பழுவூர் மரகதமே’ என்று சிவனையும் அருணகிரி நாதர் திருப்புகழில் இத்தல முருகனையும் புகழ்ந்து பாடியுள்ளனர்

இக்கோயிலில் நடைபெறும் முக்கிய திருவிழாக்களில், பங்குனி உத்திரப் பெருந்திருவிழாவும் ஒன்று. இந்த ஆண்டு,பங்குனித் திருவிழா நேற்று காலை (22-3-18) கொடி ஏற்றத்துடன் துவங்கியது. அதிகாலை 5 மணியளவில் நடைதிறக்கப்பட்டது. தொடர்ந்து, ஆலந்துறையார் (வடமூலநாதர்) மற்றும் அருந்தவநாயகி அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பிறகு, மேளதாளம் முழங்க, கொடிமரத்தில் கொடிப்பட்டம் ஏற்றப்பட்டது. பிறகு, விசேஷ அலங்கார தீபாராதனையும் காண்பிக்கப்பட்டது. இன்று துவங்கிய இத்திருவிழா, வரும் 30-ம் தேதி வரை வெகுவிமரிசையாக நடைபெறும். இந்த நாள்களில் சிறப்பு அபிஷேகங்கள், சுவாமி ஆலந்துறையார், அருந்தவ நயாகி அம்பாள் பல வாகனங்களில் எழுந்து உலாவருதல் நிகழ்ச்சியும் நடைபெறும்.

Leave A Reply

Your email address will not be published.